====எஸ்.ராமச்சந்திரன்===

காலை யிளம் பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிப் போல்
மோகனமாஞ் சோதி பொருநதி முறை தவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகர்!

-என்று மகாகவி பாரதி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு இந்திய புதுச்சேரியை விட்டுப் போகுமுன் “செந்தமிழ்த் தென்புதுவை” என்று சிறப்பித்துப் பாடினார். 1908 ஆம் ஆண்டு முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி புதுச்சேரியுடன் இரண்டறக் கலந்து தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமுனையாக பல அரியப் பொக்கிசங்களை அளித்து புதுச்சேரி வரலாற்றுக்குப் பெருமைச் சேர்த்தார்.

வரலாற்றுப் பின்னணி
தென் இந்தியாவில் மிகமிகச் சிறிய நிலப் பரப்புகளைக் கொண்ட புதுச்சேரி மாநிலம் இந்திய பண்பாட்டு வரலாற்றுடன் ஒப்பீட்டளவில் எந்த அளவிலும் குறைத்து மதிப்பிட முடியாத வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களோடு பின்னிப்பிணைந்திருக்கிறது புதுச்சேரி மண். தமிழகம் சேர, சோழ, பாண்டியர் ஆட்சியின் போதும் பல்லவ, விஜயநகர சாம்ராஜ்யங்களுக்குட்பட்டிருந்த போதும் புதுச்சேரியும் அப்பகுதிகளோடு இணைந்திருந்தது. அதற்கு முன்னரே சங்க இலக்கிய கால வரலாற்றுடனும் புதுச்சேரி நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்ச் சமுதாய வரலாற்றில் தமிழ்ப் பண்பாட்டோடு இணைந்திருக்கிறது.

புதுச்சேரிக்கு நெடிய வரலாறும் பண்பாட்டுப் பாரம்பரியமும் உண்டு. அதனை அரிக்கமேடு அகழ்வாய்வுகளும், வீரைவெளியனார் சங்கப் பாடல்களும் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி பாகூரில் நாளந்தா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய வடமொழிக் கல்லூரி இயங்கி வந்ததை செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் பறைசாற்றுகின்றன.

பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராட்டம்
16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் இந்தியக் கடற்கரையில் தங்கள் காலடியைப் பதிய வைத்தார்கள். அவர்கள் காலடியை ஆழப்பதிய வைத்த கடல் பகுதிகளில் புதுச்சேரிக் கடற்கரையுமுண்டு.

கி.பி 1674 ஆண்டு ஜனவரி 14ல் பிரான்சில் இருந்து பிரான்சுவா மர்த்தேன், படைவீரர்கள் மற்றும் 150 ஆண் – பெண்களுடன் புதுச்சேரியில் நுழைந்தார். அதிலிருந்து 1954 ஆண்டு நவம்பர் 1 வரை 240 ஆண்டுகள் புதுச்சேரி பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழ் கிடந்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெளியேறிய ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரேதான் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இம்மண்ணை விட்டுச் சென்றது, புதுச்சேரி விடுதலை அடைந்தது.  இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பல ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்களுக்கும்,தமிழ் – கலை இலக்கிய வராற்றின் முன்னத்தி ஏர்களாக விளங்கிய பாரதி, வ.வே.சு.ஐயர் போன்ற எழுச்சிமிகு படைப்பாளிகளுக்கும் அடைக்கலம் அளித்தது புதுச்சேரி. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றது காங்கிரஸ் இயக்கம். பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பொதுவுடைமை இயக்கம் தலைமையேற்றது. பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெருமளவில் பஞ்சாலைத் தொழிலாளர்களை திரட்டியதோடு அறிவு ஜீவிகளையும் கலை இலக்கிய வாதிகளையும் இணைத்தது. அதில் முக்கியப் பங்காற்றியது பொதுவுடைமை இயக்கமும் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களுமேயாவர்.

பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகக் கம்யூனிஸ்ட் தலைவர்களும் பங்கேற்றும் வழிகாட்டியாகவும் இருந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர் வி.பி சிந்தன் அவர்கள். மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையா அவர்களுடன் இணைந்து பணியாற்றியதும், திருபுவனை காவல் நிலையத்தை விடுதலை இயக்கத்தினர் கைப்பற்றிய நிகழ்வில் வி.பி.சிந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவருக்கும் பாவேந்தருக்கும் உள்ள தொடர்பும் அவரிடம் தமிழ் கற்றதும், சிண்டன் சிந்தனாக மாறியதும் அதை மாற்றியது பாரதிதாசன் தான் என்பதும் சுவையான தகவல்கள்.

புதுச்சேரிக்கு மகாகவி பாரதி வந்த ஒரு மாதத்திலேயே பிரிட்டிஷ் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ‘இந்தியா’ பத்திரிகை வெளிவந்தது. மேலும் பல தமிழ் சிற்றிதழ்களும், வார, நாள் இதழ்களும் இரண்டு ஏகாதிபத்தியத்தியங்களின் அடக்குமுறைகளையும், தடைகளையும் தாண்டி வெளிவந்தன.

கலை இலக்கியவாதிகளின் வேடந்தாங்கல்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பல ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்களுக்கும், தமிழ் – கலை இலக்கிய வராற்றின் முன்னத்தி ஏர்களாக விளங்கிய பாரதி, வ.வே.சு.ஐயர் போன்ற எண்ணற்ற எழுச்சிமிகு படைப்பாளிகளுக்கும் அடைக்கலம் அளித்தது புதுச்சேரி. நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் தனது இறுதி நாட்களில் புதுச்சேரியில் தங்கியிருந்தார். அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் தமிழக தென்மாவட்ட நாடகக் கலைஞர்கள், தென்னிந்திய நாடக நடிகர் சங்கத்தினர், தமிழ் திரையுலக முன்னணிக் கலைஞர்கள் புதுச்சேரிக்கு வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வங்காளத்தில் தீவிரவாதியாக இருந்து ஆன்மீகவாதியாக மாறினார் அரவிந்தர் என்பது அனைவரும் அறிந்த வரலாறு. அவரது “சாவித்திரி” எனும் காவியம் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன்மூலம் அரவிந்தர் எனும் இலக்கிய வாதியையும் நாம் அறிய முடிகிறது. அவர் பெயரில் விளங்கும் ஆசிரமம் புதுச்சேரிக்கு உலகில் உள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்களை தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றிய அன்னையால் உருவாக்கப்பட்ட “ஆரோவில்” சர்வதேச நகரமும் புதுச்சேரிக்குப் பெருமைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

புதுச்சேரியின் கலை இலக்கிய பண்பாட்டுப் பாரம்பரியத்தின் கடந்தகால வரலாறு மகாகவி பாரதியால் புதிய வீச்சைப் பெற்றது. எங்கள் வாழ்வும், வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று அறைகூவல் விடுத்த பாவேந்தரால் தொடர்ந்தது. இவைகள் பாய்ச்சிய வெளிச்சத்தில் மக்கள் கவிஞர் தமிழ் ஒளி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், புதுவைச்சிவம், கம்பதாசன், வாணிதாசன் ஆகியோர்களால் தமிழ் முற்போக்கு இலக்கிய முகாமின் கலை இலக்கியவாதிகளின் பட்டியல் நீண்டது..

தமிழ் எழுத்துலகில் அனைத்துப் பிரிவுகளிலும் தனது தனி முத்திரையைப் பதித்து நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர், வானம் வசப்படும், மானுடம் வெல்லும் ஆகிய வரலாற்று நாவல்களை அளித்த சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபஞ்சன் புதுச்சேரிக்குச் சொந்தமானவர். புதுச்சேரி மண் கலை இலக்கிய வாதிகளை அனைத்துக் காலத்திலும் தன்பால் ஈர்த்து ஆதரவளித்து வருவது நீண்ட வரலாறு. அது பாரதியில் தொடங்கி வ.வே.சு.ஐயர், சுத்தானந்த பாரதி என்று தொடர்ந்து, தற்போதும் நம்முடன் வாழ்ந்துவரும் கரிசல் இலக்கியமேதை கி.ராஜநாராயணன், வானம்பாடி இயக்க கவிஞர் இரா.மீனாட்சி, எழுத்தாளார் பா.செயப்பிரகாசம், ஆய்வறிஞர் முனைவர் க.பஞ்சாங்கம், எழுத்தாளர்.ரவிக்குமார் எனப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

செம்மலரில் பூத்த தமுஎகச                                                                                                                                                            புதுச்சேரி தமிழ்க் கலை இலக்கிய உலகத்தின் தனிப்பெருமை வாய்ந்த நகரமாகும். இந்நகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் 14ஆவது மாநாடு நடக்கவிருப்பது சிறப்பான ஒரு நிகழ்வாகும்.

கணவனைப் பறித்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்
துணியினைப் பறித்ததாலே துரோபதை சபதம் நியாயம்
மனைவியை இழந்ததாலே ராமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த நமது ஆவேசம் நியாயம் நியாயம்
உழுநிலம் பறிக்கப்பட்டால் உரிமைப் போர் முழுவதும் நியாயம்
அறுபது கோடி மக்கள் அனைத்துமே பறிக்கப்பட்டு அழுகையில் சிரித்தாயே அடி ஆத்தா இது என்ன நியாயம்

-என்ற தணிகைச் செல்வனின் கவிதை வரிகள், 1975 – 76 ஆம் ஆண்டுகள் இந்திய அரசியல் சூழல் கருத்துரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் வந்திருந்த பேராபத்தை உணர்த்துகிறது. அதை எதிர்கொள்ளவும், கருத்துரிமையைப் பாதுகாக்கவும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களான தோழர்கள் என.சங்கரய்யா, கே.முத்தையா ஆகியோரின் முன்முயற்சியிலும் செம்மலரில் எழுதி வந்த 32 தோழர்கள் இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். அமைப்பு ரீதியாகவும் தமிழ் கருத்தியல் தளத்தில் போர்க் குணத்தோடு 42 ஆண்டுகளாக இயங்கி வருகிற அமைப்பு த.மு.எ.ச. திருவண்ணாமலையில் நடைப்பெற்ற பத்தாவது மாநில மாநாட்டிலிருந்து கலைஞர்களையும் இணைத்துக் கொண்டு த.மு.எ.க.ச வாக செயல்பட்டு வருகிறது.

14வது மாநாடு
த.மு.எ.க.ச வின் 14 ஆவது மாநில மாநாடு வருகிற ஜூன் 21 – 24 நான்கு நாட்கள் நடத்திட புதுச்சேரி தயாராகிக் கொண்டிருக்கிறது. திருப்பூரில் 13 ஆவது மாநில மாநாட்டில் ‘முற்போக்குத் தமிழ் மரபை முன்னெடுப்போம், மநுதர்மத் தந்திரத்தை முறியடிப்போம்’ என்ற முழக்கத்தோடுத் தொடங்கி கடந்த மூன்றாண்டுகளில் செயலாற்றியது. சமீப காலங்களில் தமிழகத்தில் காவிமயமாக்கலும் சாதிய சக்திகளின் கட்டப் பஞ்சாயத்துகளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. உதாரணமாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுதிய நாவலுக்காக, சாதிய சக்திகளால் “எழுத்தாளன் இறந்துவிட்டான்” என்று அறிவிக்கும் மனநிலை உருவானது. கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்த தனது கட்டுரைக்காக காவிகளாலும், பரிவாரங்களாலும் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பெரியார், அம்பேத்கார் ஆகியோரின் சிலைகள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன; உடைக்கப்படுகின்றன. தமிழக அரசியல் அதிகாரத்தை காவிகளும் பரிவாரங்களும் கைப்பற்றத் துடிப்பதை அறிய முடிகிறது. எனவே தான் த.மு.எ.க.ச தனது 14 ஆவது மாநில மாநாட்டின் முழக்கமாக “சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம்” என்று முன்னெடுத்திருக்கிறது.

மாநாட்டின் தாயரிப்புப் பணிகளை கடந்த 2008 மார்ச் 18 ல் புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தொடங்கியது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமையில் 150 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணிகளைத் திட்டமிட்டது.

முன்னோட்ட நிகழ்வுகள்
மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக மைய முழக்கமான சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம் எனும் தலைப்பில் மகா கவியரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர் பிரபஞ்சன் தொடங்கி வைக்க நூற்றுக்கும் மேற்பட்ட இளம் கவிஞர்கள் பங்கேற்ற பத்து அமர்வுகள் நடைபெற்றன. அத்துணைக் கவிஞர்களும் தங்களது கவிதைகளால் மாநாட்டின் முழக்கத்திற்கு வலு சேர்த்தனர்.

தொடர் நிகழ்வாய் அண்மையில் காலம் சென்ற தமிழறிஞர், இரண்டுமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற மா.லெனின் தங்கப்பா அவர்களின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தொடங்கிவைக்க பேராசிரியர்களும், எழுத்தாளர்களும் பங்கேற்றனர்.

எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிஞர் மா.அரங்கநாதன், கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோர் குறித்த ஆவணப்படத் திரையிடல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

மாநாட்டு விளம்பரங்கள்
புதுச்சேரி நகர்ப் பகுதி முழுவதும் உள்ள சுவர்கள் த.மு.எ.க.ச வின் மாநாட்டுச் செய்திகளையும், மைய முழக்கங்களையும் முன்னிறுத்துவதோடு ஒற்றைப் பண்பாட்டை எதிர்த்து நின்ற திருவள்ளுவர், வள்ளலார், விவேகானந்தர், மகாகவி பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் உருவப் படங்களோடு அவர்களின் கருத்துகளையும் தாங்கி நிற்கிறது. இவர்களோடு புதுச்சேரியின் பெருமைமிகு படைப்பாளிகளின் ஓவியங்களும் இடம்பெற்றிருக்கின்றன. புதுச்சேரி மக்களுக்கு டிஜிட்டல் பேனர்களில் பார்த்துவந்த பழக்கமான “சுயநல விரும்பிகளின்” முகங்களுக்கு மாற்றாக எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் சுவர்களில் வண்ண ஓவியங்களாக காண்பது ஆச்சரியமாக இருந்தது. மாநாடு நெருங்க நெருங்க வண்ண வண்ண சுவரொட்டிகள் ஆட்டோக்களிலும் சுவர்களிலும் அழகு சேர்க்கவிருக்கிறது. மாநாட்டினுடைய தேவைக்காக வீடுகள் தோறும் துண்டுப் பிரசுரங்களை அளித்து தோழர்கள் நிதியைத் திரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

கலை இலக்கியத் திருவிழா நகராக புதுச்சேரி
மாநாடு வருகிற ஜூன் 21 ல் நினைவுச் சுடர்களின் பயணத்தில் தொடங்கி, எழுத்தாளர், கலைஞர்களின் பேரணி, கீழடி வரலாற்றுக் கண்காட்சி, தமிழ் சினிமா நூற்றாண்டுக் கண்காட்சி, இளவேனிலின் ஒளிப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, கலை இலக்கிய இரவு, கருத்துரிமைப் பாதுக்காப்புக் கருத்தரங்கம், “சிலைகளுக்கு மரணம் இல்லை, சிந்தனைகளுக்கு வீழ்ச்சியில்லை”, எனும் தலைப்பில் சிலைகளை வடிக்கும் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப் பட்டுள்ளன. பிரதிநிதிகள் மாநாட்டில் எழுத்தாளர், ஆய்வறிஞர்கள் ஆகியோரின் கருத்துரைகள் இடம்பெறுகின்றன.

மாநில மாநாட்டை உருது முற்போக்கு எழுத்தாளர் சங்க ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், இந்திய திரைப்பட உலகில் பல தேசிய விருதுகளைப் பெற்றவரும், பத்மபூஷன் கவிஞர் ஜாவேத் அக்தர் தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர் பிரபஞ்சன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மேலும் மாநாட்டு நிகழ்வுகளில் புதுவை முதல்வர் வி.நாராயணசாமி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், கவிஞர். வைரமுத்து, இந்து. என.ராம், எழுத்தாளர் பெருமாள் முருகன், திரை இயக்குநர் கோபி நயினார், திரைக் கலைஞர் ரோகினி, எடிட்டர் லெனின் ஆகியோரும், கருத்தாளர்களாக வ.கீதா, சுகுமாறன், பக்தவத்சலபாரதி, ஆழி செந்தில்நாதன், கரு.ஆறுமுகத்தமிழன், எம்.சிவக்குமார் ஆகியோருடன் த.மு.எ.க.ச நிர்வாகிகள் பேரா.அருணன், ச.தமிழ்ச் செல்வன், சு.வெங்கடேசன், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்தியப் பண்பாட்டுச் சூழல் கருத்துரிமைக்கு எதிராகவும் பன்முகப் பண்பாட்டைச் சிதைத்து, ஒற்றைப் பண்பாட்டை வலிந்துத் திணித்து வரும் வலதுசாரி அரசியலால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இம்மாநாடு அவைகளைக் கருத்துத் தளத்தில் எதிர்கொள்ளவும், களத்தில் நின்று போராடவும் உத்வேகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை..

புதுச்சேரி எதிர்வரும் நான்கு நாட்களில் கலை இலக்கியத் திருவிழா நகராக மாறும். தமிழ் கலை இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கட்டுரையாளர்: 
செயலாளர், வரவேற்புக்குழு,
புதுச்சேரி.

Leave A Reply

%d bloggers like this: