மன்னார்குடி,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரில் சிந்திய குருதியின் ஒவ்வொரு துளிகளிலிருந்தும் ஓரா
யிரம் போராளிகள் உதிப்பார்கள் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூகிருஷ்ணன் கூறினார்.

காப்பீட்டு ஊழியர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்தியாவுக்கான மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் மன்னார்குடியில் செவ்வாயன்று (ஜூன் 19) நடைபெற்ற விவசாயிகளுக்கான சிறப்பு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் தற்கொலை முற்றிலும் தடுத்துநிறுத்தப்படும் என்று 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடியும் பாஜகவும் கூறினார்கள். ஆனால் விவசாயிகளின் தற்கொலை 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட அதிகமானது. ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்தில் நானும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லாவும் மத்திய வேளாண் அமைச்சரை சந்தித்து எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல் செய்யக் கோரியபோது தேர்தல் சமயத்தில் எவ்வளவோ சொல்வோம் அதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளமுடியுமா என்று அமைச்சர் பதிலளித்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் மராட்டியத்தில் பட்டினிச் சாவு அதிகமானது.

2016ஆம்ஆண்டில் முதல் ஐந்து மாதத்தில் மட்டும் 9 ஆயிரம் சிறுவர்கள் பட்டினியால் மடிந்தார்கள். அந்தஆண்டில் மட்டும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 21 ஆயிரம் பேர் பட்டினியால் மடிந்தார்கள். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகளிடம் அனுமதி கேட்கத்தேவையில்லை என்று கூறும் மிக மோசமான சட்டதிருத்தத்தை ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்திலேயே மோடி அரசு கொண்டு வந்தது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம், ஆதிவாசி தலித் மக்கள் சங்கங்கள் உள்பட 90 சங்கங்கள் இணைந்து பல மாநிலங்களில் உறுதியாக போராடியதால் வேறுவழியின்றி அந்த அவசரச்சட்டத்தை மோடிஅரசு திரும்பப்பெற்றது.ராஜஸ்தானில் பாஜக அரசாங்கத்தால் உயர்த்தப்பட்ட 40 விழுக்காடு மின் கட்டணத்திற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கம் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியது. இதன் பின்னரே பாஜக அரசு அதை ரத்து செய்தது.

கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் 200 நாட்கள் வேலைகிடைக்கும் என்று விவசாயத் தொழிலாளர்கள் எதிர்பார்த்தால் மோடி அரசு 100 நாளில் வெறும் 36 நாட்கள் மட்டுமே வேலை கொடுத்தது. விவசாய கடன்தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த பிப்ரவரி மாதம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக் கான விவசாயிகள் அதில் கலந்து கொண்டனர். அருகில் உள்ள மத்தியப் பிரதேசத்தில் கடன் தள்ளுபடி கோரி போராட்டங்கள் நடைபெற்றபோது, பாஜக அரசு, விவசாயிகளை சுட்டுக்கொன்றது. இதற்குபின்னர் தில்லியில் 190 விவசாயிகள் சங்கங்கள் இணைந்து சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி நியாயமான விலை மற்றும் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் நாடாளுமன்றத்தை நடத்தின.

நாசிக்கில் இருந்து மும்பைக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் விவசாயிகள் நடத்திய மாபெரும் நடைபயணத்தை நகரத்தில் உள்ள மாவோயிஸ்ட்டுகளின் வேலை இது என்று கூறினார்கள். ஆனால் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நமது விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களை அழைத்து 12 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதிகளை எழுத்துப் பூர்வமாக அளித்தார்.இந்த நீண்ட பயணம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஆதிவாசிகள், தலித்துக்களின் ஒன்றுபட்ட உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உறுதியாக போராடி வெற்றிபெற்றுள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரில் சிந்திய குருதியின் ஒவ்வொரு துளிகளிலிருந்தும் ஓராயிரம் போராளிகள் உதிப்பார்கள். அந்த பதின்மூன்று தியாகிகளின் தியாகத்திலிருந்து உருவாகும் பல்லாயிரக்கணக்கான போராளிகள் இந்த மாநில அரசிற்கும் வேதாந்தா நிறுவனத் திற்கும் மத்திய அரசின் அநீதிகளுக்கு எதிராகவும் தமிழ்நாட்டை மாபெரும் போராட்டக் களமாக மாற்றுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.