===சி.ஆர்.செந்தில்வேல்===                                                                                                                                             காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் , காடுகள் அழிப்பு போன்ற சூழல் பிரச்சனைகளின் வரிசையில் இன்று பலராலும் பேசப்படும் மிக முக்கியமான பிரச்சனையாக மிகை மீன்பிடி கருதப்படுகிறது.

தொன்று தொட்டு நடைமுறையிலிருந்து வந்த மீன்பிடிக் கைத்தொழில் வர்த்தகமயப்பட்டு வந்ததனால் உருவாகிய விளைவே இந்த மிகை மீன் பிடியாகும்.
இதன் காரணமாக 2050 ஆம் ஆண்டளவில் உலகின் மீன் வளம் தீர்ந்துபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நீடித்த நிலையான மீன் உற்பத்தியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என மீனவர்கள் மற்றும் கடலியல் அறிவியலாளர்கள் மத்தியிலிருந்து கோரிக்கை முன்னுக்கு வந்தது. இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு 1988 ம் வருடம் கேரள அரசு முதல்முறையாக தங்களது மாநிலத்தில் 47 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அறிவித்தது. கேரளத்தை பின்பற்றி இதர கடலோர மாநிலங்களான கர்நாடகா 1989 ல், குஜரா‌த் 1998 ல், ஆந்திரப்பிரதேசம் 2000 ல், தமிழகம் 2001 ல் – என தங்களது மாநிலங்களில் மீன்பிடி தடைக்காலத்தை 45 நாட்களுக்கு குறைவில்லாமல் அறிவித்து கடைபிடித்து வந்தன.

மீன்பிடி தடைக்காலத்தை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் மாதங்களை தீர்மானித்து அமல்படுத்தி வந்தனர். ஒரே நாட்டில் பக்கத்து பக்கத்து மாநிலங்கள் வேறு வேறு மாதங்களில் தடைக்காலம் அறிவித்து அதை அமல்படுத்தும் போது வேறுபட்ட நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.

ஒரு மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்போது, தடைக் காலம் இல்லாத பக்கத்து மாநில மீனவர்கள் அந்த மீன்களைப் பிடித்துச் செல்லும் போக்கு ஏற்பட்டது.
இப்பிரச்சனையை சமாளித்திட இந்தியா முழுக்க ஒரே காலத்தில் மீன்பிடி தடைக்காலம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

61 நாள் தடைக்காலம்
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர்கள் டாக்டர். செய்தாராவ், டாக்டர். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உயர்மட்ட ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டு அக் கமிட்டி தனது பரிந்துரைகளை 2014 செப்டம்பரில் வழங்கியது.

அதன் முக்கிய பரிந்துரைகளில் ஒன்று, ஏற்கனவே வெவ்வேறு மாதங்களில் மாநில அரசுகள் அறிவித்து வந்த தடைக்காலத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரி காலத்தில், அதுவும் 45 நாட்கள் தடை என்பதை 61 நாட்களாக உயர்த்துவது என்று பரிந்துரை செய்ததுடன் அதற்கான மாதம் – தேதி வரை அக்குழுவே அறிவித்தது.

தமிழகம் துவங்கி மே.வங்கம் வரை கிழக்கு கடற்கரைப் பகுதியில் வருடந்தோரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14 வரையும், கேரளம் துவங்கி குஜராத் வரை உள்ள மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 1 ந் தேதி துவங்கி ஜூலை மாதம் 31 ந் தேதி வரை தடைக் காலத்தை அமல்படுத்துவது, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிழக்கு கடலான மன்னார் வளைகுடாவும், மேற்கு கடலான அரபிக்கடலும் உள்ளதால், இருவேறு கடல் பகுதியில் இருவேறு தடைக்காலத்தை அமல்படுத்துவது என பரிந்துரை செய்தது.

இதுவரை மீன்பிடி தடைக்காலத்தை அறிவிக்கும் உரிமை மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் இருந்ததை, மேற்கண்ட கமிட்டியின் பரிந்துரை மூலம், மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொண்டது. அத்துடன் இழுவலை படகுகள், பெரிய மீன்பிடி கப்பல்கள் என இதுவரை இருந்த தடையை தற்போது அனைத்து எந்திரம் பொருத்தப்பட்ட படகுகளுக்கும் என விரிவாக்கியுள்ளது.

தமிழக அரசு 2017 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக இக்கமிட்டி முடிவின் அடிப்படையில் தடைக் காலத்தை 61 நாளாக அமல்படுத்தி வருகிறது.

இதில் என்ன சிக்கல்?
மாநிலங்கள் வெவ்வேறு காலங்களில் தடைக்காலத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தும் போது ஒரு நடைமுறை சிக்கல் எழுந்தது. தமிழகத்தில் தடைக்காலம் அமலில் இருக்கும்போது, பக்கத்து மாநிலமான ஆந்திராவில் தடைக்காலம் இருக்காது. எனவே தமிழக கடல் பகுதியில் இனப்பெருக்கம் செய்த மீன்களை ஆந்திர மீனவர்கள் பிடித்துச் செல்வது , இதேபோன்று பக்கத்து மாநிலங்களில் உள்ள தடைக்காலம் இல்லாத ,மீனவர்கள் தடைக்காலம் அமலில் இருந்த மாநிலங்களில், மீன்களை பிடித்துச் செல்லும் போக்கு ஏற்பட்டது. எனவே ஒரே மாதிரியான தடைக்காலத்தை கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரை அனைத்து மாநிலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

தற்போது இரண்டே பருவகாலங்களில் இரண்டு விதமான தடைக்காலம் அமலில் உள்ளது.
ஆயினும் இந்தப் பிரச்சனைக்கு முற்றிலும் தீர்வு காண முடியவில்லை.
தற்போது கூட தமிழகத்தில் தடைக்காலம் அமலில் இருக்கும்போது,
மேற்கு கடற்கரை மாநில விசைபடகுகள் தமிழக கிழக்கு கடல் எல்லையில் இனப்பெருக்கம் செய்த மீன்களை பிடித்துச் செல்லும் போக்கு உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் இப் பரிந்துரையின் மற்றொரு அம்சமாக, இந்தியாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்போது இலங்கை, வங்கதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள கடல் மண்டல நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ், புருனே, கிழக்கு தைமூர் ஆகிய நாடுகளின் மீன்பிடி கப்பல்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நமது கடல் வளத்தை சூறையாடிச் செல்கிறார்கள். எனவே மத்திய அரசு இவற்றின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதுடன், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடல் பிராந்தியம் முழுவதுமே ஒரே மாதிரி தடைக்காலம் விதிப்பது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு, இந்த கமிஷன் அறிக்கை வெளிவந்த நான்கு ஆண்டுகளில் , இதுவரை ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

அதே நிவாரணம் நியாயமல்ல
ஏற்கனவே 45 நாள் தடைக்காலம் அமலில் இருந்த காலத்தில் தமிழ்நாடு அரசு மீனவர்கள் குடும்பம் ஒன்றிற்கு தலா ரூ.5000 வழங்கி வந்தது. தற்போது தடைக்காலம் 61 நாட்களாக உயர்த்தியுள்ள போது,மாநில அரசு தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் இருந்தனர். தற்போது தமிழக மீன்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில்
மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் இந்த இரு மாதங்களும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 ம் வீதம் ரூ.82 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது நியாயமானதல்ல.

தற்போதுள்ள விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தடைக்கால நிவாரண தொகையை ஒரு நாளுக்கு 200 ரூபாய் வீதம் கணக்கிட்டு , பன்னிரண்டு ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தன. ஆனால் தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடி தடைக்காலத்தில் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.

கடல் மீன் வளத்தை பாதுகாக்க மீன்பிடிப்பதை தடைவிதிப்பது மட்டுமே வழியா மாற்று வழி இல்லையா என்றகேள்விகள் மீன் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

மீன் வளத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சிதான் கோடை காலத்தில் 61 நாள் மீன்பிடி தடை விதிப்பது; இந்த 61 நாள் தடைக் காலத்தில் மீன்கள் குஞ்சு பொரிப்பதாகவும், அதைப் பாதுகாக்கவே இந்த மீன்பிடி தடை என்றும் சொல்கிறது. ஆனால் இந்த ஒரு விளக்கம் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

எல்லா மீன்களும் இந்த 61 நாட்களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்றன என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இது தவறானது.இந்தத் தடைக்கால நடவடிக்கை
1988-ல் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பின் கடல் சூழலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் நம் மீன்வளத்துறை அதே பழைய தர்க்கத்தைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை விதிப்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

முதலில் நம் கடலில் வாழும் மீன் இனங்களைப் பற்றி நமக்குப் பெரிதும் தெரியாது என்பதை ஒத்துக்கொள்வது நல்லது. நிறைய மீன் இனங்கள் இப்பொழுது காணாமல் போய்விட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீன்பிடித்தலை முறைப்படுத்த முதலில் மீன் உயிரியலைப் பற்றி அறிய வேண்டும். அதாவது மீன் என்ன உணவை உட்கொள்கிறது, பருவநிலைக்கு ஏற்ப எங்கு நீந்துகிறது, எந்தக் காலகட்டத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு, சில மீன் இனங்களைப் பற்றித் தகவல் கிடைத்தாலும் பெரும்பாலான மீன்களைப் பற்றி நமக்குத் தகவல்கள் இல்லை. இதை முழுமையாக அறிந்தால் எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த வகையான வலைகளைப் பயன்படுத்த வேண்டும், எவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்பதை அறிய முடியும்.

இரண்டாவதாக, மீன்பிடி தொழில் குறித்த அரசின் கொள்கை – உருவாக்கம் மற்றும் செயல்முறைகளில் மீனவர்களின் பங்கேற்பை அரசு பெறுவதில்லை . இந்தியாவைப் பொறுத்தவரை மீன் அறிவியல் என்பது களத்துக்கு நேரடித் தொடர்பில்லாத வல்லுநர்களை மட்டுமே கொண்டு இயங்குகிறது. கடற்கரையில் பிறந்து கடல் தொழில் செய்து அதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு ஒரு சிறந்த ஆராய்ச்சியாளரைவிட அனுபவ அறிவு அதிகம் என்பதை முதலில் உணரவேண்டும்.

அதிலும் நமது இந்திய ஆய்வுக் கூடங்களில் ஐரோப்பிய நாடுகளின் ஆய்வு முறையை அப்படியே நகல் செய்கின்றனர். குளிர் மண்டல கடல் பிரதேசம் கொண்ட ஐரோப்பிய ஆய்வு முறை, இந்தியா போன்ற வெப்ப மண்டல கடல் பிரதேசத்தில் பொருந்தாது.
மூன்றாவதாக, மீன்வளத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளில் மீன்பிடித்தலை தடை செய்வதே ஒரே ஆயுதம் என அரசு கூறுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

தற்போது உள்ள மீன்வளத்தைக் கட்டுப்படுத்தும் அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும். மீன் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் தவறல்ல. ஆனால், உயிர் சூழலையும் அதில் வசிக்கும் மீன்களையும் நம்பி வாழும் எண்ணற்ற மக்களையும் பாதிக்கும் வகையில் மீன்வளத்தைக் கட்டுப்படுத்தும் அம்சங்கள் அமைந்துள்ளன.

உலகெங்கிலும் மீன்பிடித்தல் குறைந்துவரும் நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை மீன்பிடித்தல் அதிகரித்துவருகிறது. இது எப்படிச் சாத்தியம்? மீன்பிடி தொழிலின் உயிரியல், சமூகம், பொருளாதார நிலைமையை சரியான முறையில் ஆராயவேண்டும்.

மீன் வளம் குறைய முக்கிய இரண்டு காரணங்கள்.

தற்போது நாம் உணர்ந்துவரும் பருவநிலை மாற்றங்களால் நம் உணவுப் பாதுகாப்பைச் சீர்குலைப்பதற்கு மிக அதிகச் சாத்தியம் இருக்கிறது.

கடலில் ஒரு வருடத்துக்கு 80 லட்சம் டன் நெகிழிக் கழிவு கொட்டப்படுகிறது என உலகில் பிரபலமான சயின்ஸ் என்ற பத்திரிகை கூறுகின்றது.

இரண்டாவதாக முக்கியமான ஒரு அனுபவம் என்னவென்றால்
நமது கடல் வளத்தை அழிப்பதில் பிரதான பங்கு வகிப்பது நவீன இந்திய
மற்றும் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள். அதுபோல் இந்தியாவில் தற்போது பெருகிவரும் இழுவலை படகுகள்.இந்த இரண்டு வகையான மீன்பிடிப்பே 99 சதவீத கடல் வளங்களை சுரண்டுகின்றது.

ஒரு கோடி பாரம்பரிய இந்திய மீனவர்கள் பிடிக்க முடியாத மீன்களை கார்ப்பரேட் மீன்பிடி கப்பல்கள் பிடித்து விடுகின்றன.

இந்த உலகில் நான்கில் மூன்று சதவீதம் கொண்ட மாபெரும் மகா சமுத்திரத்தின் வளங்களை வயிற்றுப் பிழைப்புக்காக தூண்டில் போட்டும், செவுள் வலை, பாச்சு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் எளிய மீனவன் சுரண்டுகிறான் என அவனுக்குத் தடை விதிப்பது அநியாயம்.

எனவே மீன் வளம் பாதுகாக்க ஒரே ஆயுதம் பன்னாட்டு மற்றும் இந்திய பகாசூர மீன்பிடி கப்பல்கள், தடைசெய்யப்பட்ட இழுவை வலைகள் பயன்படுத்திய விசைபடகுகள் ஆகியவற்றை நிரந்தரமாக தடை செய்வதுதான்.

கட்டுரையாளர், 
மாநில பொதுச்செயலாளர்
தமிழ் நாடு மீன்பிடி
தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு)
இராமேஸ்வரம்

Leave a Reply

You must be logged in to post a comment.