கோவை,
மக்களுக்கு விரோதமான அரசின் திட்டங்களை எதிர்த்து போராடினாலும், பேசினாலும் சிறையில் அடைக்கும் தமிழக அரசின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்து கோவையில் வெள்ளியன்று வழக்கறிஞர்கள் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து தற்போதுவரை தூத்துக்குடி மாவட்ட மக்களை காவல்துறையினர் இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று கைது உள்ளிட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதன்ஒருபகுதியாக ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒருங்கிணைத்தார் என வழக்கறிஞர் வாஞ்சிநாதனை வியாழனன்று சென்னையில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து வெள்ளியன்று கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற வாயில் அருகே நடைபெற்ற போராட்டத்தில் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, வெண்மணி, பாலமுருகன், ஆறுச்சாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக, இப்போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறுகையில், மக்களுக்கு விரோதமான திட்டங்களை அரசு தொடர்ந்து அமலாக்கிக் கொண்டு வருகிறது. கோவையில்கூட தண்ணீர் விநியோகத்தை பிரான்சு நிறுவனத்திடம் அரசு தாரை வார்த்துள்ளது. இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து கேள்வி கேட்டாலும், போராட்டம் நடத்தினாலும் சிறையில் அடைக்கும் சர்வாதிகார நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபடுகிறது. இவ்வாறு ஜனநாயக நாட்டின் பேச்சுரிமை, போராட்ட உரிமை அனைத்தையும் எடப்பாடி பழனிச்சாமி அரசு பறித்துள்ளதாக குற்றம்சாட்டினர். மேலும், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: