திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் 20 ஆயிரத்து 800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூலக் கணக்குத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தென்காசி சு.ஜவஹர் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை அவிநாசிபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில் கருவூலக் கணக்குத் துறை, முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி சு.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி சு.ஜவஹர் பேசுகையில் கூறியதாவது: தமிழக நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ரூ.288.91 கோடி ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவுற்றுள்ளன.இத்திட்டத்தின் மூலம் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இப்பணியினை அக்டோபர் 2018 – க்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்தது முதல்; ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் காலவிரயம் குறையும். பணிப்பதிவேடு காணாமல் போகக்கூடிய சூழ்நிலையும் முடிவுக்கு வரும். பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும். ஆதாரப் பூர்வமான பணிவிபரங்கள் கணினியில் இருப்பதினால் பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக எடுக்கப்படும். இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நான்கு நாட்கள் பயிற்சியும், கூடுதலாக இரண்டு நாட்கள் கருவூல அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்களுக்கு உரிய ஓய்வூதியம் வழங்குவது உடனுக்குடன் செய்யப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற மாவட்டத்தலைநகரங்கள் மற்றும் தாலுகா தலைநகரங்களில் 805 மருத்துவமனைகளாக அனுமதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, மாவட்ட வன அலுவலர் (பொ) மாரிமுத்து, கூடுதல் இயக்குநர் (மின் ஆளுகை), கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை மகாபாரதி, மண்டல இணை இயக்குநர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை கோவை தே.செல்வசேகர், மாவட்ட கருவூல அலுவலர் கி.சுப்புலட்சுமி, இணை இயக்குநர் (மருத்துவநலபணிகள்) எஸ்.சோமசுந்தரம், மற்றும் அனைத்து துறை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.