உடுமலை,
ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்கக்கோரி உடுமலையில் மின் வாரிய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பல ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வித சட்ட பாதுகாப்புகள் இல்லாமல் பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, தொழிலாளர்களுக்கு தினகூலியாக ரூ.380 வழங்குவது என முத்தரப்பு பேச்சுவாத்தையில் ஒப்பந்தம் காணப்பட்டது. ஆனால், இதுவரை மின்வாரியம் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் உள்ளது.இதனை கண்டித்து செவ்வாயன்று உடுமலை மின்வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் உடுமலை திட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். ஜெகதீசன், ஜெகானந்தா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஒய்வு பெற்றோர் ஊழியர் சங்கத்தின் நிர்வாகி லிங்கவேல் வாழ்த்திப் பேசினார். இதில் திராளான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.