திருப்பூர்,
பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.429.20-ஐ தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் சங்க 9ஆவது தலைமை மகாசபை வலியுறுத்தியுள்ளது.

உடுமலைபேட்டை வி.பி.சிந்தன் நினைவகத்தில் புதனன்று சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சங்க 9 ஆவது மகாசபை மாவட்டத் தலைவர் என்.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் கே.பழனிசாமி ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். இம்மகாசபையில், தமிழக அரசு அரசாணை (2டி) படி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.429.20 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பஞ்சாலைகளிலும் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு இந்த ஊதியம் வழங்க வேண்டும். 480 நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வதுடன், இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்து உரிய வசதிகளை வழங்க வேண்டும். அனைத்து பஞ்சாலை
களிலும் பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். நீண்ட காலமாக வழங்காமல் உள்ள ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை தொடர்ந்து, பஞ்சாலைத் தொழிலாளர்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவர் என்.கிருஷ்ணசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் கே.பழனிசாமி, துணைத் தலைவர்கள் பி.முருகேசன், எம்.செல்வராஜ், செயலாளர் எஸ்.ஜெயப்பிரகாஷ் ஆகியோரும், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 8 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். ஐம்பதுக்கு மேற்பட்டத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். முடிவில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் நிறைவுரை ஆற்றினார். துணைத் தலைவர் எம்.செல்வராஜ் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: