கோவை,
பொதுமக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கோவை பாஜக இளைஞரணி அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அனைத்து பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கீழ் சித்திரைசாவடி பகுதியைக் கடந்து வரும் தண்ணீரை பொதுமக்கள் சிலர் தடுப்பணையில் அடைத்து வைத்துள்ளதாக ஒரு பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இதனால் தொண்டாமுத்தூர் மற்றும் பேரூர் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கீழ் சித்திரைச்சாவடி மக்களுக்கு எதிராக சண்டையிட்டுக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து கோவை மேற்கு மண்டல பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவக்குமார் சித்திரைசாவடி அணைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு தடுப்பணைகளில் எந்த தடுப்பும் வைக்கவில்லை. தண்ணீர் வழக்கம்போல அனைத்து பகுதிகளுக்கும் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்த விபரத்தை பொதுமக்களுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அமைதி ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து முகநூலில்மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் வகையில் பொய்யான தகவலைப் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உதவி பொறியாளர் சிவகுமார் தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் மதுக்கரை நகர பாஜகவின்இளைஞர் அணியின் அமைப்பாளராக செயலாற்றி வரும் சுரேஷ் என்பவரே, முகநூல் பதிவு மூலம் இந்த வதந்தியை பரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: