ராஞ்சி :
ஜார்கண்ட் மாநிலத்தில் வீதி நாடகம் நடத்திய ஐந்து இளம்சிறுமிகள் துப்பாக்கி முனையில் கூட்டுவன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கடத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜார்கண்ட் மாநிலச் செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜார்கண்ட் மாநிலம், குன்டி மாவட்டத்தில், அர்க்கி ஒன்றியத்தில் அரசு சாரா நிறுவனமொன்றைச் சேர்ந்த ஐந்து இளஞ்சிறுமிகள், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுதல் மற்றும் வேட்டையாடப்படுதலுக்கு எதிராக வீதி நாடகம் நடத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்கள். இதனால், ஆத்திரமடைந்த குண்டர்கள் துப்பாக்கி முனையில் அவர்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கியதுடன், அதனைக் காணொளி மூலம் பதிவும் செய்திருப்பதுடன், பின்னர் அவர்களுக்குச் சொந்தமான வாகனங்களிலேயே அவர்களைப் கடத்திக்கொண்டும் சென்றிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வானது மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலுமாக நிலைகுலைந்து போயிருப்பதையே காட்டுகிறது. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இக்குற்றங்களைப் புரிந்த கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.