திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி இருவரும் உயிரிழக்க நேரிட்ட விபத்துக்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,

உயிரிழந்தோரின் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். அவிநாசியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பழனிசாமி, காங்கிரஸ் சார்பில் ஏ.மணி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பி.முத்துசாமி, எஸ்.வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.எம்.இசாக், வி.கோபால், மதிமுக சார்பில் பி.எம்.சுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் சார்பில் ப.சிவக்குமார், கொ.ம.தே.க சார்பில் எஸ்.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் ஆலாம்பாளையம் அரிஜன காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 38), இவரது மனைவி மல்லிகா (32) இவர்கள் இருவரும் கடந்த 15ஆம் தேதி தங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். வாகனங்கள் தடையின்றி வேகமாகச் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம், வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டதால்தான், அதிகவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி தம்பதி இருவரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே விபத்து ஏற்பட மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம்தான் காரணம் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த தம்பதியின் இரு குழந்தைகள் லோகு சவுமியா (14), தேஜாஸ்ரீ (4) ஆகிய இருவரும் தங்கிப் படிப்பதற்கான கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். இவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நியாயமான இழப்பீடுத் தொகையை அரசு வழங்க வேண்டும். இதில் ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: