ஐதராபாத்,
ஆந்திராவில் பொதுமக்களிடம் வாங்கிய லஞ்சப்பணத்தில் மின்வாரிய அதிகாரி ஒருவர் ரூ.100கோடி அளவில் சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆந்திர மின்வாரிய அதிகாரிக்கு ரூ.100கோடி சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் மின்சாரவாரியத்தில் மின்வாரிய அதிகாரியாக பணிபுரிபவர் எஸ். லஷ்மி ரெட்டி( 56). கடந்த 993-ம் ஆண்டு காவாலி துணை மின்நிலையத்தின் உதவியாளராக லட்சுமி ரெட்டி பணியில் சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு உதவி லைன்மேனாக பணிக்கு பதவி உயர்வு பெற்ற அவர் 1997-ம் ஆண்டு லைன்மேன் ஆனார்.

2014-ம் ஆண்டு முதல் போங்கலு மண்டலத்தின் முங்கமுரு கிராமத்தில் மின்வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து நெல்லூர் மற்றும் அவரது தந்தை மலகொண்டா ரெட்டி வீட்டிலும், அவரது நண்பர்கள் வீடுகளிலும், காவலி நகரில் அவரது வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் ரூ.100 கோடி அளவுக்கு, சொத்துக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 57.50 ஏக்கர் விவசாய நிலம், ஆறு ஆடம்பர வீடுகள், இரண்டு பிளாட்டுகள், ரூ. 9.95 லட்சம் வரையிலான வங்கியில் பண இருப்பு மற்றும் பல வாகனங்கள் அடங்கும்.

அவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் வாரியத்திற்கு சொந்தமான காப்பர் வயர்கள் மற்றும் சில பொருட்களை முறைகேடாக விற்றும் கிடைத்த பணத்தில் சொத்துகளை வாங்கியுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பெரும்பாலான சொத்துகள் அவரது மனைவி எஸ். சுபாஷினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: