புதுதில்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியல்ரீதியாக பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் கட்சியுடன் அமைத்திருந்த கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக பாஜக எடுத்திருக்கும் முடிவானது இந்தத்தருணத்தில் அம்மாநிலத்தில் பெரிய அளவில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்கிடும். இது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக மேற்கொண்டுவந்த அணுகுமுறையின் ஒட்டுமொத்த அரசியல் தோல்வியையே தெரிவிக்கிறது.

பாஜக – பிடிபி கூட்டணி ஆரம்பத்திலிருந்தே எவரும் ஏற்றுக்கொள்ளாத, அடிப்படையற்ற ஒன்றாகத்தான் இருந்து வந்தது. எந்தப் பிரச்சனையின்மீதும் நேருக்குநேர் இரு கட்சிகளும் இணைந்து முடிவேதும் எடுக்கமுடியாத நிலையில்தான் இந்தக்கூட்டணி இதுநாள்வரையிலும் இருந்துவந்தது. இக்கூட்டணியானது ஆட்சி அதிகாரத்தைப் பங்குபோட்டுக்கொண்ட ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகவே இருந்துவந்தது.

கடந்த மூன்றாண்டுகளில் அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் பாஜகவும் ஓர் அங்கமாகத்தான் இருந்தது. எனவே அம்மாநிலத்தில் அரசியல்நிலைமைகள் சீர்கேடடைந்திருப்பதற்கும், மக்களிடமிருந்து மிகவும் ஆழமான முறையில் ஆட்சியாளர்கள் தனிமைப்பட்டு நிற்பதற்கும் தனக்கு எதுவும் பொறுப்பு இல்லை என்று அது தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.

பாஜக, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் ஓர் கூட்டணிக் கட்சி என்ற முறையிலும், மத்தியிலும் ஆட்சி செய்கிற கட்சி என்ற முறையிலும் காஷ்மீர் மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு உறுதிமொழிகளை அளித்திருந்தது.

(1) மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் நடவடிக்கைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும்.

(2) காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் அனைத்து அரசியல் சக்திகளுடனும் ஒருங்கிணைந்தமுறையில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான அரசியல்  நடைமுறை உடனடியாகத் துவங்கப்படும்.

இவ்விரு உறுதிமொழிகளும் 2017 செப்டம்பரில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களின் தூதுக்குழு விஜயம் செய்தபின்னர் மத்திய உள்துறை அமைச்சரால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவைகளாகும். எனினும் இவ்விரு உறுதிமொழிகளுமே நிறைவேற்றப்படவில்லை. இவற்றை நிறைவேற்றிட உளமார முயற்சித்திருந்தார்களானால், நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

மத்திய பாஜக அரசாங்கம் முதலில் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்தது, பின்னர் விலக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகு சூழ்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேலும் பெரிய அளவிற்கு நிச்சயமற்றத்தன்மைக்குத் தள்ளிவிடுவதும், எந்த நிமிடத்திலும் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்திடலாம் என்கிற அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதும் மக்களிடமிருந்து மிகவும் ஆழமான முறையில் தனிமைப்பட்டிருக்கும் சூழ்நிலையில் எவ்விதத்திலும் உதவிடாது.‘ இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.