கோவை,
கோவை மாநகரின் குடிநீர் விநியோகம் தொடர்பாக பிரான்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வியாழனன்று கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தற்போதைய தமிழக ஆட்சியில் மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிபோவதும், அதனை எதிர்ப்பவர் மீது அடக்குமுறை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்கிறது. மக்கள் நலனுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஆளுநர் மூலம் மத்திய அரசு மேற்கொள்கிறது. கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோத்தை செய்ய வேண்டிய கடமை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளது. குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி 26 ஆண்டு காலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஓப்பந்தத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கின்றது. இந்த ஒப்பந்தத்தினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஜூன் 29 ஆம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இதேபோல், சேலம் சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டம் தேவையற்றது. இதுதொடர்பாக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர். திட்டத்தை எதிர்ப்பவர்களை சமூகவிரோதி என்று பட்டம்சூட்டுகின்றனர்.

அப்படியென்றால் நாங்களும் சமூக விரோதிகள்தான். சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ஜூலை 6 ஆம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தூத்துக்குடியில் பொதுமக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். பொதுமக்களோடு சேர்ந்து போராடிய வழக்கறிஞர்கள் சதி செய்ததாக கூறி கைது செய்யப்படுகின்றனர். ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடமாநில அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. நியாயம் கற்பிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுகிறது.

தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. கருத்துகளை வெளியிடாமல் அரசின் செய்திகளை மட்டும் ஓளிபரப்புவேண்டும் என அச்சுறுத்தப்படுகின்றனர். சுதந்திர நாட்டில் இருக்கின்றோமா அல்லது சர்வாதிகார நாட்டில் இருக்கின்றோமா என்று தெரியாத அளவிற்கு ஆட்சி இருக்கின்றது. தமிழகத்தில் நக்சலைட், மாவோயிஸ்ட் இருப்பதாக மத்திய அமைச்சர் பென்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி சொல்லி வருகின்றார். உளவுத்துறை பார்க்கும் வேலையை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்க்கின்றார். பொன்.ராதா கிருஷ்ணனா? பொய்.ராதா கிருஷ்ணனா ? என்ற கேள்வி மக்களிடம் இருக்கின்றது. போகின்ற போக்கில் நக்சல், மாவோயிஸ்ட் என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லிவிட்டு போக கூடாது. யார் அவர்கள் என்பது குறித்த பட்டியலை பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.