ஹைதராபாத்:
பாஜக-வினர் எவ்வளவு பொய்ச்செய்திகளைப் பரப்பினாலும், பாஜகவுக்கு எதிரானவர்களோடு இணைந்து நிற்பேன் என்று, ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா கூறியுள்ளார்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்தவர் ரோஹித் வெமுலா. தலித் மாணவரான இவர், பல்கலைக்கழகத்தில் இழைக்கப்பட்ட சாதிய பாரபட்சத்தால், கடந்த 2016-ஆம் ஆண்டு பல்கலைக்கழக விடுதியிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரோஹித் வெமுலாவின் மரணத்தில் பாஜக மத்திய அமைச்சர்களான ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் அப்போது குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்நிலையில், ரோஹித் வெமுலாவின் தாயார் வறுமையில், வாடகை வீடு ஒன்றில் வசித்து வரும் நிலையில், அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவித்தது. ஆனால், அந்த நிதியை வழங்காமல் முஸ்லிம் லீக் மோசடி செய்து விட்டதாக, அண்மையில் பாஜக-வினர் வதந்தியைக் கிளப்பி விட்டனர். இது பரபரப்பாகவும் பேசப்பட்டது.
முஸ்லிம் லீக் தலைவர் முனீர், இதுதொடர்பாக அளித்த பேட்டியில், ‘நாங்கள் அளித்த காசோலை திரும்பி வந்த தகவல் எங்களுக்கு தெரியாது: எனினும் கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டோம்’ என்றார். இதனிடையே, வெமுலாவின் தாயார் ராதிகாவே இப்பிரச்சனை தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், முஸ்லிம் லீக் வழங்கிய காசோலையில் எழுத்துப்பிழை இருப்பதாகத்தான் அது திரும்பி வந்ததே தவிர, வங்கியில் பணம் இல்லாமல் அல்ல என்று கூறியிருப்பதுடன், திரும்பி வந்தது ரூ. 5 லட்சத்திற்கான காசோலை மட்டும்தான்; ரம்ஜானுக்குப் பின்னர் ரூ. 10 லட்சம் தருகிறோம் என்றுதான் ஏற்கெனவே அவர்கள் கூறியிருந்தனர்; எனவே, இதில் மோசடி எங்கே இருக்கிறது? என்றும் கேட்டுள்ளார்.
பாஜக-வினர் பொய்யைப் பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயன்றாலும், எப்போதும் தான் பாஜக-வுக்கு எதிரானவர்களுடனேயே இணைந்து நிற்பேன் என்றும் ராதிகா வெமுலா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: