திருப்பூர்,
திருப்பூரில் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செவ்வாயன்று அரசு பள்ளி முன்பு வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரை அடுத்த செட்டிபாளையம் அன்னையம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் – கலாதேவி தம்பதியினர். இவர்களுடைய மகள் காவ்யாஸ்ரீ, திருப்பூர் வெங்கமேட்டில் உள்ள வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்புபடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த காவ்யா கழிவறை சென்று அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவரது தற்கொலைக்கு வகுப்பு ஆசிரியர்கள் திட்டியதே காரணம் எனவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது பெற்றோர் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையிடம் புகார் அளித்திருந்தனர். ஆனால், ஒரு வார காலமாகமாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவி மரணம் தொடர்பாக விசாரணையை நியாயமான முறையிலும் விரைந்து நடத்தக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாயன்று வெங்கமேட்டில் உள்ள வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த போராட்டத்தில் வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ், செயலாளார் சிகாமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜாமணி, சதீஸ், பிரதீப், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட துணை செயலாளர் சம்சீர் அகமது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: