ஈரோடு,
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஈரோட்டில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இத்தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு, சம ஊதியம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்குவது என கடந்த பிப்ரவரி மாதம் மின்துறை அமைச்சர் முன்னிலையில் உடன்பாடு காணப்பட்ட ஒப்பந்தத்தை அமலாக்கிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு, சங்கத்தின் ஈரோடு கிளை தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். கிளை செயலாளர் ஜோதிமணி, பொருளாளர் கே.விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்ட தலைவர் ரகுராமன், சுந்தரராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு ஆகியோர் வாழ்த்திப்பேசினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திரளானோர்கள் பங்கேற்றனர். முடிவில், கே.ஆர்.சண்முகம் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.