திருப்பூர்,
திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி இப்பகுதி மக்கள் பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தினர்.

ராக்கியாபாளையம் பகுதியில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. பேரூராட்சிப் பகுதியில் வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெற்ற நிலையில் சமீப காலமாக மாதம் ஒருமுறை என்ற அளவுக்கு குடிநீர் வழங்குவது குறைந்துபோனது. அதுவும் ஒரு சில மணி நேரம் மட்டுமே குடிநீர் கிடைப்பதால் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இத்துடன் தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருப்பதுடன், சாலையும் மோசமான நிலையில் இருக்கிறது. இது பற்றி முறையிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பணிகள் தேங்கிக் கிடக்கின்றன.

அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழனன்று ராக்கியாபாளையம் மக்கள் திருமுருகன் பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அத்துடன் திருப்பூர் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் ராக்கியாபாளையம் பகுதிக்கு நேரில் வருவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் முடித்துக் கொண்டனர். பின்னர் செயல் அலுவலர் ராக்கியாபாளையம் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தவும், தெருவிளக்கு, சாலை, குப்பை அகற்றம் உள்ளிட்ட இதர பிரச்சனைகளை களையவும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.