நரேந்திர மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் உருண்டோடிவிட்டன. எண்ணற்ற வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வீசித்தான் அவர் ஆட்சிக் கட்டிலில் ஏறினார். அவர் பெண்கள் குறித்தும் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார்.  2014 பொதுத் தேர்தலின்போது பாஜக வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், “பெண்கள் – நாட்டைக் கட்டி எழுப்புபவர்கள்” என்ற தலைப்பின் கீழ் பெண்களின் பங்களிப்புகள் குறித்து படாடோபமான வார்த்தைகளை அள்ளி வீசியிருந்தது. நாட்டின் வளர்ச்சியிலும், சமூகத்தின் வளர்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு குறித்து பாஜக நன்கு புரிந்துகொண்டிருக்கிறது என்று அதில் குறிப்பிட்டிருந்ததுடன், பெண்களை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் சுய கால்களில் நிற்க வைத்திடவும், உறுதியான நடவடிக்கைகளை எடுத்திடும் என்றும் அளந்திருந்தது. பெண்களின் சுகாதாரம், கல்வி மேம்பாட்டிற்காக திட்டங்கள் தீட்டப்படும் என்றும் உறுதிமொழிகளை அளித்தது. அதேபோன்று நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தது.

ஆனால், பாஜக தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் நிறைவேற்றிட கடந்த மோடியின் நான்காண்டு கால ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பெண்களின் வாழ்நிலைமை முன்பை விட மிக மோசமான நிலைக்குத் தள்ளப் ட்டிருக்கிறது.

மோடியின் அரசாங்கத்தில் மொத்தம் உள்ள 75 அமைச்சர்களில் வெறும் ஒன்பது பேர் மட்டுமே பெண்கள். பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்குத் தேவையான எண்ணிக்கைகளை பாஜக பெற்றிருந்தபோதிலும்கூட, அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திடவில்லை. இன்னும் ஆட்சிக்கான காலம் ஓராண்டாக இருக்கக்கூடிய நிலையில் அதனைக் கொண்டு வந்திடும் என்பது சந்தேகமே.

பெண்களுக்கான வேலைவாய்ப்பு

பெண்கள் மேம்பாட்டிற்கும் அவர்கள் தங்கள் சுய கால்களில் நிற்பதற்கும் மிகவும் அவசியம் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பது என்பதாகும். வேலைவாய்ப்பில் பெண்களுக்கான பங்களிப்பு  என்பது எப்போதுமே குறைவாகத்தான் இருந்து வந்திருக்கிறது. தொழிலாளர் நல நிலையம் (லேபர் பீரோ) மேற்கொண்ட வேலைவாய்ப்பின்மை தொடர்பான ஆய்வறிக்கையானது, 2013-14ஆம் ஆண்டில் 25.8 சதவீதமாக இருந்த  உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை, 2015-16இல் 23.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. உலகிலேயே மிகவும் குறைவான சதவீதத்துடன் பெண்களின் வேலைவாய்ப்பு இருக்கும் நாடுகளில் நம் நாடும் ஒன்றாகும்.  அதேபோன்று மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலையின்மை என்பது 7.7 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. எனவே மோடி அரசாங்கமானது வேலையின்மையை நிறுத்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ எவ்வித நடவடிக்கையையும் எடுத்திடவில்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. மோடியின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக பெண்களுக்காகவென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்மையில், மோடி அரசாங்கமானது பெண் ஊழியர்களை எந்த நேரத்திலும் வேலையிலிருந்து தூக்கி எறியக்கூடிய விதத்தில் ‘கேசுவல்’ ஊழியர்களாகவே வைத்திருக்கிறது. அவர்களின் வேலைப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற எதனையும் நிறைவேற்றிட மோடி  அரசாங்கம் தயாராயில்லை.  நாட்டிலுள்ள அரசாங்கத்தின்  ஐசிடிஎஸ், என்எச்எம், மதிய உணவுத் திட்டம் (ICDS, NHM, Mid-day Meal Scheme) போன்ற பல திட்டப் பணிகளில் அநேகமாக பெண்கள்தான் பணியாற்றுகிறார்கள்.இவர்கள் அடித்தட்டு மக்களுக்கு அவசியத் தேவையாக விளங்கும் சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கையில், அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியங்கள் அதிகரிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தபோதிலும், மோடி அரசாங்கம் 2014-15இல் சமர்ப்பித்த முதல் பட்ஜெட்டில் திட்டப் பணிகளுக்காக 18,108 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்து 2015-16இல் அத்தகைய ஒதுக்கீட்டுக்கான தொகையை 8,400 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டது.   இப்பொது 2017-18க்கான ஒதுக்கீடாக 16,334.88 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தபோதிலும், இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட தொகையைவிடக் குறைவேயாகும்.

பெண்களின் சுகாதாரத்தைப் பேணிப்பாதுகாக்கக்கூடியவிதத்தில் அவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய விதத்தில் திட்டங்கள் எதையும் மோடி அரசாங்கம் கொண்டுவரவில்லை. 15 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட வயதைச் சேர்ந்த பெண்களில், கர்ப்பிணி அல்லாத 53.1 சதவீதப் பெண்களும், கர்ப்பிணிப் பெண்களில் 50.3 சதவீதப் பெண்களும் ரத்தச்சோகை நோயால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர் என்று 4வது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை (2015‑16) தெரிவிக்கிறது. கர்ப்பிணிப் பெண்களில் 21 சதவீதத்தினர் மட்டுமே  தேவையான மருத்துவப் பாதுகாப்பு வசதிகளைப் பெறக்கூடியவர்களாக இருக்கின்றனர்.    கர்ப்பிணிப் பெண்களில் 36.4 சதவீதத்தினர் மட்டுமே தாய்-சேய் மருத்துவத் திட்டத்தின் (Janani Suraksha Yojana)கீழ் நிதி உதவியினைப் பெற்றுள்ளனர். 2016 டிசம்பர் 31 அன்று பிரதமர் மோடி கர்ப்பிணிப் பெண்களுக்காகவும், தாய்ப்பால் அளித்திடும் பெண்களுக்காகவும் ஒரு திட்டத்தை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். உண்மையில் இது இதற்குமுன்பிருந்த மகப்பேறு உதவித் திட்டம் (Maternity Benefits Scheme)தானே தவிர வேறல்ல.  முன்பு முதல் இரு குழந்தைகளுக்கு இத்திட்டத்தின்கீழ் உதவிகள் வழங்கப்பட்டது. இப்போது,  அது ஒரு குழந்தைக்கு மட்டுமே என்று சுருக்கப்பட்டுவிட்டது. மேலும் இத்திட்டத்தினை ஆதார் அட்டையுடன் இணைத்துவிட்டார்கள். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தினைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

மேலும் மேலே குறிப்பிட்ட ஆய்வறிக்கை, நாட்டில் 15க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதில் உள்ள பெண்களில் 41.9  சதவீதத்தினர் குறைந்த எடையுடன் காணப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.  போதிய ஊட்டச்சத்துடனான உணவு இவர்களுக்குக் கிடைக்காததே இதற்குக் காரணமாகும்.  ஆயினும் இதுகுறித்து மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உண்மையில் இத்திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக்கூட மோடி அரசாங்கம் குறைத்துவிட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறை

மோடியின் ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்று தேசியக் குற்றப் பதிவுரு நிலையத்தின் (National Crime Record Bureau) தரவுகள் காட்டுகின்றன. மேலும் பெண்களுக்கு எதிராகக் குற்றம்புரிந்த கிரிமினல்கள் தண்டிக்கப்படுவதுகூட குறைந்துவருகிறது. அந்த லட்சணத்தில்தான் அரசாங்கம் நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்துகின்றன. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், 2013ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின்கீழ் 3,37,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2016இல் இது 3,38,954 என அதிகரித்தது. 2013இல் பெண்கள் மீது வன்புணர்வு மேற்கொண்ட வழக்குகள் 33,307 ஆக இருந்ததானது, 2016இல் 38,947 ஆக அதிகரித்துள்ளது. ஆயினும் இக்குற்றங்களைச் செய்த கயவர்கள் தண்டிக்கப்படுவது என்பது 2013இல் 21.3 சதவீதமாக இருந்தது, 2016இல் 18.9 சதவீதமாகக் குறைந்தது.

உண்மையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்பதற்காகவும், பெண்கள் மீது கொடுமையை ஏவிடும் கணவர்கள் மற்றும் அவடைய உறவினர்களுக்குத் தண்டனை வழங்கிட வேண்டும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டிருந்த இந்தியத் தண்டனைச் சட்டம் 498- A பிரிவையே கூட நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகளில் நீதிமன்றத்துடன் இணைந்து பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்பது சமூகத்தில் நிலவும் இத்தகைய குற்றங்களுக்கு பெண்களையே குறை கூறிவருவதால், அதன் தலைவர்களும், அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அவ்விதத்திலேயே செயல்பட்டு வருவதைப் பார்க்க முடியும். எனவேதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகளை நடத்துவதிலோ அதனைப் புரிந்த கயவர்களுக்குத் தண்டனைப் பெற்றுத்தருவதிலோ பாஜக அரசாங்கங்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

2016ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில்  பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவது அதிகமான அளவில் இருந்தன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் முதல் பத்து மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிக அளவில் இருந்தன என்று அறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன.

பெண்கள் குறித்த இந்துத்துவா பார்வை

பெண்கள் குறித்த இந்துத்துவாவின் பார்வையை ஒருவர் புரிந்துகொண்டாரானால், பெண்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ்/பாஜக அணுகுமுறை மிகவும் தடித்தனமாக இருப்பது குறித்து எவரும் ஆச்சர்யப்பட மாட்டார்கள். மனிதகுலத்தில் ஆண்களுக்குச் சமமாக பெண்கள் இருக்க முடியாது, இருக்கக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் சித்தாந்தமாகும். பெண்களுக்குச் சம உரிமைகள் வழங்கிடவோ அல்லது சுயேச்சையான அடையாளத்துடன் அவர்கள் விளங்குவதையே ஆர்எஸ்எஸ்/பாஜக விரும்பவில்லை. இந்து தேசத்தில் ஒரு பெண் குழந்தையாக இருக்கும்போது தந்தைக்கும், திருமணமானபின் கணவனுக்கும், வயதான பெண் மகனுக்கும் கட்டுப்பட்டே இருந்து, ஆண்களுக்குத் தேவையான பணிகளை எவ்வித முணுமுணுப்பும் இன்றி செய்துவர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகும்.

இதுதான், பெண்களுக்கு வேலைகள், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் உட்பட பெண்களின் பிரச்சனைகள் எதற்கும் அக்கறையற்று பாஜக இருந்து வருவதற்கான ஆணி வேராகும். இதன்காரணமாகத்தான் சமீபத்தில் ஜம்முவில் கத்துவா என்னுமிடத்தில் எட்டுவயது இளஞ்சிறுமியைக் கடத்திச்சென்று, கோவிலினுள் வைத்து, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த கொடூரம் நடைபெற்றது. குற்றஞ்சாட்டப்பட்ட கயவர்கள் அனைவரும் இந்துக்கள். அவர்கள் முஸ்லீம் பகர்வால் இனத்தவருக்குப் பாடம் கற்பிப்பதற்காக இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபட்டனராம். அங்கு செயல்பட்டுவரும் இந்துத்துவா குழுக்கள் இந்தக் கயவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்துவருவதையும் பார்க்க முடிகிறது. இக்கயவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பாஜக எம்எல்ஏ ஒருவரும் கலந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது. இப்போது அந்தப் பேர்வழி ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கத்தில் அமைச்சராகவும் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

மோடியின் ஆட்சிக்காலம் 2019இல் முடிவுக்கு வர இருக்கிறது. எனவே மீண்டும் மோடி, பாஜக அலுவலகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையெல்லாம் மீண்டும் தோண்டி எடுத்து, மக்கள் மத்தியில் கக்கினார் என்றாலோ, அவற்றை அவருடைய ஊதுகுழல்களாக மாறியுள்ள ஊடகங்கள் மீளவும் பக்கம் பக்கமாக வெளியிட்டாலோ அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை.

(தமிழில்: ச. வீரமணி)

Leave a Reply

You must be logged in to post a comment.