புதுதில்லி, ஜூன் 22-

கடந்த மூன்றாண்டுகளில் உலகம் மத அடிப்படையிலான வேற்றுமைகளாலும், நாடுகளுக்குள்  மதவெறி, சாதிவெறி, இனவெறி, பிராந்தியவெறி, மொழி வெறி போன்ற பல்வேறு வெறித்தனங்கள் கிளப்பிவிடப்படுவதாலும் இவற்றின் காரணமாக  புலம்பெயர்ந்து வந்து இதரநாடுகளில் குடியேறியுள்ளவர்கள் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் வெஸ்டர்ன் யூனியன் உலக இளைஞர்கள் இடையே மேற்கொண்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இவ்வாறானா கருத்தையே இந்திய இளைஞர்களும் கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பணம் பரிவர்த்தனை செய்திடும் நிறுவனமான வெஸ்டர்ன் யூனியன் உலகில் 15 நாடுகளில் 20-36 வயதுக்கிடையிலான 844 இந்திய இளைஞர்கள் உட்பட உலக அளவில் பத்தாயிரம் இளைஞர்களிடையே ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அவர்கள் அளித்துள்ள விவரங்களை மேற்படி நிறுவனம் வியாழன் அன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“2015ஆம் ஆண்டில் இருந்ததைக்காட்டிலும் இப்போது உலகம் மிக மோசமான முறையில் பிளவுண்டிருக்கிறது என்று நம் நாட்டில் உள்ள இளைஞர்களில் 69 சதவீதத்தினர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்,  வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் இது மேலும் மோசமான முறையில்பிளவுபடும் என்றும் கூறுயிருக்கிறார்கள்.

1980க்கும் 1990க்கும் இடையே பிறந்த இளைஞர்கள் நாம் உலகக் குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கும், நாடுகளின் எல்லைகளைக் கடந்த சமூகங்களை உருவாக்குவதற்கும்   மத அடிப்படையிலான வேற்றுமைகளும், நாடுகளுக்குள் கிளப்பி விடப்படும்  மதவெறி, சாதிவெறி, இனவெறி, பிராந்தியவெறி, மொழி வெறி போன்ற பல்வேறு வெறித்தனங்களும் மாபெரும் அச்சுறுத்தல்களாக விளங்குவதாகவும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறவர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலைக்கத் தள்ளப்பட்டிருப்பதாகவும்  கருதுகிறார்கள்.

“ஒருவர் உலகக் குடிமகனாக உயர்ந்திடவும்,  சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை ஒழித்திடவும் வேண்டுமாயின், ஒவ்வொரு சமூகத்தினரிடமும் இருக்கின்ற வேற்றுமைகளை மதிப்பதற்கு அதிக அளவில் முன்னுரிமை அளித்திட வேண்டும். இத்துடன் புதிய கலாச்சாரப் பண்புகளைத் தழுவக்கூடிய திறமைகளைப் பெற வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு கலாச்சாரப் பண்புகளையும் மதித்திடவும், சமூகத்தில் பொறுப்புள்ள குடிமகனாக இயங்கிடவும் முடியும்,”  என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இத்தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்த தெற்காசியா மற்றும் இந்திய – சீனாவுக்கான  வெஸ்டர்ன் யூனியன் பிராந்திய துணைத் தலைவர் (திருமதி) சோஹினி ரஜோலா மேலும் கூறுகையில், உலக அளவில் அனைவரும் ஒருங்கிணைந்து சிறந்ததொரு உலகத்தை எதிர்காலத்தில் உருவாக்கிட வேண்டும் என்கிற விதத்தில் ஓர் ஆக்கபூர்வமான லட்சிய வேட்கையையே இந்திய இளைஞர்கள்  பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

சிறந்ததொரு உலகத்தை உருவாக்குவதற்குத் தாங்கள் பங்களிப்பினைச் செலுத்திட இளைஞர்கள் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இனவெறி, மதவெறி, சாதிவெறி, அயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழ்தல், பிற மதத்தினரை ஏற்றுக்கொள்ளக்கூடிய சகிப்புத்தன்மை இல்லாதிருத்தல், ஆண்-பெண் சமம் என்கிற மனப்பான்மை இல்லாதிருத்தல் ஆகிய அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்து, முன்னேற வேண்டுமானால் உலகில் நாடுகளுக்கிடையேயான எல்லைகளற்ற சுற்றுச்சூழல் அமைந்திட வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

“அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் ஒருவர் ஒருநாட்டில் வாழ்ந்து கொண்டு, இன்னொரு நாட்டிற்காக வேலை செய்வது என்பது மிகவும் எளிதாகும். இதற்கு அவர்களுக்குத் தேவை, பாலின சமத்துவத்துடன், மதம், கலாச்சாரம் அல்லது தேசிய இனம் ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த தடையரண்கள் எதுவும் இல்லாமல் இருந்திட வேண்டும்.”

இவ்வாறு பெரும்பான்மையான இந்திய இளைஞர்கள் கூறுகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: