கோவை,
பெட்ரோலிய பொருட்களின் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தி கோவையில் நடைபயணம் மேற்கொண்ட சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

சாலைபோக்குவரத்து தொழிலை நம்பி நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை எண்ணை நிறுவனங்களே தீர்மானிப்பதால் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்வதோடு, மோட்டார் தொழிலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. ஆகவே இத்தொழிலை பாதுகாக்கவும், விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்கவும் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.

இதேபோல் வாகனங்களுக்கு செலுத்தப்படும் இன்சூரன்ஸ் பிரிமிய கட்டணத்தில் அரசின் பங்கை குறைத்து, தனியார் பங்கை அதிகப்படுத்தியதன் காரணமாகஇன்சூரன்ஸ் பிரிமிய தொகை கடுமையான உயர்ந்துள்ளது. இவ்வாறு கார்ப்ரேட்டுகளின் லாபத்திற்காக சாலை போக்குவரத்து தொழிலாளர்களை நசுக்காதே என்கிற முழக்கத்தை முன்வைத்து சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று கோவையில் நடைபயண இயக்கத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த நடைபயணத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இருப்பினும் கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தடையை மீறிசாலை போக்குவரத்து தொழிலாளர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டதலைவர் வேணுகோபால், பொதுச்செயலாளர் ஏ.எம்.ரபீக் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைபயணத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் (பொ) எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் அணிவகுத்தனர்.

இதையடுத்து நடைபயணம் மேற்கொண்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதன்காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: