திருப்பூர்,
எஜமான் வீட்டு நாயை போல கழகத்திற்கு நன்றி உடையவர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் என பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரியின் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், பல்லடம் புதிய கல்வி மாவட்ட துவக்க விழாவும் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில். மேடையில் இருந்த ஒவ்வொருவரையும் வெகுவாகப் பாராட்டிபேசினார். அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை பற்றிப் பேசியவர், “ ஒரு எஜமானருக்கு நாய் எப்படி நன்றியுள்ள பிராணியாக இருக்கிறதோ, அதுபோல கழகத்துக்கு உடுமலை ராதாகிருஷ்ணன் மிகவும் நன்றியுள்ளவராக இருந்ததால்தான் அவர் வீட்டுவசதித்துறையின் அமைச்சர் பதவியைப் பெற்றார். அந்தத் துறையில் மிகச் சிறப்பாக செயலாற்றியவர். இப்போது கால்நடை பராமரிப்புத் துறையிலும் வெகு சிறப்பாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் என்று புகழ்ந்தார். அப்போது அமைச்சரின் இந்தபுகழ்ச்சியை ரசிப்பதா? வேண்டாமா? என்பதுபோல மிக இறுக்கமான முகத்துடன் உடுமலை ராதாகிருஷ்ணன் மேடையில் இருந்தார். அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஒருவர், சக அமைச்சரை பிராணியோடு ஒப்பிட்டு பேசியது விழாவுக்கு வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சலசலப்பைஏற்படுத்தியது.

Leave a Reply

You must be logged in to post a comment.