புதுதில்லி:
அரசுப் பள்ளிகளிலிருந்தும், உழைக்கும் வர்க்கக் குடும்பங்களிலிருந்தும் வரும் மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக, தில்லி பல்கலைக்கழகமானது, கட்-ஆப் மதிப்பெண்களை உயர்த்தியுள்ளது. இதற்கு எதிராக தில்லியில் இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து போராட்டத்தை துவக்கியுள்ளன.தில்லிப் பல்கலைக் கழகத்தின் மொத்த பட்டதாரி மாணவர்களுக்கான எண்ணிக்கை 56 ஆயிரம் ஆகும். இந்த இடங்களுக்கு நடப்பாண்டில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 544 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தில்லியில் மட்டும் 12-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரம். தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிகமான அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால், இவர்களுக்கான போதிய உயர்கல்வித் தேவைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை, கல்லூரிகளை மத்திய ஆட்சியாளர்களும், தில்லி மாநில ஆட்சியாளர்களும் உருவாக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளில், புதிதாக ஒரு அரசுக் கல்லூரியைக் கூட இவர்கள் திறக்கவில்லை.

இந்நிலையில், போதிய இடங்கள் இல்லை என்று கூறி, பின்தங்கிய ஏழைக் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் விதமாக, கட்-ஆப் மதிப்பெண்களை தில்லி பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது.அரசுப் பள்ளிகளில் படித்து வந்தவர்களும், உழைக்கும் வர்க்கத்துக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் உயர்கல்வியைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்கான திட்டமிட்ட சதியே இது என்று இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் குற்றம் சாட்டியுள்ளன.தில்லியில் தனியார் பள்ளிகளில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேண்டா வெறுப்பாகவே மதிப்பெண்கள் அளிக்கப்படுவதாகவும் ஏற்கெனவே புகார்கள் உள்ளன.
அந்த வகையில், கட்-ஆப் நிர்ணயிப்பது, தனியார் மற்றும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கே சாதகமாக முடிகிறது என்று குற்றம் சாட்டியுள்ள இந்திய மாணவர் சங்கம், பல்கலைக்கழக சமூக- பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும்; கூடுதல் அரசுக் கல்லூரிகளை விரைந்து திறப்பதுடன், இருக்கும் கல்லூரிகளில் ‘ஷிப்ட்’ முறையில் மாலைநேரக் கல்லூரிகளைத் துவங்க வேண்டும்; கட்-ஆப்பை ரத்து செய்து விட்டு, நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இக்கோரிக்கைகளுக்காக செவ்வாயன்று தில்லிப்பல்கலைக்கழக வடக்கு வளாகத்தின் முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். தலைவர்கள் சஞ்சீவ் குமார், ரத்தன் குமார் ஆகியோர் உரையாற்றினர்.

தில்லியைச் சுற்றியுள்ள புலம்பெயர்ந்தோர் காலனிகள், சேரிகள் மற்றும் முறைசாராக் காலனிகளில் வசிக்கும் மாணவர்கள்தான் உயர்கல்வி பெறப்படுவதிலிருந்து திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்டு வருவதாகவும், எனவே, அவர்களைத் திரட்டி, மேலும் ஒரு வலுவான போராட்டத்தை நடத்தப் போவதாகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தில்லி மாநிலச் செயலாளர் அமன் சைனி அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: