மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தின் 2 பகுதிகள் மற்றும் பொன்னூர் கிராமத்தில் 2 இடங்களிலும் ஓ.என்.ஜி.சி. றுவனம் எண்ணெய் எரிவாயுவை குழாய்கள் மூலம் குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகின்றனர். நான்கு இடத்தில் இருந்து வரும் குழாய்களும் பாண்டூர் பகுதியில் ஒன்றிணைந்து அங்கிருந்து குத்தாலம் ஓஎன்ஜிசி ஜிசிஎஸ் மையத்தில் சேமிக்கப்படுகிறது.

விளைநிலங்களில் 3 அடி ஆழத்திற்கு குழாய்கள் பதித்துள்ளனர். பாண்டூர் – பொன்னூர் சாலையில் ராஜதுரை என்பவர் வயலில் தற்போது குறுவை நெல் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில், நடவு செய்யப்பட்ட வயலில் குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசியத் தொடங்கியுள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த விவசாயிகள் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்ததும் குழாய் மூலம் எண்ணெய் அனுப்பும் பணியை உடனடியாக நிறுத்தினர். எனினும் கச்சா எண்ணெய் வயலில் கசிந்ததால் நெற்பயிர்கள் கருகின.

இதையடுத்து குழாய் உடைந்து கசிவு ஏற்பட்ட இடத்தை சுற்றி 10 அடி அகலத்திற்கு தற்காலிகமாக பாத்திகட்டி மற்ற இடங்களுக்கு கச்சா எண்ணெய் பரவாமல் தடுத்து வைத்துள்ளனர். மதியம் ஏற்பட்ட எண்ணெய் கசிவு குறித்து தகவல் தெரிவித்தும் மாலை வரை எந்த அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கவில்லை. இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே போன்று குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனங்களால் விளைநிலங்கள் பாழாகி வருகிறது என்று எதிர்த்து போராடுபவர்கள் மீது அரசு ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது.

ஆனால், தரமான குழாய்களை கூட பதிக்காமல் விவசாயிகளை வஞ்சிக்கின்றனர். ஓஎன்ஜிசி எண்ணெய் எடுக்கும் பணியை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.