திருப்பூர்,
தினமும் ஏறிவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மோட்டார் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எரிபொருள் விலை உயர்வை கைவிடக்கோரியும், வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமீயம் தொகையை அபரிமிதமாக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். மோட்டார் வாகனத் தொழிலாளர்களிடம் அபராதம் என்ற பெயரில் அபரிவிதமாக பண வசூல் செய்யும் காவலர்களின் செயல்பாட்டை எதிர்த்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி, மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.  ஆட்டோ தொழிலாளர் சங்கச் செயலாளர் ஜெயக்குமார் உள்பட மோட்டார் தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.