தூத்துக்குடி:
மோடி அரசின் ஸ்டெர்லைட் நிர்வாக மும் கூட்டுக் களவாணிகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சாடினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்ட கொடூரத்தைக் கண்டித்தும், தொடரும் காவல்துறையின் மனித உரிமை மீறல் களைக் கண்டித்தும் திங்களன்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிருந்தா காரத் பேசியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி கடந்த மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அதில் காவல்துறை துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மே 22ஆம் தேதிக்குப் பிறகு தூத்துக்குடியில் நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் இது. உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், காவல்துறையின் தடியடி, மனித உரிமை மீறலைக் கண்டிப்பதற்காகவும் தூத்துக்குடியில் கூடியிருக்கிறோம்.

மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கடந்த 26 நாட்களாக எந்த ஒரு நிகழ்வையும் யாரும் நடத்தக்கூடாது என்ற சூழலை உருவாக்கியிருந்தது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து இந்த பொதுக்கூட்டத்தை நடத்துகிறது. நீதிமன்றம் அரசியல் கட்சிகளின் ஜனநாயகப்பூர்வ உரிமையை நிலைநாட்டியிருக்கிறது. அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் மதிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடந்து கொள்ள வேண்டும்.

இப்பொதுக்கூட்டத்திற்கு முன்பு, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சில குடும்பங்களை கனத்த மனதுடன் சந்தித்தோம். ஆறுதலைப் பகிர்ந்து கொண்டோம். திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சியின் இரண்டு குழந்தைகளும் தவிக்கிறார்கள். தாளமுத்துநகர் அந்தோணி செல்வராஜின் மனைவி மற்றும் பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகளும் தவிக்கிறார்கள்.

மினி சகாயபுரத்தைச் சேர்ந்த ஸ்னோலினின் தாயார், தனது மகளை இழந்து தவிப்பது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. ஸ்னோலின் எழுதிய டைரி ஒன்றை அவரது தாயார் எங்களிடம் காண்பித்தார். அதில் அந்தப் பெண் ஏராளமான கவிதைகள் எழுதியுள்ளார். அதில் ‘எனது தாயாரின் முகத்தைப் பார்த்துவிட்டு மரணமடைந்தால் மகிழ்வேன்’ என ஒரு கவிதையில் குறிப்பிட்டுள்ளார். அதைப் படித்தபோது மனம் நெகிழ்ந்தது.

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு காவல்துறை என்ன பதில் சொல்லப்போகிறது? இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு? தூத்துக்குடியில் குடிநீரை மாசுபடுத்திய, சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கிய, விவசாய நிலங்களை பாழ்படுத்திய ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தான் பொறுப்பு. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏராளமான சட்டங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் ஸ்டெர்லைட் ஆலை உடைத்து நொறுக்கிவிட்டது. இதற்கு யார் ஆதரவாக உள்ளனர்?

சட்டவிரோதம்
கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த மோடி அரசு அனுமதியளித்துள்ளது. அனுமதியளித்தால் சுற்றுச்சூழல், விளை நிலங்கள் பாதிப்பு உட்பட என்னென்ன பிரச்சனைகள் எழும் என்பதைப் பற்றி அரசு யோசிக்கவில்லை. ஆலையை விரிவுபடுத்த அனுமதி வழங்கியது அப்பட்டமான சட்டவிரோதமாகும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளனர். அரசு தான் விரும்பும் நிறுவனத்திற்கு அனைத்துவிதமான சலுகைகளையும் அளித்து உதவுவது கூட்டுக்களவு முதலாளித்துவம் ஆகும்.ங மோடி அரசும். ஸ்டெர்லைட்டும் கூட்டுக்களவாணிகளாக செயல்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையின் தாயான வேதாந்தா நிறுவனத்தின் தலைமையகம் லண்டனில் உள்ளது. வேதாந்தா குழுமம் முன்பு காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவு நிதியளித்து வந்தது. பாஜக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பின் அவர்களுக்கு அதிக நிதி அளித்து வருகிறது. இதற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற வகை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்தேதியிட்டு திருத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி
பாரதிய ஜனதா(மக்கள்) கட்சி பாரதிய ஜனதா (மக்களை துன்புறுத்தும்) கட்சியாக மாறிவிட்டது.ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முதல் குற்றவாளி மோடி அரசு. இதற்கு ஒத்து ஊதுகிறது தமிழக அதிமுக அரசு. ஆலையை நிரந்தரமாக மூடு என முழங்கும் அதே நேரத்தில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராகவும் அவர்களுக்குத் துணைபோகும் தமிழக அரசுக்கு எதிராகவும் நாம் நமது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

காவல்துறை மீது ஒரு வழக்கு கூட பதியாதது ஏன்?
ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், விவசாயம், சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்படுகிறது என மக்கள் குரல் எழுப்பியபோது அதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ ஏன் என்று கேட்க முன்வரவிலை. மக்களின் குரல்கள் அவர்களின் காதுகளுக்கு கேட்கவில்லையா?
100-வது நாளன்று நடைபெற்ற பேரணியில் தாய்மார்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளனர். முதியவர்கள் சாப்பாடு கட்டி எடுத்துக்கொண்டு வந்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தங்களது போராட்டத்தை அமைதியான தொடர்வதற்காக வந்தார்கள். ஆனால் அந்த அமைதியான போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைக் கொன்றுவிட்டது.

பேரணி நடைபெற்ற நாளன்று வன்முறையில் ஈடுபட்டார்கள் எனக்கூறி ஏராளமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 13 பேரைக் கொன்ற காவல்துறை மீது ஒரு வழக்கு கூடப் பதிவு செய்யப்படவில்லை.

பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்
இரவு நேரங்களில் சாதாரண உடையில் வீடுகளுக்குச் சென்ற காவலர்கள் வீட்டின் கதவுகளைத் தட்டியுள்ளனர். சில வீடுகளின் கதவுகளை உடைத்துள்ளனர். ஒரு கிராமத்தில் பெண்கள் கோவிலில்தான் படுத்துத் தூங்குவதாக நம்மிடம் வேதனையோடு கூறினார்கள். குறிப்பாக ஆண் காவலர்கள் இரவில் வீட்டின் கதவைத் தட்டி ஏன் பெண்களை துன்புறுத்த வேண்டும். இது மனித உரிமைக்கு, மனித நேயத்திற்கு எதிரானது. தேவைப்பட்டால் பகலில் சென்று விசாரணை நடத்தட்டும். இனிமேல் இரவு நேரங்களில் வீடுகளுக்கு காவலர்கள் செல்லமாட்டார்கள் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இது அமலாக்கப்பட வேண்டும். இரவு நேர நடவடிக்கை தொடர்ந்தால் பெண்கள் தைரியமாக, துணிச்சலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகுங்கள். அது உங்களுக்குத் துணை நிற்கும்.

ஏன் மூட வேண்டும்
காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட ஜான்சி குடும்பத்தினரிடமும், கிராம மக்களிடமும் இனி என்ன செய்ய வேண்டுமெனக்கேட்டோம். அதற்கு ஜான்சியின் கணவரும், கிராம மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் போதும் என்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே தொழிற்சாலைகளை மூடுங்கள் என்று கோரிக்கை வைப்பதில்லை. புதிய தொழிற்சாலைகளைத் திறங்கள் என்று தான் கோரிக்கை வைக்கும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. ஏனென்றால், அது சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டது, விளை நிலங்களை பாழ்படுத்திவிட்டது. ஏழை-எளிய மக்களின் வாழ்க்கையை சிதைத்து விட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைவான கூலி கொடுத்து அவர்களது உழைப்பைச் சுரண்டியுள்ளது. இந்த நிறுவனத்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. எனவே தான் மூடச் சொல்கிறோம்.

100 கோடி எங்கே?
உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. அது என்னவானது என தூத்துக்குடி ஆட்சியரிடமும், காவல்துறை ஐ.ஜி.யிடமும் கேள்வியெழுப்பினோம். புதிதாக வந்த ஆட்சியருக்கு அது பற்றித் தெரியவில்லை. ஆனால் ரூ.100 கோடி என்னவானது என ஆளும் அதிமுக அரசுக்கு நன்றாகத் தெரியும். இந்தப் பணம் கிராம மக்களுக்கு செலவழிக்கப்படவில்லை.

மோடி அரசு ‘மேக் இன் இந்தியா’ எனக் கூறுகிறது. குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி கிராமங்களில் ஆறு குடங்களை வைத்து தண்ணீர் கொண்டுவரும் வண்டியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியான காப்பர் சல்பேட் தண்ணீரில் கலந்து அது பழுப்புநிறமாக மாறிவிட்டது. நல்ல தண்ணீரை வெகு தொலைவிலிருந்து கொண்டு வருவதற்காக அவர்கள் அந்த வண்டியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதான் ‘மேக் இன் இந்தியா’.

உச்சநீதிமன்றம் விதித்த அபராதம் ரூ.100 கோடியைக் கொண்டு இந்தக் கிராமங்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்கியிருக்க முடியும். ஆனால் வழங்கவில்லை. சுத்தமான குடிநீர் வழங்குவது உள்பட இந்த நிதியைக் கொண்டு கிராம மக்களுக்கு என்னென்ன செய்யலாம் என்பதை அந்த கிராம மக்களிடமே விவாதித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். இதற்காக கிராம சபைகளைக் கூட்டி விவாதிக்க வேண்டும்.

வழக்குகளை முற்றாக வாபஸ் பெறுக!
பேரணியில் பங்கேற்ற காரணத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விவசாயிகள், உழைப்பாளி மக்கள். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை முற்றாக வாபஸ்பெற வேண்டும்.சிலர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஆலையை மூடு என வலியுறுத்துவதில் இந்தியாவின் பாதுகாப்பு எங்கே சம்பந்தப்பட்டுள்ளது? தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் மீது மோடி அரசு தவறாக ஏவியுள்ளது. தில்லியில் உள்ள பெரிய அண்ணன் பின்பற்றும் அதே பாதையை தமிழகத்தில் ஆளும் சிறிய அண்ணன்மார்களும் பின்பற்றுகிறார்கள். அப்பாவி மக்கள் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும்.

தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கு பாராட்டு
இந்த மாபெரும் போராட்டத்தில் நமது இதயப்பூர்வமான பாராட்டுகளுக்கும் நன்றிகளுக்கும் உரியவர்கள் தூத்துக்குடியின் வழக்கறிஞர்கள்.ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இவர்களுக்காக வழக்கறிஞர்கள் இலவசமாக வாதாடியுள்ளனர். இன்னும் பலருக்கு வாதாட உள்ளனர். அந்த வழக்கறிஞர்களை மனதாரப் பாராட்டுகிறோம். போராடும் மக்களுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்து அவர்கள் மேற்கொண்டுள்ள சட்டப் பணிகள், நாட்டிற்கே முன்னுதாரணம் ஆகும்.

கடுமையான பொருளாதார நெருக்கடி, புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பு இவற்றால் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். மற்றொருபுறத்தில் அவர்களை சாதி ரீதியாக, மத ரீதியாக பிரிக்க முயற்சி நடைபெறுகிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்கள் சாதி கடந்து, மதம் கடந்து ஒன்றிணைந்து போராடியுள்ளார்கள். அவர்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அந்தப் போராளிகளின் தியாகம் வீண் போகாது.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறுதிவரை உரத்துக்குரல் கொடுக்கும்.
இவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.