கோவை,
ஊராட்சி செயலர்களுக்கான ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கோவையில் ஊரக வளர்ச்சித்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் செவ்வாயன்று சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அமைச்சர் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசு உறுதியளித்தது. இதன்படி அரசு தரப்பில் ஏற்கப்பட்ட கோரிக்கைகளை அரசாணையாக வெளியிட வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பான வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று அரசின் கவனஈர்ப்பிற்காக சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களில் உள்ள ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி செயலர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை 560 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், செயலாளர் முத்துராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: