====ஜி.ராமகிருஷ்ணன்===
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).                                                                                                                 உளறலில் சில நேரம் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்ற சொலவடையின் அடிப்படையில்தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சைப் பார்க்க வேண்டும்.
ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் சுருட்டிக் கொண்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது, ஆளுங்கட்சி தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதிமுக அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாரே என்ற கோபம்.

அம்மாவை அவதூறு செய்யும் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தினகரன் கூறுகிறார்.

அமைச்சர் சீனிவாசன் சொன்னது உண்மைதான். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஜெயலலிதா இறந்து விட்ட காரணத்தினால், அவரை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு, மற்ற 3 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டு மூவரும் சிறையில் உள்ளனர்.

ஊழல் செய்து தண்டிக்கப்பட்டு, சிறையிலிருக்கக்கூடிய சசிகலாவைத்தான் தனது கட்சியின் பொதுச்செயலாளராக வைத்திருக்கிறார் தினகரன்.

அதிமுக பழனிசாமி – பன்னீர்செல்வம் கோஷ்டி என்றும் தினகரன் தலைமையில் ஒரு அமமுக கட்சி என்றும் பிளவுபட்டு நிற்பது ஏன்? தினகரனிடமிருந்து விலகி திவாகரன் ஒரு கட்சியை ஆரம்பித்திருப்பது ஏன்? இந்த போட்டி மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல. எல்லாம் அதிகாரத்திற்கான போட்டிதான். அதிகாரம் இருந்தால்தான் கொள்ளையடிக்க முடியும். ஜெயலலிதா மரணத்தைப் பற்றி இவர்களுக்குள் நடக்கும் சர்ச்சையும் அதிகாரத்திற்கான போட்டிதான்.

பெருந்தலைவர் காமராஜர் இறந்த போது, விசாரணைக் கமிசன் அமைக்கப்படவில்லை. பேரறிஞர் அண்ணா இறந்த போது யாரும் விசாரணைக் கமிசன் கோரவில்லை. மூதறிஞர் ராஜாஜி மறைந்த போது, யாரும் சர்ச்சையை எழுப்பவில்லை. அம்மையார் ஜெயலலிதா இறந்த பிறகு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது ஏன்?

ஆட்சியிலும் கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்? அரசு வேலை நியமனத்தில், அரசுத்துறைகளில் காண்டிராக்ட் விடுவதில், இவ்வாறு எல்லா வகையிலும் அதிமுக ஆட்சியில் ஊழல் முறைகேடு விதியாகிவிட்டது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நியமனத்திற்கு கையூட்டு பெற்றதால் கையும் களவுமாய் பிடிபட்டு, கைதாகி வழக்கு நடைபெற்று வருகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை விசாரித்த உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை புலனாய்வு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்து, கையூட்டு பெற்றுள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டின் மீது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு பற்றி மாநில அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால் ஒரு அமைச்சர் கூட தப்பிக்க முடியாது. அதில் சீனிவாசனுக்கும் சிறப்பான இடம் உண்டு.

ஊழலில் திளைக்கும் மாநில அதிமுக அரசு மக்கள் பிரச்சனைகளில் ருத்ர தாண்டவமாடுகிறது. ஸ்டெர்லைட்டை மூட வேண்டுமென்று போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றது. போலீசை கண்டிப்பதற்காக உயர்நீதிமன்றத்தினுடைய அனுமதி பெற்று தூத்துக்குடியில் கண்டனக் கூட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் மீது காவல்துறை வழக்கு தொடுத்தது. பின்னர், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி வழக்கு கைவிடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட பலரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனையும் கைது செய்து காவல்துறை வழக்கு போட்டுள்ளது.
பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தை திருவண்ணாமலையில் கூட்டினார். இக்கூட்டத்திற்கு இடம் தரக்கூடாது என மண்டப உரிமையாளர்களை காவல்துறை மிரட்டியுள்ளது. தனியார் நிலத்தில் ஷாமியானா போட்டு கூட்டம் நடத்தச் சென்றால், காவல்துறை அதையும் தடுத்தது. கடைசியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க தலைவர்களை, காவல்துறையினர் கைது செய்தனர். இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் எனும் அராஜக ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது.

ஜிஎஸ்டி வரித்திட்டத்தால் கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் 50,000 சிறு,குறு தொழில்கள் மூடப்பட்டு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக சட்டமன்றத்திலேயே மாநில அமைச்சர் அறிக்கை வைத்தார். ஆனால், மத்திய அரசின் இக்கொள்கையை எதிர்ப்பதற்கு திராணியற்றதாக உள்ளது அதிமுக தலைமை.

மாநில உரிமைகளை மத்திய பாஜக அரசு பறிக்கிற போது, மாநில அமைச்சர்கள் ஏன் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள். மத்திய அரசாங்கத்திற்கு எதிராக மூச்சுவிட்டால் சிபிஐ ரெய்டு நடக்கும், அமலாக்கத்துறை வழக்கு தொடுக்கும் என்ற பீதியில் மாநில அமைச்சர்கள் உள்ளனர். மாநில அரசின் மௌனத்திற்கு இதுதான் காரணம்.

மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு மக்களைத் தாக்குகிறது. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற முடிவில் உள்ள அதிமுக அமைச்சர்கள் அடித்த வரையிலும் லாபம் என கொள்ளையில் இறங்கியுள்ளார்கள். மக்கள் ஒற்றுமையை மத ரீதியில் பிளவுபடுத்தும் பாஜக – சங் பரிவாரங்களின் வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்த்து மதச்சார்பற்ற சக்திகளும் இடதுசாரி சக்திகளும் போராடி வருகின்றன.

மக்கள் வாழ்க்கையை நாசப்படுத்தி வரும் நவ தாராளமயக் கொள்கையை எதிர்த்து பரவலாக இயக்கங்கள் நடந்து வருகின்றன. இயற்கை வளத்தை கொள்ளையடிக்கும் அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டத்திலும் ஊழலில் திளைத்து நிற்கும் அதிமுக அரசின் ஊழல் முறைகேட்டை எதிர்த்து மக்கள் போராட்டத்தை தீவிரமாக்குவோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.