கோவை,
தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் கோவை மாநகராட்சியின் முடிவை கைவிடக்கோரி மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கூட்டம் வெள்ளியன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் குடிநீரை விநியோகிப்பது மற்றும் பராமரிப்பது ஆகியவற்றை பிரான்ஸ் நிறுவனமான சூயிஸ் நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. தற்போது இதற்கான ஆரம்ப கட்ட வேலையை சூயிஸ் கார்ப்ரேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. உயிரினங்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை வணிகமயமாக்கும் முடிவை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. இந்நிலையில் தனியாரின் பராமரிப்பில் தண்ணீரை விடும் மாநகராட்சியின் இம்முடிவு கோவை மக்களை பெரும் துயரத்தில் தள்ளிவிடும்.

ஆகவே உடனடியாக கோவை மாநகராட்சி சூயிஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, தண்ணீரை வணிமயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், இதுகுறித்து முதற்கட்டமாக வரும் ஜூன் 28 ஆம் தேதியன்று கோவை மாநகராட்சி ஆணையரை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளிப்பது. இதனையடுத்து மக்களை திரட்டி வலுமிக்க போராட்டத்தை நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: