தூத்துக்குடி, ஜுன் 20-

தூத்துக்குடியில் கடந்த திங்களன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் விதிகளை மீறிவிட்டதாக கூறி  1720 பேர் மீது காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் , அங்கு நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் திங்களன்று மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்த பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. பொதுக்கூட்டம் நடத்த கூடாது என கூறியது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடிய போது, நீதிமன்றம் சில  நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி  திட்டமிட்ட அடிப்படையில் திங்களன்று மாலை தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  முன்னதாக பொதுக்கூட்ட திடலில் காவல்துறையினர் ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் வேலி அமைத்திருந்தனர். அதோடு ஒவ்வொரு வாயிலிலும் காவலர்கள் நின்று வருபவர்களை கணக்கெடுத்தனர். சீருடையின்றி ஏராளமான காவலர்கள் வீடியோவிலும் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். மேடையில் பேசும் தலைவர்களின் பேச்சு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் முழுமையாக ஒளிப்பதிவு செய்தனர். கட்டிடங்களில் மேல் காவல்துறையினரை துப்பாக்கியோடு நிறுத்தியும், ஏராளமான காவலர்களை பொதுக்கூட்ட மைதான பகுதியில் துப்பாக்கியோடு இறக்கியும் மறைமுகமாக மார்க்சிஸ்ட் கட்சியினரை மிரட்டி பார்ததனர். ஆனால் எந்த சலனமுமின்றி திட்டமிட்ட அடிப்படையில் பொதுக்கூட்டம் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மத்தியக்குழு உறுப்பனிர் உ.வாசுகி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டதாகவும், நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர்  தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை காவல்துறை உள்நோக்கத்தோடு பதிவு செய்திருக்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என கட்சியின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் மதுரை உயர் நீதிமன்ற கிளையை நாடினார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை முடித்து விடுவதாக கூறினார். ஆனால் நீதிபதி வழக்கை முடிப்பதை விட அதனை ரத்து செய்ய வேண்டும்.  அந்த வழக்கின் மேல்நடவடிக்கை கைவிடப்பட்ட அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன் தாக்கல் செய்ய வேண்டும் என்று  நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மேற்படி அதிகம் பேர் கூட்டத்தில் பங்கெடுத்தது அமைதி வழியில் முடித்த கூட்டத்தை குறிப்பிட்டு வழக்கு தொடர முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவாக தனது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: