புதுச்சேரி:
புதுச்சேரியில் நடைபெறும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி நினைவுச்சுடர் கொடிப்பயணம் தொடங்கியது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14 வது மாநில மாநாடு புதுச்சேரியில் ஜூன் 21ல் தொடங்கி 24 வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டையொட்டி நினைவுச் சுடர் பயணம் மகாகவி பாரதியார் இல்லத்திலிருந்து தொடங்கியது.

முன்னதாக பாரதியார், பாரதிதாசன், வ.சுப்பையா உருவச் சிலைகளுக்கு சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச் செல்வன் மாலை அணிவித்தார். நாடகக்கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுச் சுடரை மூத்த பத்திரிக்கையாளர் தணிகைதம்பி கொடுக்க, தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் தவில் வி.விநாயகம் பெற்றுக் கொண்டார்.கவிஞர் தமிழ் ஒளி நினைவுச் சுடரை கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைத் தலைவர் மு.கு. ராமன் கொடுக்க முஎகச செயற்குழு உறுப்பினர் பாகூர் கல்கி பெற்றுக்கொண்டார்.
பாவேந்தர் பாரதிதாசன் நினைவுச்சுடரை புதுவை தமிழ்ச்சங்க தலைவர் வி.முத்து கொடுக்க முஎகச செயற்குழு உறுப்பினர் மேகலாதேவி பெற்றுக்கொண்டார்.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுச் சுடரை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகன் கொடுக்க இந்திய மாணவர் சங்க புதுச்சேரி செயலாளர் பா.பாபு பெற்றுக்கொண்டார்.

மகாகவி பாரதியார் நினைவுச்சுடரை தொழிற்ச் சங்க மூத்த தலைவர் தா.முருகன் கொடுக்க முஎகச செயற்குழு உறுப்பினர் அன்பரசி ஜூலியட் பெற்றுக்கொண்டார்.நினைவுச் சுடர் பயண தொடக்க விழாவிற்கு முஎகச மாவட்டத் தலைவர் வீர. அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதுவை முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் க.லட்சுமிநாராயணன் பயணத்தை தொடங்கி வைத்தார்.

தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் ரகு அன்புமணி, வி.ஞானசேகர், வி.விநாயகம் தலைமையில் சுடர் பயணக்குழு புதுவை சப்தர் ஹஷ்மி கலைக்குழுவோடு முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், கிருமாம் பாக்கம், தவளக் குப்பம், பாகூர், வில்லிய நல்லூர், கரிகலாம்பாக்கம், அருமாத்துபுரம், மூலகுளம், உழவர்கரை பகுதிகள் வழியாக புதுச்சேரி ஜீவா சிலையை வந்தடைந்தது.

தலைவர்கள்
நினைவுச் சுடர் பயண துவக்க நிகழ்ச்சியில் தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் சு.ராமச்சந்திரன், மாநில நிர்வாகிகள் களப்பிரான், கருணா, அன்பரசு, லட்சிமிகாந்தன், புதுச்சேரி முஎகச மாவட்ட செயலாளர் உமாஅமர்நாத், பொருளாளர் ம.கலியமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் வில்லியனூர் பழனி, சண்மூகசுந்தரம், கணேசன், சுப்பிரமணியம், அமர்நாத், கலியமூர்த்தி, அன்பழகன், ராம்ஜீ, கே.முருகன், பிரேமதாசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காவிமயமாக்க அனுமதியோம்!
நினைவுச் சுடர் பயணத்தை துவக்கி வைத்த புதுச்சேரி முதல்வரின் நாடாளுமன்ற செயலர் க.லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ பேசுகையில், “சங்கரதாஸ் சுவாமிகள், பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,தமிழ் ஒளி நினைவிலான ஐம்பெரும் சுடர் பாரதியார் இல்லத்திலிருந்து தொடங்கும் தமுஎகச மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்த ஐம்பெரும் சுடர்களும் புதுச்சேரியின் இருளை விலக்கும் சுடராக இருக்கும். புதுச்சேரியை காவிமயமாக்கும் செயலை அனுமதிக்க முடியாது. நாம் ஒன்றுபட்டு எதிர்ப்போம். அதற்காக ஒன்றுபட்ட குரல் மாநாட்டில் ஒலிக்க வேண்டும். மாநாடு சிறக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்” என்றார்.

கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கப் போராடியதால் இந்து மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட எழுத்தாளர்கள் தபோல்கர். கோவிந்த் பன்சாரே,கல்புருக்கி. பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் ஆகியோரின் கருத்தோவியம் மாநாட்டு முகப்பை அலங்கரித்துள்ளது.

 

தமுஎகசவின் 14வது மாநில மாநாடு துவக்க நாளான புதுச்சேரியில் ஜூன்21 அன்று சங்கரதாஸ் சுவாமிகள், கவிஞர் தமிழ் ஒளி, பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மகாகவி பாரதியார் ஆகியோரின் நினைவுச்சுடர் பயண சுடர்களை ஒப்புவிக்கும் விழா பாரதியார் இல்லத்தில் நடைபெற்றது. பயணச் சுடர்களை தவில் விநாயகம், பாகூர்.கல்கி , மேகலா தேவி, பாபு, அன்பரசி ஜூலியட் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன் முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் க.லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, தமுஎகச மாநில தலைவர் ச.தமிழ்செல்வன், பொருளாளர் சு.ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், தா.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

நினைவுச்சுடர் பயணத் தொடக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் க. லட்சுமி நாராயணன் துவக்க உரையாற்றினார்.

 

பாரதியார் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு தமுஎகச மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் கலைஇலக்கிய பெருமன்ற துணைத் தலைவர் மு.கு.ராமன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.