அகமதாபாத்:
‘பிரதமர் மோடிதானே எனக்கு ராமர்; அவரைத் திருமணமாகாதவர் என்று எவ்வாறு கூறினீர்கள்?’ என்று, மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு, யசோதா பென் கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் முன்னாள் முதல்வரும், மத்தியப் பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் படேல், அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பிரதமர் மோடியைத் ‘திருமணமாகாதவர்’ என்று அவர் குறிப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியது. மோடியே தனது திருமணத்தை ஒப்புக்கொண்டிருக்கும்போது, ஆனந்திபென் படேலுக்கு ஏன், இந்த வேண்டாத வேலை? என்று பலரும் கேள்விகள் எழுப்பினர்.இந்நிலையில், பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னும், ஆனந்திபென் படேலைக் கண்டித்துள்ளார். இவ்விஷயத்தில் யசோதா பென், தனது கருத்தை வீடியோ பதிவாக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.‘நரேந்திர மோடிக்கு திருமணம் ஆகவில்லை என்று ஆனந்திபென் கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்தேன்’ என்று அந்த வீடியோவில் கூறியிருக்கும் யசோதா பென், 2004 தேர்தல் வேட்புமனுத்தாக்கலின் போது ‘தான் திருமணமானவர்’ என்று மோடியே கூறியதோடு, தனது பெயரையும் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

‘நிறைய படித்தவரான ஆனந்திபென், என்னைப் போன்ற ஒன்றும் தெரியாத ஆசிரியையைப் போல பேசியிருப்பது சரியல்ல; தன் குருவைப் பற்றி அவர் இவ்வாறு கூறக்கூடாது; அது மட்டுமல்ல அவரது செயல்கள் பிரதமரின் பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளது’ என்றும் கூறியிருக்கும் யசோதா பென், ‘எனக்கு அவர் (மோடி) மீது நிறைய மதிப்பு உண்டு, அவர் எனக்கு ராமர்’ என்றும் உருகியுள்ளார்.மோடிதான் தனது கணவர் என்று இப்போதுதான் யசோதா பென் இவ்வளவு வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.