கோயம்புத்தூர்;
தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைக்களுக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி ஜூலை 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் கோவையில் நடைபெற்றது. பேரவைக்கு மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இப்பேரவையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

எஸ்.ரமேஷ்

இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும் விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பல மாவட்டங்களில் ஊழியர்களை எவ்வித விளக்கமும் கோராமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை 56-ஐ கைவிட வேண்டும். வட்டாரத்திற்கு ஒரு இளநிலை பொறியாளரை நியமிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேற்கண்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களை தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. ஆனால், ஏற்றுக்கொண்ட கோரிக்கையை இதுவரை அரசாணை வெளியிடப்படாமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. ஆகவே, ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கான அரசாணை வெளியிடக்கோரி ஜூலை 3 முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மு.சுப்பிரமணியன்

புதிய நிர்வாகிகள் தேர்வு
இப்பேரவையில் சங்கத்தின் மாநிலத் தலைவராக மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளராக எஸ்.ரமேஷ், பொருளாளராக மா.விஜயபாஸ்கர் மற்றும் மாநில துணை நிர்வாகிகளாக யு.சுமதி, ந.திருவேரங்கன், புஷ்பநாதன், பழனியப்பன், காந்திமதிநாதன், சண்முக சுந்தரம் மற்றும் தணிக்கையாளர்களாக சார்லஸ் சசிக்குமார், ராஜசேகரன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.அன்பரசு பேரவையை நிறைவு செய்து உரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.முத்துராஜூ நன்றி கூறினார்.

பணிநிறைவு பாராட்டு விழா
முன்னதாக, பணிநிறைவு பெறும் மூத்த மாநில நிர்வாகிகளுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ந.திருவேரங்கன் வரவேற்றார். முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.வீரபாகு, பொதுச்செயலாளர் பெ.கிருஷ்ணசாமி, பொருளாளர் வி.நாகராஜன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மா.விஜயபாஸ்கர்

பணிநிறைவு பெறும் மூத்த மாநில நிர்வாகிகளின் சங்கப்பணிகள் குறித்து பாராட்டியும் வாழ்த்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் மு.அன்பரசு, முன்னாள் பொதுச்செயலாளர் சி.மயில்சாமி, முன்னாள் மாநிலப் பொருளாளர் தீ.ச.வி.மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். பெ.கிருஷ்ணசாமி ஏற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஆர்.முருகேசன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.