ஸ்ரீநகர்:
ஜம்மு – காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் ஷூஜாத் புகாரி படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, முன்னணி நாளிதழ்கள் பல, தலையங்கத்திற்கான இடத்தை வெறுமையாக விட்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.ஜம்மு – காஷ்மீரிலிருந்து வெளிவரும் நாளிதழான ‘ரைஸிங் காஷ்மீர்’ இதழின் ஆசிரியர் ஷூஜாத் புகாரியும் (50), அவரது பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரும் கடந்த ஜூன் 14-ஆம் தேதி பத்திரிகை அலுவலக வாயிலிலேயே கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று கண்டனத்திற்கும் உள்ளானது.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரிலிருந்து வெளியாகும் பல்வேறு முன்னணி நாளிதழ்களும் பத்திரிகைகளும் புதன்கிழமையன்று தங்கள் பத்திரிகையில் தலையங்கத்துக்கான இடத்தை வெறுமையாக விட்டிருந்தன.

காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு எடுத்த முடிவின் அடிப்படையில், இந்த தலையங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. ‘பத்திரிகையின் குரலாக விளங்குவது தலையங்கம்தான்; அதனை வெறுமையாக விடுவதன் மூலம் எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்’ என்று கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: