ஜெனிவா:
இந்தியாவில் இயங்கும் தலித் பெண்களுக்கான செயற்பாட்டாளர்கள் கூட்டணி, ஜெனிவாவில் ஜூன் 18 அன்று தொடங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் 38ஆவது அமர்வில் ஓர் அறிக்கையை இன்று (வியாழன்) தாக்கல் செய்திருக்கிறது.

இந்தியாவில் தலித் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் குறித்து சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் குற்ற நிகழ்வுகளை இந்த அறிக்கையில் அவர்கள் கொண்டுவந்திருக் கிறார்கள். உலகத்தில் சாதி அடிப்படையில் நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் அறிக்கையும் இதுவேயாகும். இவ்வாறு குற்றங்களைப் பட்டியலிட்டுள்ள இவர்கள் இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருந்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்த அகில இந்திய தலித் மகளிர் அதிகார் அமைப்பின் (All India Dalit Mahila Adhikar Manch) பொதுச் செயலாளர் , ஆஷா கோவ்டால் இது தொடர்பாகக் கூறுகையில், “தலித் பெண்களுடன், அதிலும் குறிப்பாக சாதி வெறி பிடித்தவர்களின் வன்முறை வெறியாட்டங்களுக்குப் பலியாகி, தப்பிப்பிழைத்திருக்கின்ற தலித் பெண்களுடன், தொடர்ந்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பெண் செயற்பாட்டாளர்கள் எவ்வாறெல்லாம் தலித் பெண்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இதில் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்,” என்றார்.

இந்த அறிக்கையை மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர் மற்றும் இனவெறிப் பாகுபாடு ஒழிப்பு மீதான ஐ.நா.குழுவின் உறுப்பினரான ரீட்டா ஐசக் நாடியாயே (Rita Izsák-Ndiaye) இந்த அறிக்கையை வரவேற்றிருக்கின்றனர். 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்தாடுவது தொடர்பாக அப்போது சிறுபான்மையினருக்கான ஐ.நா. சிறப்புப் பதிவாளராக இருந்த ரீட்டா ஐசக் நாடியாயே ஓர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதனை இந்திய அரசாங்கம் ஏற்காமல் கண்டனம் தெரிவித்திருந்தது. சாதிய வேற்றுமைகள் உள்நாட்டுப்பிரச்சனை என்றும் அதனை இதுபோன்ற சர்வதேச அமைப்புகளுக்குக் கொண்டுவரக் கூடாது என்றும் அரசுத்தரப்பில் கூறப்பட்டிருந்தது.

2001இல் தர்பனில் இனவெறிக்கு (racism) எதிராக உலக மாநாடு நடைபெற்ற சமயத்தில், அகில இந்திய தலித் மகளிர் அதிகார் அமைப்பு இந்தியாவில் சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடுவதை எழுப்பிட முயற்சித்தது. அப்போதும் இந்திய அரசாங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்தது. சாதியை இனத்துடன் (race-உடன்) ஒப்பிடக்கூடாது என்றது. இத்தகைய நிலைப்பாட்டைத்தான் இந்திய அரசு காலங்காலமாக மேற்கொண்டு வருகிறது.

எனினும் உலக அளவில் நிறவெறிக்கு எதிராக மாநாடு நடைபெறும்போதெல்லாம், அதனைப் பயன்படுத்திக்கொள்ள தலித் பெண்களுக்கான செயற்பாட்டாளர்கள் தயங்குவதில்லை. “இந்தியாவில் தலித் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அந்த சமயத்தில் உலகத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்ல நாங்கள் விரும்புகிறோம். எனினும் இந்திய அரசு எங்களை சுதந்திரமாக இயங்கவிடாது தடுக்கிறது,” என்று தேசிய தலித் பெண்கள் சம்மேளனத்தின் தேசியக் கன்வீனர் ருத் மனோரமா கூறினார்.

“எங்கள் நோக்கம் நாட்டை அவமானத்திற்குள்ளாக்க வேண்டும் என்பதல்ல. மாறாக சாதி வெறியர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரக்கூடாது என்கிற ஆட்சியாளர்களின் தடையை உடைத்தெறிய, நாங்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறோம்,” என்று ஆஷா கோவ்டால் கூறினார்.

அறிக்கையைத் தயாரித்தவரும், கர்நாடக மாநிலத்தில் பொது சுகாதார மருத்துவராகவும் ஆராய்ச்சியாளராகவும் இருக்கும் டாக்டர் சில்வியா கற்பகம் இது குறித்துக் கூறுகையில், “சாதி அடிப்படையிலான வன்முறைகள், மனித உரிமை மீறல்களில் காணப்படும் பல்வேறு மீறல்களை உள்ளடக்கியிருக்கின்றன. எனினும், அரசாங்கங்கள் இவ்வாறு நம் நாட்டில் எதுவும் நடைபெறவில்லை என்றோ அல்லது இப்பிரச்சனையை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம் என்றுதான் கூறிவருகின்றன. இப்போது இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் அதிக அளவில் தலைவிரித்தாடுகின்றன. ஏனெனில் இதுபோன்று இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் பாகுபாடுகளை நீதிமன்றத்தின் முன் மெய்ப்பிப்பது என்பது மிகவும் கடினமாகும்.” என்றார்.

தலித் மாணவிகள், பள்ளிக்கூடங்களில் கூட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக, செயற்பாட்டாளர்களில் ஒருவரான நீதிக்கான தேசிய தலித் இயக்கத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டுள்ள அபிராமி இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண்கள் பதின்பருவ வயதை அடையும்போது பொதுவாகவே அவர்களுக்கு எதிரான வன்முறையும் அதிக அளவில் நடைபெறுகிறது. இருப்பினும் அதிலும் தலித் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது மற்ற பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களைக் காட்டிலும் அதிகமாகும். இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின்படி, “15 வயதுடைய பெண்களில், “இதர” வகையைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் 19.7 சதவீதம் என்ற நிலையில், தலித் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் 33.2 சதவீதமாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

நாட்டில் பல பகுதிகளில் தலித் பெண்கள், அரசு ஊழியர்களாக மாறியிருந்தாலும்கூட அவர்களுக்கு எதிராகவும் அப்பகுதியில் வாழும் ஆதிக்க சாதியினர் மேற்கொள்ளும் வன்முறை வெறியாட்டங்களும் இந்த அறிக்கையில் பலரால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க சாதியினர் தலித் பெண்களுக்கு எதிராக எவ்வகையான இழிசெயல்களில் ஈடுபட்டாலும் தங்களை எவரும் எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்கிற துணிச்சல்தான் இது போன்று வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணமாகும்.

சாதியக் கொடுமைகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோதிலும் குற்றம் இழைத்த கயவர்கள் நீதிமன்றங்களில் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி விடுவிக்கப்படுவது குறித்தும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

“இந்தியாவில் உள்ள தலித் பெண்களால் நடத்தப்படும் இயக்கம் இது. நாங்கள் இழப்பதற்கு எதுவும் கிடையாது. எனினும் இந்த சாதிய அமைப்பிற்கு எதிராக எதிர்ப்புணர்வை எங்கள் நெஞ்சில் ஏந்திக்கொண்டு சாதி அமைப்புக்கு சாவு மணி அடிப்பதற்கான பணியில் எங்களை நாங்கள் தியாகப்படுத்திக்கொண்டு, முன்னேறிக் கொண்டிருக்கிறோம். எனவே எதிர்காலத்தில் நாங்கள் வெல்வது நிச்சயம்,” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: ஸ்குரோல்.இன்,
(தமிழில்: ச. வீரமணி)

Leave a Reply

You must be logged in to post a comment.