வாழ்வாதாரம் அழிப்பு, வளமான விவசாய நிலங்களும் சமூகமும் அழிப்பு – இவையெல்லாம் சரியான முறையில் பராமரிக்கப்படாத ஒரு விமானநிலையத்தை விரிவாக்குவதற்காகவா?

மானசா ராவ்

மே மாதத்தில் உச்சகட்ட கோடையில் ஒரு சூடான நாளில், சிறிதே வெளிச்சம் கொண்ட தனது இரண்டு அறை வீட்டிலிருக்கும் ஒரு கொட்டகையில் ஓடிக் கொண்டிருக்கும் விசைத்தறியை கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது பருத்த கைகள் அதில் அவ்வப்போது
மெலிதாக விலகும் பட்டு நூலை மெதுவாக எடுத்து விடுகிறது. விசைத்தறியின் கூர்மை மிக்க ஊசிகள் ஒவ்வொரு வரிசையாகத் தாண்டிச் சென்று சீரான வரிசையில் இருக்கும் நூலை விழுங்குகின்றன. மெதுவாக அந்தத் தறியின் மீது ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நூல்கண்டு மெல்லிய, சிவப்புப் பட்டுச் சேலையாக உருவாகிறது.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவைச் சேர்ந்த ராஜேந்திரன் சேலம் விமானநிலையம் இனியும் விரிவாக்கப்பட்டல் அனைத்தையும் இழக்கப் போகும் 500 நெசவாளர்களில் ஒருவர். விமானநிலையம் கமலாபுரம் கிராமத்தில் உள்ளது. அதை ஒட்டியிருக்கும் 570 ஏக்கர் வளமான விவசாய நிலத்தைத்தான் தற்போது மாநில அரசு கையகப்படுத்தும் திட்டத்தை வைத்துள்ளது.

அரசின் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படப் போகும் நான்கு கிராமங்களான சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பொட்டியாபுரம் கமலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது பிழைப்புக்காக அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர். நாளொரு மேனியாக அரசு விரிவாக்கத்துக்காக நோட்டீஸ் மேல் நோட்டீஸ் விட்டுக்கொண்டிருந்தாலும்,
கிராம மக்கள் தமது நிலத்தின் உரிமையை நிலைநாட்ட தினசரி சட்டபூர்வ, உணர்வுபூர்வ, உடல்ரீதியான அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு போராடி வருகின்றனர்.

மோதல்

தற்போது இருக்கும் “ஸ்டீல் சிட்டி’ விமானநிலையம் சரியான பராமரிப்பில்லாததால் மூடப்பட்டது. 1993இல் கட்டப்பட்டது முதல் 2018 வரையில் முழுதாக செயல்படக்கூடிய விமானநிலையம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாடின்றியே இருந்தது. தற்போதைய விமானநிலையத்திற்கான நிலம் தற்போது அதன் விரிவாக்கத்தை எதிர்த்துப்
போராடி வரும் மக்களின் தந்தையர், பாட்டனார்களிடமிருந்து பெறப்பட்டது.

1993இல் அது கட்டப்பட்டபோது, ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடையில் மூன்றே மாதங்கள் செயல்பட்ட விமானநிலையம் மூடப்பட்டது. சென்னைக்குச் செல்லும் தனியார் விமானம் கோயம்புத்தூர் வழியாக இரண்டரை மணிநேரம் சென்றபோது, காலையில் கிளம்பும் ரயில் ஐந்தே மணி நேரத்தில் அவர்களைச் சென்னையில் இறக்கி விட்டதால் உள்ளூர்வாசிகள் அதன்மீது அதிருப்தி அடைந்தனர். அதன் கட்டணம் விமானக்கட்டணமான ரூ.1350 விட மிகவும் குறைவு.

முப்பது ஆண்டுகளுக்கு மேல் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்த சுப்ரமணி, தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் இருக்கும் மணமிக்க எலுமிச்சை மரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் இராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவரது குடும்பம் அவர் தற்போதைய சேலம் விமானநிலையம் அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் அவரது நிலத்தின் உரிமையை விற்று விட்டது.

1989 லீஸ் ஆவணங்கள் நிலத்தின் மதிப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. தனது குடும்பத் தொழிலான விவசாயத்தைத் தொடரும் எண்ணத்துடன் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சுப்ரமணி இப்போது 30 ஆண்டுகளுக்கு முன் நடந்ததே மீண்டும் நடந்து
விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்.

தனது நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்து கொண்டே சுப்ரமணி தன் வீட்டிலிருந்து கல்லெறியும் தூரத்தில் இருக்கும் விமானநிலையத்தைக் காட்டுகிறார். பழைய விமானநிலையத்தில் நான் ஏற்கனவே ஆறு ஏக்கர் நிலத்தை இழந்து விட்டேன். அதை அவர்கள் விமானநிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்காக குவார்டர்ஸ் கட்டுவதற்காக வாங்கிக் கொண்டு விட்டார்கள். அப்போது எங்களுக்கு அதன் மதிப்பு தெரியாது. அரசாங்கத்துக்கு தருவதற்கு மறுக்க முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கல்வி கற்றவர்களில்லை. எதாவது பிரச்சனை என்றால் நாங்கள் அமைதியாகச் சென்று விடுவோம். இப்போதோ என்னிடம் வெறும் இரண்டு ஏக்கர்கள்தான் மீதமுள்ளது. அதுவும் போய்விட்டால், எனக்கு எதுவும் மீதமிருக்காது” என்கிறார் அவர்.

சற்றே நடந்து போனால்- மொத்த முரணாக – உழவு செய்யப்பட்டு, செழிப்பான விவசாய நிலங்கள் 136 ஏக்கர் சேலம் விமானநிலையத்துக்கு எதிரில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கிறது. விமானநிலையம் செல்லும் பாதை அங்கு மோதல் இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. அவ்வப்போது விரட்டி விட்ப்படும் கால்நடைகளைத் தவிர, விமானநிலையத்தில் நுழைந்து வெளியேறும் ஒவ்வொருவரும் “விமானநிலையத்தை விரிவாக்க விவசாய நிலத்தை அழிப்பது தேவைதானா?” என்ற நியான் விளக்குச் செய்தியைப் பார்த்து விட்டுத்தான் வெளியேற முடியும்.

சேலம் விமானநிலையத்துக்கு வெளியே கண்டன முழக்கங்கள்

ஏர்டெக்கான் தனது சேவையைத் தொடங்க வேண்டுமென்றால் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் ரூ.90 லட்சத்தை டெபாசிட்டாகக் கட்ட வேண்டும் அல்லது 50 சதம் இடங்களை ரிசர்வ் செய்ய வேண்டுமென்று 2006இல் நிபந்தனை விதித்தது. 2007இல் அந்த விமானத்தை விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வாங்கி விட்டது. இரண்டரை வருடத்தில் சேலத்திலிருந்து சென்னைக்கு ஒருமணி நேரம் பயணம் செய்த ஒரே சேவை ஆகஸ்ட் 2011உடன் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இந்த வர்த்தக சேவைக்கு சேலம் மக்களிடம் மிகவும் குறைவான ஆதரவே கிடைத்ததால், விமான்நிலையம் விமானப் பயிற்சிக்களமாகவும், எப்போதாவது வரும் தனியார் விமானத்துக்கும் இடமளிப்பதாக மாறிவிட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுப்பிக்கப்பட்ட விமானநிலையத்தைத் திறந்து வைத்தார். இப்போது விமானநிலையத்துக்கு சென்னையிலிருந்து ஒரு விமானம் ஒரே ஒருமுறை சென்று வருகிறது.

சேலம் விமானநிலையத்தை பெரும் படாடோபத்துடன் திறக்க ஏற்பாடு செய்யும்போது மாவட்ட ஆட்சியர் ரோகிணி பாஜிபாகரே உரிய இழப்பீடு வாங்கித் தருவதாக கிராமமக்களுக்கு உறுதியளித்தார். விவசாயிகளுக்கு உச்சபட்ச இழப்பீடு கொடுக்க முதலமைச்சர் தமக்கு உத்தரவிட்டிருப்பதாக வெளியே கூடியிருந்த ஊடகங்களிடம் அவர் கூறினார். அதன்படி, உச்சபட்ச இழப்பீட்டை அளிக்க நாங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதைப்பற்றி விவசாயிகள் அச்சம் கொள்ளவே தேவையில்லை, அவர்களுக்கு முடிந்த அளவு உச்சபட்ச இழப்பீட்டை அளிப்போம்”

ஆனால் மோசமாகப் பராமரிக்கப்படும் ஒரு விமானநிலையத்தை விரிவாக்க வேண்டிய அவசியம்தான் என்ன? அதைவிடப் புதிரான கேள்வி, ஏன் விவசாய நிலங்களை அழித்து அதைச் செய்ய வேண்டும்?

இந்தப் புதிய விரிவாக்கத் திட்டமானது மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிதியளிக்கும் உடான் திட்டத்தின்கீழ் வருகிறது. அதன் நோக்கம் ஒவ்வொரு குடிமகனையும் பறக்க அனுமதிப்பது. இத்திட்டத்துக்கு அரசு ரூ.4500 கோடியை இறக்கி விட்டுள்ளது. மத்திய அரசு குறைந்த வாட் வரி, சேவை வரி, வளைந்து கொடுக்கக்கூடிய கோட் பகிர்வு ஆகியவற்றை அளிக்க, மாநில அரசு விமான எரிபொருள் விலை குறைப்பு, பாதுகாப்பு, தீயணைப்பு, மின்சாரம், தண்ணீர், நிலம் ஆகியவற்றை கவனித்துக் கொள்ளும். அரசு இதன்மூலம்  பிரதேசங்களுக்கிடையேயான இணைப்பை அதிகரிக்கவும், உட்கட்டுமானத்தையும், வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் முடியும் என்று நம்புகிறது.

தமிழ்நாடு பாதுகாப்பு காரிடாரில் சேலம், கோயம்புத்தூர், ஹோசூர், சென்னை ஆகியவை உள்ளடங்கியவை என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். அதற்காக டி.என்.எம். உருவாக்கியுள்ள வரைவுத் திட்டத்தில் ரப்பர் பொருட்கள், ஹெலிகாப்டர் உற்பத்தி, பராமரிப்பு, ரிப்பேர், சீர்செய்தல் ஆகிய பணிகளுக்காக சேலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனுடன், சிறு விமான உற்பத்தி, ஆளில்லா குட்டி விமான சேவை, பழுது நீக்குதல், பராசூட்டுகள், துணை இராணுவ கருவிகள் உற்பத்திக்கான கேந்திரமாகவும் சேலம் செயல்படும். ஹாங்கர், கார்கோ சேவைகளும் இந்த விமானநிலையத்தை இரவில் தரையிறங்குவதற்கு தோதான இடமாக ஆக்கும்.

சேலத்தில் ஒரு விமானநிலையம் நிறுவுவதற்கான முன்முயற்சி எடுத்த தொழிலதிபர் மாரியப்பன் டி.என்.எம்.மிடம் பேசுகையில், “விரிவாக்கத்துக்காக ஏற்கனவே 567 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அரசிதழில் பதிப்பிக்கப்பட்டது. அதன் சந்தை மதிப்பை விட மூன்று, நான்கு மடங்கு அதிக விலை கொடுக்க அரசு தயாராக உள்ளது. கொஞ்சம் போராட்டங்கள் நடக்கின்றன. தொடக்க கட்ட பிரச்சனை இருக்கிறது. ஆனால் அரசாங்கம் பாதுகாப்புக் கேந்திரத்தை நிறுவத் தேவையான இடத்தைக் கையகப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

ராஜேந்திரன் தனது பணியில்

தனது கொட்டகையில் ராஜேந்திரன் உணர்ச்சிவயப்பட்டுள்ளார். “எனக்கு என் வர்த்தகத்தைக் கட்ட 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. என்னைப் போல் 500 குடும்பங்கள் உள்ளன. நான் எனது இந்த வீட்டை என் நிலத்திலேயே கட்டியுள்ளேன். நான் காலையில் தறியில் வேலை செய்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்து வேலை செய்வேன். நான் தறிகளிலும், நிலத்திலும் 25 ஆண்டுகள் வேலை செய்ததால் என்னால் குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்ப முடிகிறது. என்னை இங்கிருந்து வெளியேற்றினால், எல்லாம் முடிந்து விடும்” என்கிறார் அவர்.

அவர் மேலும், “என்னுடைய இயந்திரத்துக்காக நான் அடகுக் கடைக்காரர்களிடம் நிறையப் பணம் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இந்த வீட்டையும், இயந்திரத்தையும் தவிர வேறு எதுவுமில்லை. நான் இயந்திரத்தை வாங்குவதற்காக வீட்டை அடகுக்கடைக்காரர்களிடம் அடகுவைத்துள்ளேன். என்னால் எங்கும் செல்லவோ வேறு வேலை பார்க்கவோ முடியாது. என் குடும்பம் இதை பல தலைமுறைகளாகச் செய்து வருகிறது. என் கைகளுக்கு வேறு வேலை தெரியாது” என்றார்.

போராடும் மற்ற கிராமத்தினரைப் போலவே, தன் இழப்புக்கு விலை வைப்பதை ராஜேந்திரனும் மறுக்கிறார். தறியில் ஏற்றப்பட்டிருக்கும் வெண்ணிற நூல்களைக் காட்டி அவர் சொல்கிறார், “நூல் மட்டுமே எனக்கு ரூ.10,000 ஆகிறது. என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால், ஒவ்வொரு பகுதியையும் பிரிக்க வேண்டும். அதை நீங்கள் செய்தால், அது உழைப்புக்கான கூலியை அதிகரிக்கும். நான் இரவும் பகலும் கடும் உழைப்பைச் செலுத்தி என் குழந்தைகளுக்காக சம்பாதிக்கிறேன். அதற்கு நான் விலை வைக்க முடியாது. நான் இங்கிருந்து வெளியேறி வேறு எங்கேனும் சென்று அங்கு பிழைக்கமுடியாவிட்டால், எங்களது வாழ்க்கை ஸ்தம்பித்துவிடும்: எங்களது நிலம், எங்களது வாழ்வாதாரம், அவர்களது கல்வி, அனைத்தும்.”

எங்கள் சாம்பல் மீது’

கிராமத்தின் மறுபுறத்தில், 65 வயதான முனியம்மா உருக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க அரசமரத்தின் கீழ் தஞ்சமடைந்துள்ளார். தமது கவலைகளை உள்ளாட்சி அதிகாரிகளிடம் எப்படிச் சொல்வது என்று அவரும் வேறு சில கிராமத்தினரும் விவாதிக்கின்றனர். போன கூட்டத்துக்குப் பிறகான முன்னேற்றங்களை சுற்றியுள்ளவர்கள் பேசும்போது, முனியம்மா விரக்தியடைந்துள்ளார். தமது கடும் துன்பத்தை அவர் ஒன்று மாற்றி ஒன்று எனப் பல நிருபர்களிடம் கூறினாலும், அதிகாரிகளிடமிருந்து எந்த சரியான பதிலும் இல்லை.

”நாங்கள் எங்களை எரித்துக் கொள்வோம். அவர்கள் எங்களது நிலங்களை எங்கள் சாம்பல் மீதிருந்து எடுத்துக் கொள்ளட்டும். நாங்கள் எங்கே போவோம்? எங்கள் ஒவ்வொருவருக்கும் 1 அல்லது 2 ஏக்கர்கள்தான் உள்ளன. அது இல்லாமல், நாங்கள் யார்?” என்று கேட்கிறார் அவர்.

முனியம்மா தனது மொத்த வாழ்க்கையையும் கமலாபுரத்தில்தான் கழித்துள்ளார். போராட்டத்தைச் சுற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் அவளது கைகளும், கால்களும் நிலத்திலும், வீட்டிலும் வேலை செய்ததால் வலியெடுக்க, அவள் பெருமூச்செறிகிறாள்.
”இந்த நிலம் எங்களது அடையாளம். எங்களது காடுகளை எடுத்துக் கொண்டால், நாங்கள் எங்கே போவோம்? என் குடும்பத்தில் 15 பேர் இருக்கிறார்கள். இது எங்கள் பூர்வீக நிலம். இந்த நிலத்தை அவர்கள் எடுத்தே தீருவோம் என்று நிர்ப்பந்தித்தால், நாங்கள் செய்யக் கூடியதெல்லாம் தற்கொலை செய்து கொள்வதுதான். நாங்கள் இங்கிருந்து வெளியேற மாட்டோம். நாங்கள் அதிகாரம் கொடுக்கும் அரசு எங்களுக்கு உதவாது. இந்த விமானநிலையம் வந்த பிறகு கொஞ்சம்தான் மீதம் இருக்கிறது. நாங்கள் இதுபோல் பேட்டிகள் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் எங்கே போய்ப் பிச்சையெடுப்போம்? நாங்கள் மூன்று ஆண்டுகளாக எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களது கால்கள் வலிக்கின்றன” என்று தனது கண்களில் ஆத்திரக் கண்ணீர் பொங்க அவர் கூறுகிறார்.

அருகில் இருக்கும் பலரைப் போலவே முனியம்மாவும் அண்டை நிலங்களிலும், உறவினர்களின் நிலங்களிலும் தினக்கூலியாக வேலை செய்கிறார். வயதாகி வரும் அவருக்கு அரசாங்கம் நிலத்தை எடுத்து விடும் என்ற அச்சம் மேலாக இருப்பதால், இரவில் அவரால் தூங்க முடியவில்லை. ”தினமும் உழைத்தால்தான் நான் வாழ்க்கை நடத்த முடியும். நாங்கள்
நின்று கொண்டிருக்கும் நிலத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டால், நாங்கள் எங்கே போவோம்? தினமும் நூறு ரூபாயை வைத்து நாங்கள் ஓட்டுகிறோம். இடம் இடமாகப் பறப்பதற்கு நாங்கள் என்ன பறவைகளா? அவர்கள் (அரசாங்கம்) வந்து எங்களுடன் எதையும் விவாதிப்பதில்லை. ஏன் அரசாங்கம் ஏழைகளின் விவசாய நிலத்தை மட்டும் எடுத்துக் கொள்ள
வேண்டும்?” என்று அவர் கேட்கிறார்.

ஒரு சமூகத்தின் மரணம்

ராஜேந்திரனின் மருமகன் ஜகதீசன் போராட்டங்களை நடத்துவதில் முன்னணியில் இருக்கிறார். அதிகாரவர்க்கத்தின் வார்த்தை ஜாலங்களை சககிராமத்தவர்களுக்கு விளக்கும் பணியை இந்த இளைஞர் எடுத்துக் கொண்டுள்ளார். தன் பையில் பல ஆவணங்களையும், பத்திரிகைச் செய்திகளையும் வைத்துக் கொண்டு சுற்றி வரும் அவர் அடுத்த எதிர்ப்பு குறித்து யார் கேள்வி கேட்டாலும் மகிழ்ச்சியுடன் பதிலளிக்கிறார். தனது மாமன் விசைத்தறி முன்பு கண்ணீர் விடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஜெகதீசன், தனிப்பட்ட வாழ்வாதாரங்கள் அழிவதைத் தவிர, நிலத்தை எடுத்துக் கொள்வது என்பது பல பத்தாண்டுகளாக ஒரு குடும்பமாக வசிக்கும் கிராமத்து சமூகத்தை அழிப்பது என்பதும் ஆகும் என்று கூறுகிறார்.

அவர்களை திருமண பந்தங்களும், நிதி உதவிகளும் இணைக்கின்றன, ஒரு சமூக உணர்வாகக் கட்டமைக்கின்றன.

ஜெகதீசன் கூறுகிறார், “இந்தப் பகுதியில் இருக்கும் அனைவரும் பல
தலைமுறைகளாக இணைந்திருக்கின்றனர். எனக்கு பணமுடை ஏற்பட்டால் அருகில் இருப்பவரை நம்பலாம். அவர் என் சொந்த மாமனாகவோ, மச்சானாகவோ இருப்பார். நகரத்தில் இருப்பவர்களைப் போல் நாங்கள் உயர்ந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் வங்கிகளை நம்பியிருக்க முடியாது. நான் நிலைக்கும் வரை என் மாமாவுடன் வேலை செய்வேன். அரசாங்கம் எங்கள் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை; நாங்களே எங்களது உறவுகளை வளர்த்துக் கொண்டு ஒரு சிறு சமூகமாக இணைத்துக் கொண்டுள்ளோம்.
அநேகமாக எங்கள் கிராமத்தில் ஒவ்வொருவரும் தம் சொந்தக் காலில் நிற்க
முடியும்.”

”இந்த 5கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் சுமார் இரண்டு லட்சம் தறிகள் உள்ளன. சென்னை சில்க்குக்குப் போகும் துணிகள் பெரும்பாலும் ஓமலூரிலிருந்துதான் செல்கின்றன. அனைத்தையும் நாங்கள் அப்புறப்படுத்த வேண்டுமென்றால் ஏராளமான பணம் தேவை. கச்சாப் பொருட்களைக் கொண்டு வருவது முதல் உற்பத்தியான பொருட்களை விற்பது வரை
கடினமாகி விடும். தனிப்பட்ட முறையில் மதிப்பிட முடியாத அளவு நஷ்டம் இருக்கும். அதற்கு இழப்பீடு கொடுக்க முடியாது. நாங்கள் செய்யும் வர்த்தகத்துக்கு, பருவநிலை முக்கியமானது. இதே போன்ற தரமான தறியை வேறு எங்கும் வாங்க முடியாது” என்று அவர் விளக்குகிறார்.

பழைய விமானநிலையத்திற்கு எதிரில் மணலை நிலத்திலிருந்து வேகமாக எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்திற்கு எதிரில் பாக்யராஜ் நிற்கிறார். அவர் அவரை தூரத்தில் நின்று கைநீட்டிப் பேசிக்கொண்டிருக்கும் கிராமத்தினரை பதற்றத்துடன் பார்க்கிறார். இரண்டு சிறு பெண்குழந்தைகளும், ஒரு பையனையும், வயதான மகனும் கொண்ட அவர் அவர்களது நிலத்தை எப்போது வேண்டுமானாலும் அரசு எடுத்துக் கொண்டுவிடும் என்ற அச்சத்தினிடையில் தனது நிலத்தை விற்கத் தயாராக இருப்பதை ஏற்கத் தயாராக இல்லை.

சுட்டெரிக்கும் கோடையில் நிலத்தில் மின்னும் கோதுமை, மஞ்சள், நாவல்பழம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி அவர் கூறுகிறார், “நான் உண்மையிலேயே பயந்து போயிருக்கிறேன். நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எந்த சமயத்திலும் அரசாங்கம் என்ன செய்யும் என்பது எங்களுக்குத் தெரியாது. நான் வெளியேறினால், எல்லாம் போய்விடும். ஒரு செண்ட் நிலத்துக்கு சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய். இந்தப் பணத்துக்கு வேறு எங்கேயும் நிலம் வாங்க முடியாது. அரசாங்க மதிப்பீட்டின்படி அவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து மோசமான தரமுடைய நிலத்தைக் கூட வாங்க முடியாது. அவர்கள் ஒரு செண்டுக்கு ரூ.3000- ரூ.4000 கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இந்த நிலத்தை அழித்தால், அது என்னைக் கொல்வதற்கு ஒப்பானது.”

58 வயதான கரும்பு விவசாயி ஜெகதீசன் ஏப்ரல் மாதம் மாரடைப்பில் இறந்து போனார். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் அச்சத்தால் அவர் கடும் மனவுளைச்சல் ஏற்பட்டு இறந்து போனதாக கிராமத்தினர் நம்புகின்றனர்.

”அவர்கள் எங்களது நிலத்தை எடுத்துக் கொண்டால், எங்களுக்கும் அவரது நிலைதான் ஏற்படும். கடந்த மாதம், என்னுடைய ஐந்து தென்னை மரங்கள் விமானத்துக்கு இடைஞ்சலாக இருந்ததால், அவற்றை வெட்டிவிட்டார்கள். அதற்கு எனக்கு 20,000 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள், ஆனால் கொடுக்கவில்லை. ஒரு பக்கம் விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கள் முதுகில் குத்துகிறார்கள்” என்கிறார் பாக்யராஜ்.

வண்ணமயமான மாரியம்மன் கோயிலை நாம் நெருங்கும்போது,
மேளச்சத்தமும், மணிச்சத்தமும் நம்மை வரவேற்கின்றன. பிரார்த்தனை
நடந்து கொண்டிருக்கிறது. தலைமைப்பூசாரி குப்புசாமி நம்மிடம்
பேசுவதற்காக வருகிறார். இது சுற்றுப்புற ஏழு கிராமங்களுக்குக் குலதெய்வக்
கோயில். ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வழிபடுகின்றனர். விழா
நேரமாக இருந்தால் தினமும் சுமார் 5000 பேர் வருவார்கள். அவர்கள்
எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள். இது அப்படியே பெயர்த்து
எடுத்து எறிந்து விடக்கூடியது அல்ல” என்கிறார் அவர்.

கோயிலுக்கு வழிபடுவதற்காகத் தனது மனைவியுடன் வந்திருக்கும் காவேரி அச்சமடைந்து போயிருக்கிறார். ஏனென்றால் அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் கிராமத்தினரை அப்புறப் படுத்தப் போவதாகக் கேள்விப்பட்டுள்ளார் அவர். நிலம் இராணுவத்திற்காக எடுத்துக்கொள்ளப்படுவதாக அவர் நம்புகிறார்.” அவர் சொல்கிறார்,  “அடிக்கடி கோட்ட அலுவலர் வந்து எங்களைக்காலி செய்ய நோட்டிஸ் கொடுப்பதாகச் சொல்கிறார். நாங்கள் எங்கே போவோம்
என்று கேட்டால் அவரிடம் பதிலில்லை. இராணுவம் நிலத்தைக் காலி செய்யச் சொல்லி எங்களை அச்சுறுத்தும் என்று கூறுகிறார்கள். அந்த பயத்தில் சிலர் நிலத்தை விற்க முயல்கிறார்கள். அவர்கள் அதை முன்னெச்சரிக்கையாகச் செய்கிறார்கள், ஆனாலும் அவர்களுக்குக் குறைந்த விலைதான் கிடைக்கிறது. நாங்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முயல்கிறோம். அவர்களிடம் அமைதியாக விளக்கிச் சொல்லத்தான் வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.”

சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மானுஷ் வயற்காடுகளைத் தாண்டி தனக்காகக் காத்திருக்கும் கிராமத்தினரை வந்து சந்திக்கிறார். “இவையெல்லாம் முதன்மை விவசாய நிலங்கள். இது வாழும், இயங்கும் பொருளாதாரம். இவர்களது நிலங்களை எடுப்பது
நியாயம்தானா?” என்று அவர் கேட்கிறார்.

எனினும் அன்று அவரது முதல் பணியாக நிலக் கையகப்படுத்தல், நிவாரணம் குறித்து கிராமத்தினரிடையே நிலவும் அச்சத்தைப் போக்குவதாகவும், வதந்திகளை அகற்றுவதாகவும் இருக்கிறது.

தம்மைச் சுற்றிக் கூடும் மக்களிடம் அவர் விளக்குகிறார், “அவர்கள் (அரசாங்கம்) நமது நிலத்தின் விலையைத் தீர்மானிக்கிறார்கள். நிலத்தில் அதிகக் கற்கள் இருப்பதால் அதன் மதிப்பு குறைவு என்கிறார்கள். அதே சமயத்தில் நிலத்தில் அதிகம் மண் இருப்பதால், அதன் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். நிலத்தை விற்பவர் நல்ல பயிர்களை இட்டிருப்பதால், அவர்கள் குறைந்த விலையை முன்மொழிவதாகச் சொல்கிறார்கள். இதே போல், அவர்கள் 25 விஷயங்களைச் சொல்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன் இது தெரிந்திருந்தால், இதை நடக்க விட்டிருப்பீர்களா? நீங்கள் அதே தவறை மறுபடியும் செய்கிறீர்கள். யாரும் உங்கள் கணக்கில் அப்படிப் பணத்தைப் போடப் போவதில்லை.”

அவர் மேலும் சொல்கிறார், “வதந்திகளை நம்பாதீர்கள். முதலில், நீங்கள் வெல்ல முடியுமென்று நீங்கள் நம்ப வேண்டும். இந்தச் செய்தி எல்லா இடத்துக்கும் வந்திருப்பதால், பலர் வருகிறார்கள். ஆனால் இது வேலை செய்யவில்லை. நாம் இன்னொரு கூட்டத்தை நடத்தி, என்ன நடக்கிறது என்பதையும், நாம் அதை எதிர்த்து எப்படிப் போராடுகிறோம் என்பதையும் விளக்க வேண்டும்.”

”அரசாங்கம் எடுத்துக் கொண்டு விடும் என்ற அச்சத்தில் அவர்கள் நிலத்தை விற்பதை முதலில் தடுக்க வேண்டும். அதுதான் முதல் கடமை” என்று அவர்களிடம் அவர் விளக்குகிறார். செயல்பாட்டாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்த்து வருகிறார்கள். கிராமத்தினரின் துன்பங்களை வெளிச்சமிட்டுக் காட்டவும், விஷயத்தை வெளிக்கொணரவும் அவர்கள் அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் இப்பகுதிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். எனவே

அம்மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஒருவர் மாற்றி ஒரு அரசியல்வாதி அப்பகுதிக்கு வந்திருக்கிறார். இன்று இப்பகுதியில் முன்பு ஜமீந்தார்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரமங்கலம் இங்கு வந்துள்ளார். சிறு குழுவாக இருக்கும் ஊடகத்துறையினரிடம் அவர் பேசுகையில், “விமானநிலையத்தை வேறு எங்காவது கொண்டு போனால் அது சரியாக இருக்கும். உடான் மானியத் திட்டத்துக்காக அவர்கள் இதை இங்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் இந்தப் பகுதிக்கு அது பொருத்தமானதல்ல. 570 ஏக்கர் விவசாய நிலத்தை எடுப்பது தவறானது. திட்ட வரைபடம் எங்கே? அவர்கள் இத்திட்டத்தின் பலன்களை கிராம சபையில் விவாதிக்கக் கூடாது?”

மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் இது எடுத்துச் சொல்லப்பட்டுள்ளதா என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது, அவர் சொல்கிறார், “நான் நேர்மையாக உங்களிடம் சொல்கிறேன். இங்குள்ள நிலை பற்றி சென்னையில் கூட எடுத்துச் சொல்லப்பட்டுள்ளதா என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் நான் என் மாநிலத் தலைவரிடம் இங்கு நடப்பதை எடுத்துச் சொல்வேன். அவர்கள் பல தரப்பு மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.

மக்கள் இங்கு ஒரு விமானநிலையம் அமைவதில் ஆர்வமில்லை என்று தற்போது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள். அதன்படி செயல்பட வேண்டிய தருணம் இது.” 2013இல் ஐ.மு.கூ நிறைவேற்றிய நிலக் கையகப்படுத்தல் சட்டம் குறித்து அவர் பேசுகிறார். “பாஜகவின் மத்திய அவசரச்சட்டம் தோல்வியடைந்ததும், அவர்களுக்கு நீர்த்துப் போன ஒரு நிலக் கையகப்படுத்தல் சட்டத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் கையெழுத்து வாங்குவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. இது அதன் விளைவு. எங்கள் அரசு சட்டம் நிறைவேற்றுவதற்கு முன் நடந்தது இப்போது மீண்டும் நடக்கிறது. பாராளுமன்றம் மீண்டும் கூடியதும், நாங்கள் இதனைப் பாராளுமன்றத்தில் எழுப்ப திரு.காந்தியிடம் கோருவோம்.”

ஒவ்வொரு தலைவராக அங்கு வந்து உதவுவதாக உறுதிமொழி கொடுத்துச் செல்ல, அவர்கள் யாராவது எதாவது செய்வார்கள் என்று ஓமலூர் மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் தற்போதைக்கு, திட்டமிடுவதற்கு அவர்களுக்கு ஒரு கூட்டம் நடக்கவுள்ளது, மற்றவை காத்திருக்கலாம்.

தமிழில்: கி.ரமேஷ்

நன்றி  TheNEWSMinute

Leave A Reply

%d bloggers like this: