ஈரோடு,
வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் ஊடுருவதை தடுக்க, கடம்பூர் மலைப்பகுதியில் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அகழி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் தாலுகா அருகே அமைந்துள்ள கடம்பூர், தாளவாடி, பர்கூர், ஆசனூர் போன்ற மலைப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வனத்தில் இருந்து நேரடியாக குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளை நோக்கி வனவிலங்குகள் வரும் நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக, புதனன்று கடம்பூர் பகுதியில் 3 யானைகள் சுமார் 15 அடி கிணற்றில் விழுந்தது, பின்னர் வனத்துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடம் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. மேலும், அடிக்கடி வனவிலங்குகளால் மனிதர்கள் தாக்கப்பட்டும் வருகிறார்கள். இந்நிலையில், வனத்துறை சார்பில் வனப்பகுதியின் எல்லை பகுதியில் அகழி வெட்டப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பணிகள் சுணக்கம் காரணமாக அகழி வெட்டும் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும்,மின்சாரவேலி அமைக்கும் பணிகளும் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக, வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதிகளில் இருந்து நேரடியாக அருகில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு தேடி வருகிறது.

இதனால் தோட்டங்களில் வெட்டப்பட்ட கிணறுகளிலும், குட்டைகளிலும் வனவிலங்குகள் சிக்கி இறக்க நேரிடுகிறது. எனவே, வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதிகளில் உள்ள வனத்தை ஒட்டிய கிராமங்களின் எல்லை பகுதியில் அகழி மற்றும் மின்சார வேலி அமைக்கும் பணியைவிரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.