சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது உள்ள அப்பழுக்கற்ற நீதிபதிகளின் அவரும் ஒருவர். காவல்துறையில், அதிகாரிகளின் இல்லங்களில் வீட்டு வேலை செய்யும் காவலர்கள் நலனில் அக்கறை செலுத்தி, அவர்கள் சிக்கலை தீர்க்க முயன்றதற்காகவே அவரை நான் காலமெல்லாம் தொழுவேன்.

ஆனால், கிருபாகரன், நீதிபதிகளை விமர்சிப்பது குறித்து தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள், வேதனையை ஏற்படுத்துகிறது. அரசு ஊழியர்கள் அவர்கள் உரிமைகளுக்கு எதிராக சில உத்தரவுகளை பிறப்பித்ததால், ஆர்வக் கோளாறில், சில கருத்துகளை நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருக்கலாம்.

அதற்காக அவர்கள் மீது காவல்துறை என்ற வேட்டை நாயை ஏவி விடுவது சரியான காரியமா ?

முகநூலில் இதே போல கருத்து தெரிவித்ததற்காக தீக்கதிர் ஆசிரியர் அகத்தியலிங்கத்தை காவல்துறை நேரில் அழைத்து விசாரித்தது. நான் இப்போது வரை இந்த விவகாரத்தை வெளியில் சொல்லவில்லை. என் மீதும் நீதிபதிகளை விமர்சித்ததற்காக அகத்தியலிங்கத்தை விசாரித்த வழக்கில், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகளும், நீதிமன்றங்களும் யாருக்காக ?

அரசுகளும் அதிகாரிகளும் யாருக்காக ?

மக்களுக்காகத்தானே ?

அந்த நீதிபதிகளுக்கு எதிரான விமர்சனங்களை செய்ய மக்களுக்கு உரிமை இல்லையா ?

ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கணக்குப் பிழையோடு விடுவித்த குமாரசாமி யோக்கியனா ?

அவரை என்ன செய்ய முடிந்தது உங்களால் கிருபாகரன் ? இன்று நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் அனைத்தும், பண பேரங்கள் இல்லாமல் நடைபெறுகின்றன என்று உங்களால் உறுதியோடு சொல்ல முடியுமா கிருபாகரன் ?

நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாது என்ற ஆங்கிலேயனின் சட்டம் உளுத்துப் போய் பல வருடங்கள் ஆகிறது. அதைக் காட்டி எங்களை பயமுறுத்தலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் உட்பட நீதிபதிகள் அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே. நீதிபதிகளை தொடர்ந்து விமர்சிப்போம்.

இதற்காக என்னை உங்களால் தூக்கில் போட முடியாது. சிறையில்தான் தள்ள முடியும்.

சிறையிலிருந்து வெளியே வந்து, இதை முன்னை விட தீவிரமாக செய்வேன். நான் சாகும் வரை செய்வேன்.

Leave a Reply

You must be logged in to post a comment.