கோவை,
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கிரில் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால், ஜிஎஸ்டிவரியில் இருந்து விலக்களிக்குமாறு கிரில் குறுந்தொழில் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் உரிமையாளர் மத்திய சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ரவி வெள்ளியன்று கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியால் சிறு,குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்ஒருபகுதியாக, இரும்பு சட்டங்கள் மூலம் தயாரிக்கப்படும் கிரில் பாகங்கள் தயாரிக்கும் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கட்டிடத் தொழிலின் ஒரு அங்கமாக செயல்படும் இத்தொழில் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிற் கூடங்களும், 3 ஆயிரத்து 500 உதிரிபாகம்தொழிற்கூடங்களும் உள்ளன. இதில் சுமார் 5 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றன. ஜி.எஸ்.டிவரியால் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கந்துவட்டிக்கு பணம் வாங்கி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் நிலைக்கு தொழில் முனைவோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, ஜிஎஸ்டி வரியில் இருந்து இத்தொழிலுக்கு விலக்களித்திட வேண்டும்.அல்லது 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியிலிருந்துபழைய வரியான 5 சதவிகிதமாக வரியை குறைக்க வேண்டும். மேலும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க 400 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். சொத்து பிணை இல்லாமல் மானியத்துடன் வங்கிகள் கடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பில் இச்சங்கத்தின் செயலாளர் சின்னசாமி, பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர்கள் கார்த்திகேயன், மனோகரன் துணை செயலாளர்கள் பிரபு, அனீஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.