சேலம்,
விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வந்த சமுக ஆர்வலர் பியூஸ் மானூஷை காவல்துறையினர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓமலூர் காவல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள விமான நிலைய விரிவாக்கத்திற்காக நான்கு கிராமங்களில் உள்ள 570 ஏக்கர் விவசாய நிலங்கள் எடுக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை முதல் சேலம் வரையில் பசுமை சாலை அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டு நிலங்கள் அளவிடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிலம் கையகப்படுத்துவது சம்மந்தமான கருத்து கேட்பு கூட்டத்தில் தங்களது நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனிடையே நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பேசி வந்த நடிகர் மன்சூர் அலிகானை ஞாயிறன்று தீவட்டிப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானூஷை திங்களன்று இரவு ஓமலூர் காவல்துறையினர் கைது செய்தனர். இதன்பின் அவரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையை கண்டித்து காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்களன்று நள்ளிரவு ஓமலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். அப்போது, விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை. ஆகவே, இங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறினர். ஆனால், காவல் நிலையத்திற்குள் சென்று பார்த்தபிறகு தான் செல்வோம் என விவசாயிகள் ஆவேசமாக கூறினர். இதன்பிறகு சிலரை மட்டும் காவல்நிலையத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அதற்குள் சமூக ஆர்வலர் பியூஸ் மானூஷை காவல்துறையினர் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றதால் அவர் அங்கு இல்லை. இதனை தொடர்ந்து விவசாயிள் அனைவரும் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் ஓமலூர் காவல்நிலையத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பான சூழல் காணப்பட்டது.

மாணவி வளர்மதி கைது:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் வளர்மதி. இவர் செவ்வவாயன்று சேலம் – சென்னை இடையிலான பசுமை வழிச்சாலை குறித்தும், அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் வளர்மதியைகுண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். முன்னதாக, இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியேவந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.