நகர்ப்புறம் சார்ந்த கட்சியாகக் கருதப்படுகின்ற பாரதிய ஜனதா கட்சி, நகரங்களில் அதிக செல்வாக்கைக் கொண்டிருப்பதாகவும், ஆட்சியதிகாரத்தில் தனக்கு முன்பிருந்தவர்களை விட நகர்ப்புற பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறந்து விளங்குவதாகவும் நம்பப்படுகிறது.ஆனால் தன்னுடைய சொந்தப் பலத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய அந்தக் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளில் நகரங்களில் வாழ்கின்ற மக்களை முற்றிலும் ஏமாற்றியே இருக்கிறது.

இன்று மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களிலேயே  வாழ்கின்றனர். 7,935 சிறிய மற்றும் பெரிய நகரங்களும், 68 முதல் தர நகரங்களும்  இந்தியாவில் இருக்கின்றன. இந்த நகரங்கள் அனைத்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டமக்கள் வசிக்கின்ற  நகரங்களாக இருக்கின்றன. நகர்ப்புற மக்களில்  ஏறத்தாழ 70 சதவீதமானோர்  இங்கிருக்கும் முதல் தர நகரங்களுக்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கும்,  மொத்த அரசாங்க வருவாயில் 90 சதவீதமும் நகரங்களில் இருந்தே கிடைப்பதால், அவை வளர்ச்சிக்கான அதிகார மையங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறான இடங்களில் வசிக்கின்ற மக்களிடம்மிகுந்த எதிர்பார்ப்புகளும், பாதுகாப்பான எதிர்காலம் குறித்த  ஆவலும் சேர்ந்தே இருக்கின்றன.  தினசரி வாழ்க்கையே போராட்டமாகிப் போன குடிசைகள் நிறைந்த சேரிப் பகுதிகளிலேயே பெருநகரங்களில் வசிக்கின்ற மக்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பத்து லட்சத்திற்கு குறைவான மக்கள் வசிக்கின்ற  நகரங்களில் உள்ள 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள் இவ்வாறான குடிசைப் பகுதிகளிலேயே
வாழ்கின்றனர். முறையான வேலைகள், போதுமான வசதிகள் ஆகியவற்றுடன் தங்களுடைய வாழ்வாதாரத்திற்குத் தேவையான சமூகம் மற்றும் பொருள் ஆகியவற்றைக் கொண்ட நல்ல
உள்கட்டமைப்பு  வசதிகளைத் தருகின்ற  கௌரவமான வாழ்க்கையை  வேண்டுபவர்களாகவே அந்த  மக்கள்  இருக்கின்றனர்.

நகர்ப்புற மக்களுக்கு பாஜக அளித்த உறுதிமொழிகள்

அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான முன்னேற்றம்; கிராமங்கள் மற்றும் நகரங்களில்  உள்ள அனைவருக்கும் தரமான வாழ்க்கை, அடிப்படை வசதிகள்; பெரிய அளவிலான  உள்கட்டுமான வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து தொடர்பான முக்கியமான மாற்றங்கள், நிலைத்தன்மையுடன் பெரிய அளவிலான உள்கட்டமைப்புடன் கூடிய 100 புதிய  நகரங்கள்; தற்போதுள்ள நகர்ப்புறங்களை மேம்படுத்துதல், அடிப்படை உள்கட்டமைப்பிலிருந்து கழிவு மற்றும் நீர் மேலாண்மை போன்ற பொதுப் பயன்பாட்டுச் சேவைகளைநோக்கித்  திரும்புவது;  ஏழைகளுக்கு  அதிகாரமளித்தல்  போன்ற வாக்குறுதிகளை  வெளிப்படையாக   அறிவித்த  பாஜக, உள்ளூர் அரசாங்கத்தைப் பலப்படுத்துதல்; அவற்றின் நிதியை  மேம்படுத்துதல்; அனைவருக்குமான மலிவான வீடுகள்; முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் நீர்,  மின்சாரம், போக்குவரத்து போன்ற சேவைகளில் உள்ள குறைபாடுகளை நீக்குவது போன்றவை  இந்த ‘உன்னதமான’ இலக்குகளை நிறைவேற்றுவதற்கான கருவிகளாக இருக்கும் என்றும் தெரிவித்தது. இருந்தாலும் பாஜக அரசின் செயல்பாடுகள் இந்தவாக்குறுதிகளுக்கு  சற்றும்  தொடர்பில்லாமல் போனதன் விளைவாக, அந்த இலக்கை அடைவது என்பதை விட
நெருங்குவதே இயலாமல் போனது.

நகர்ப்புற ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளை உருவாக்கித் தருவோம் என்று பாஜக  உறுதியளித்திருந்த போதிலும்,  3.61 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டிருப்பதாக சமீபத்திய  மதிப்பீடு  ஒன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த அளவானது, உறுதியளிக்கப்பட்டிருந்த எண்ணிக்கையில் 1.8 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. இதுவரையிலும் கட்டப்பட்டுள்ள அனைத்து வீடுகளின் எண்ணிக்கையில் 87 சதவீதம் இதற்கு முன்பாகவே திட்டமிடப்பட்டிருந்த திட்டங்களின்  தொடர் நடவடிக்கையாகவோ அல்லது   அவற்றோடு  இணைந்த நடவடிகைகளாகவோ இருப்பதுவும் இங்கே  கவனிக்கத்தக்கது.

100 ஸ்மார்ட்  நகரங்களை  உருவாக்குவதற்கான திட்டம் என்பது நகர உள்கட்டமைப்பைத்  திட்டமிடுவதற்கான மிக முக்கிய திட்டமாகக் கருதப்பட்டது. மற்ற  நகரங்களின்  முன்னேற்றத்திற்கான கலங்கரை விளக்கமாக இந்த நகரங்கள் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ஸ்மார்ட் நகரத் திட்டம் என்பது ஒரு முற்றிலும் குழப்பம்   நிறைந்த  திட்டமாகவே இருக்கிறது. பாஜககூட இந்தத்  திட்டத்தைப் பற்றி அதிகம் பேசுவதற்கு  விரும்பவில்லை என்பதே இன்றைய  யதார்த்தம். இந்த  ஸ்மார்ட்  நகரங்களுக்கான முதலீட்டுவியூகம் என்பது நகரத்தின் அளவைப் பொறுத்து, சிறிய நிலப்பரப்பிற்கான பகுதி சார்ந்த வளர்ச்சி (Area based development  – ABD), போக்குவரத்து முதலானவற்றிற்கான தகவல், தகவல் தொடர்பு  மற்றும் தொழில்நுட்பம் (ICT) சார்ந்த தீர்வுகளை முக்கியமானதாகக்கொண்ட நாடு முழுமைக்குமான நகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி என்று இரண்டு கூறுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் நகரங்களில் உள்ள 9 சதவிகித மக்கள் மீது  தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பகுதி சார்ந்த வளர்ச்சிக்கு (ABD) மட்டுமே, இந்த திட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள மொத்த  வரவு செலவு திட்டத்தில் 90 சதவீதம்  பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் நகரத் திட்ட வடிவமைப்பானது, நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்படுகின்ற அமைப்புகளின் நேரடி அதிகாரத்தின் மீது சவாலை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. ஸ்மார்ட்  நகரத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான சிறப்பு நோக்கு வாகனம் (Special Purpose Vehicle – SPV) என்கிற அமைப்பு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.  ஆனால்  மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நகராட்சி அமைப்போ SPVஇல் உறுப்பினராக  இருப்பதில்லை. சிறப்பு நோக்கு வாகனம் என்பது நகராட்சிக்கு பதில் சொல்லவேண்டிய
அமைப்பாக இல்லாமல், அதிகாரி ஒருவரின் கீழ் அல்லது உலக வங்கி அதிகாரிகள் சிலரின்
தலைமையில் செயல்படுவதாக இருக்கிறது. ஆட்சி முறையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்  இத்தகைய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அந்தத் திட்டத்தின் கீழ் பணி புரிய பலநகரங்களும் மறுத்துவிட்டன.

ஸ்மார்ட் நகரத் திட்டங்களைச் செயல்படுத்துவதும் மிகவும் மெதுவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் நகரத் திட்டங்களின் (SCP) கீழ் 60க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து 7 சதவீத நிதி மட்டுமே  தரப்பட்டுள்ளது. இதுவரையிலும் 5சதவீத திட்டங்களே முழுமையடைந்திருக்கும் நிலையில், 70 சதவீத திட்டங்கள் இன்னும் முழுமையடையாமல்  நடைபெற்று வருகின்ற நிலையிலேயே உள்ளன. நகர்ப்புற வளர்ச்சிக்கான  நிறுவனக் கட்டமைப்பை  ஒருங்கிணைப்பதற்காக நகராட்சிகளை மேம்படுத்துவதில் இந்த ஸ்மார்ட் நகர திட்டம் தவறிவிட்டது.  இதற்கும் மேலாக, ஸ்மார்ட் நகரத் திட்டம் சில குறிப்பிட்ட முன்னேற்றங்களை மட்டுமே முன்னிறுத்துவதாக இருக்கிறது.

நகரங்களில் இருந்து ஏழைகளை வெளியேற்றுவது என்பது தடையின்றித் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. வியாபாரத்திற்கான செயல்முறைகளை ஒழுங்கமைப்பதற்கான கருவியாக உருவாக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கான சட்டம் மிக அரிதாகவே செயல்படுத்தப்பட்டுள்ளது. நகரங்களில் வீடற்ற நிலை என்பது கடந்த சில ஆண்டுகளில்  மிகவும் அதிகரித்துள்ளது. மக்கள்  வெளியேற்றப்படுவது அல்லது வீடுகள் இடிக்கப்படுவது என்பது 54 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் நடைபெற்றிருப்பதாக அண்மையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பாஜகவின் மற்றுமொரு முக்கிய திட்டமாக, அம்ருத் என்றழைக்கப்படும் நகர்ப்புறங்களுக்கு புத்துயிர் அளிப்பது மற்றும் மாற்றத்திற்கான அடல் திட்டம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation – AMRUT). இருக்கிறது. தண்ணீர் மற்றும் சுகாதார விநியோகத்தில் உள்ள இடைவெளியை நிரப்புவதாக இந்த திட்டட்தின் நோக்கம் இருக்கிறது. குடிசைகள் மற்றும் பிற பகுதிகளிலுள்ள தண்ணீர் கட்டமைப்புகள் அம்ருத் திட்டத்தின் கீழ் உரிய மாற்றத்தைப்  பெற வேண்டும். நகர்ப்புற ஏழைகளுக்கு  தண்ணீர்வழங்குவதற்கான மத்திய உதவி என்பது இதுவரை 19 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பதால், இந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் இருக்கின்ற வாய்ச்சவடால்கள் அனைத்தும் அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான உண்மையான நோக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. நகரங்களில் உள்ள ஏழைகள் தண்ணீருக்காக அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  தண்ணீரை வழங்குவதற்குத் தேவையான இணைப்புகள் இல்லாததால், தண்ணீர் விநியோகத்திற்காக மற்ற வழிமுறைகளையே அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த குடியிருப்புகளுக்கு நேரடியாகவோ அல்லது லாரிகள் மூலமாகவோ தண்ணீரை வழங்குவதில் பெருநிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட  தனியாருக்கும், நகராட்சி அமைப்பிற்கும்  இடையே பெரிய அளவிலான தொடர்பு இருக்கின்றது.

மத்திய  அரசாங்கத்தின்  பெரும்பகுதி  விளம்பரங்களை  தூய்மை இந்தியா திட்டம் (Swach Bharat Mission (SBM)) தன்வசமாக்கிக் கொண்டது. 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டில் ஒரு கோடி கழிப்பறைகளை நிர்மாணிப்பதன்மூலம் திறந்த வெளியில் மலம் கழிப்பதை இல்லாமல் செய்வது, அறிவியல் மேலாண்மை கொண்டு நகராட்சி திடக் கழிவை (MSW) மேம்படுத்துவது ஆகியவற்றைப் பிரதான குறிக்கோள்களாகக் கொண்டிருந்தது. பலத்த பிரச்சாரங்களுக்குப் பிறகும், 1.04 கோடிகழிப்பறைகளைக் கட்ட வேண்டும் என்ற அதனுடைய இலக்கில், 34 சதவிகித கழிப்பறைகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தத்  திட்டம் முற்றிலும் ஒரு பக்கமானதாகவே உள்ளது. இந்தக் கழிப்பறைகளில் இருந்து கழிவுகளை அகற்ற முடியாத போது, நிலைமை இன்னும் மோசமாகி விடும். முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (sewage treatment plants – STP) உருவாக்கப்படாமல், கழிவுநீரை அருகிலுள்ள கால்வாய்களில் கலந்து விடுவதால் நிலைமை இன்னும் மோசமடையும். நகர்ப்புற இந்தியாவில்உருவாகின்ற கழிவுப் பொருள்களில் 78 சதவீதத்திற்கும் அதிகமானவை உரிய முறையில் சுத்திகரிக்கப்படவில்லை என்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புற  வளர்ச்சிக்கான  பாராளுமன்ற  நிலைக்குழுவும் (2017-18) யதார்த்தமான கணிப்புக்கள் மற்றும்  திட்டமிடல்ஆகியவை தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்று குறை கூறியிருக்கிறது.  மேலும்  இந்த திட்டத்தின் முக்கியமான முயற்சிகளுக்காக வரவு-செலவுத்  திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதால் நாட்டின் விரைவான ஆளுமை  என்கிற பலூனில் ஓட்டை விழுந்திருப்பதாக அந்தக் குழுவின்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் பாதிக்கப்படுகின்ற நகர்ப்புற ஏழைகள்

கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தொழிலாளர்கள் முறைசாராத் தொழில்களில் வேலை செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாததொரு உண்மையாக இருக்கிறது. இவர்களுக்குத்தான் அடிப்படைச் சேவைகள் மிகவும் உடனடியாகத் தேவைப்படுகின்றன. பாஜக அரசாங்கத்தால் மிகவும் ஆர்வத்துடன்  தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (National Urban Livelihood Mission – NULM)  தொடங்கப்பட்டது.  இந்தத் திட்டமானது ஐக்கிய முற்போக்கு  கூட்டணி அரசால் துவங்கப்பட்ட  ஸ்வரன் ஜெயந்தி ஷெஹ்ரி ரோஜ்கர்யோஜனா (Swaran Jayanti Shehri Rozgar Yojana – SJSRY) என்ற திட்டத்தின் மாறுபட்ட வடிவமாகவே இருக்கிறது. மற்ற அரசுத் திட்டங்களை ஒப்பிடும் போது, இந்தத் திட்டத்தில் மெதுவான மற்றும்
குறைவான முன்னேற்றமே ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 30 சதவீத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்போ அல்லது கல்வி அல்லது  பயிற்சியில் ஈடுபடவதற்கான வாய்ப்போ இருக்கவில்லை என்று ப்ளூம்பெர்க்  அறிக்கை கூறுகின்றது. மக்கள்தொகைப் பெருக்கமானது சமூகப்  பொருளாதாரக்  கொடுங்கனவாக மாறி விடும் என்று அந்த அறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தமுள்ள தொழிலாளர்களில் இருக்கும் தகுதி வாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அமெரிக்க நாடுகளில் 52 சதவிகிதம், பிரிட்டனில் 68 சதவிகிதம், ஜெர்மனியில் 75 சதவிகிதம்,ஜப்பானில் 86 சதவிகிதம், கொரியாவில் 96 சதவிகிதம், சீனாவில் 50 சதவிகிதம் என்றிருக்கும் வேளையில், இந்தியத் தொழிலாளர்களில் 4.69 சதவிகிதம் பேர்  மட்டுமே தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.   

அதிக திறனை வளர்த்துக் கொண்டுள்ள தொழிலாளிக்கு, வேலைகளில்  இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான பங்கிற்காகப்  பேரம் பேசுகின்ற திறன் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் அந்த நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. பல்வேறு துறைகளில் திறமை கொண்டவர்களாக 40 கோடி இளைஞர்களை மாற்ற வேண்டும் என்ற பாஜக அரசின் இலக்கு நகைப்பிற்குரியதாக மாறியிருக்கிறது. அந்த இலக்கில் 12 சதவீதம் கூட இன்னும் எட்டப்படவில்லை என்று தெரிய வருகிறது. இதில் மற்றொரு முக்கிய அம்சம்  என்னவென்றால், நாட்டில் உள்ள 69 சதவீத வேலைகள் இயந்திரங்களின் மூலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்தியாவில் உள்ள  வேலைகளுக்கான  மற்றொரு சவாலாக செயற்கை நுண்ணறிவு (AI) இருக்கிறது.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நகரங்களில் முறைசாராத் துறைகள் அதிகமாகி  உள்ளன. நகர்ப்புற முறைசாராப் பொருளாதாரம் என்பது வீடுகளில், தெருக்களில்,  சாலையோரங்களில், நடைபாதைகளில், திட்டமிடப்படாத மற்றும் அங்கீகரிக்கப்படாததொழில்துறை பகுதிகள் மற்றும் சந்தைகளில் நடைபெறுவதாகவே இருக்கிறது. பெரும்பான்மையான தொழிலாளர்கள், தொழிலாளர் நல வாரியங்களின் வரம்பிற்குள் வரவில்லை. கடந்த 4  ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த துறைகளில் இருந்து ஏராளமானோர் வெளியேற்றப்பட்டதால்,  தொழிலாளர்களின் நிலைமை மேலும் மோசமாகி, அவர்களுடைய பொருளாதாரத்தின் மீதான பாதிப்பு அதிகரித்திருக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவையும் அவர்களுடைய பொருளாதாரத்தைச் சிதைத்திருப்பதன் விளைவாக, ஏழைகள் மேலும்  ஏழைகளாக்கப்பட்டுள்ளனர்.

ஆக மோடி அரசாங்கத்தின் கடந்த நான்கு ஆண்டு காலத்தில், ஏற்கனவே தங்களுடைய வேலைகளை இழந்துள்ள நகர்ப்புற மக்கள், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகள் மோசமடைந்திருப்பதன் விளைவாக தங்களுடைய வாழ்வைச் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

http://peoplesdemocracy.in/2018/0610_pd/four-years-modi-govt-disaster-urban-populace

– தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு, விருதுநகர்

Leave A Reply

%d bloggers like this: