====முனைவர் தி.ராஜ் பிரவீன்=====
கடந்த நில ஆண்டுகளாக கேரளாவில் இடதுசாரி ஆட்சி பொறுப்புக்கு வந்தபின் விவசாயம் மற்றும் பல வளர்ச்சி துறைகள், திட்டங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக சிறு, குறு விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், நகர்ப்புற குடும்ப பெண்களுக்கு என்று பல நலத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, அவர்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழலில் மீண்டும் வேளாண்மையில் பெண்களை இணைத்து இயற்கை முறையில் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கேரளாவின் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தும் பல வேளாண் சார்ந்த நலத்திட்டங்கள் அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களிடம் ஒரு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் வேளாண்மை நோக்கி கொண்டு வரும் புதிய முயற்சிகள்:
கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்சம் மற்றும் வேங்கனூர் பஞ்சாயத்துக்கள் சுற்றுலா தொழில் துறை மற்றும் வேளாண்மை, மின் பிடிப்பினை நம்பியிருக்கிறது. இந்த இரண்டு பஞ்சாயத்துகளிலும் விவசாயிகள் பெரும்பாலானோர் ஆண்களே. வாழை, மரவள்ளி கிழங்கு மற்றும் பல காய்கறிகளை இங்கு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. இரசாயன இடு பொருட்களை நம்பியே இங்கு வேளாண்மை நடந்து வந்தது. கடந்த வருடம் முதல் திருவனந்தபுரத்தை அடிப்படையாக கொண்ட தனல் என்ற தொண்டு நிறுவனம் இந்த இரண்டு பஞ்சாயத்துக்களில் உள்ள பெண்விவசாயிகளுடன் பணிபுரிய துவங்கியது.

உள்ளூர் பெண்களே குழுக்களுடன் இணைந்து பணிபுரிந்த இந்த தொண்டு நிறுவனம் பெண்களுக்கு தேங்காய் ஓட்டில் விளை பொருட்கள், காகித விளை பொருட்கள், உபயோகப்படாத துணி, சணல் போன்றவற்றில் விளை பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகளை வழங்கி வந்தது இருப்பினும் சில பெண் குழுக்கள் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்ட அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கிராம தலைவர்களுடன் இணைந்து கிராமத்தில் உள்ள நில உரிமையாளர்களை சந்தித்து அவர்கள் வீணாக வைத்திருக்கும் நிலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை துவங்கினர். குறிப்பாக தென்னை தோப்புகளில், தென்னைக்கு இடையே உள்ள இடைவெளியில் சாகுபடி பணிகள் துவங்கப்பட்டது. பல நடைமுறை பிரச்சனைகளை இந்த சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் போது பெண்கள் குழு சந்தித்து பல இடங்களில் போதுமான தண்ணீர், பசுந்தாள் மற்றும் இயற்கை உரங்கள் கிடைக்கவில்லை.

இத்தகைய சூழலை சந்தித்து மீண்டும் மண்ணின் வளத்தை பெருக்கச் செய்ய மகளிருக்கு உயிர் பல் வகைமை, மண் மற்றும் பயிர்கள் சாகுபடிக்கு தேவைப்படும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டது. ஒரு வருட காலத்தில் பெண்கள் இணைந்து தென்னை தோப்புகள் யாவும் பல்வேறு காய்கறிகள், கிழங்குகள் மற்றும் வாழை ஆகியவற்றை சாகுபடி செய்து உயிர் பல வகைமை தோட்டமாக தென்னை தோட்டங்களை மாற்றினர். இதனால் தென்னை தோட்டங்களில் தேங்காய் உற்பத்தியும் அதிகரித்தது. நில உரிமையாளர்கள் இந்த மாற்றத்தை கண்டு மகிழ்ந்தனர். மேலும் பல விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இந்த தோட்டங்களை பார்வையிட்டு பணி செய்யும் மகளிருக்கு ஊக்கம் தந்தனர். பல நிலை உரிமையாளர்களை தங்களை இப்புதிய செயல்திட்டத்தில் இணைத்து கொண்டனர்.

முதலில் பெண் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அருகில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்து வந்தனர். சிலர் விளை பொருட்களை அருகில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்தனர். பொதுவாக உற்பத்தி அதிகரிக்க விளைப்பொருட்களுக்கு தனி சந்தை அமைக்கும் நோக்கம் வலு பெற்றது. எனவே திருவனந்தபுரத்தில் உள்ள இயற்கை அங்காடிகளில் வைத்து தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

இவ்வாறு கேரளாவில் நிலமில்லாத பண்ணை மகளிர் குழுவாக இணைந்து இயற்கை வேளாண் சாகுபடியில் ஈடுபட்டு அதிக லாபம் பெறுகின்றனர். இதனால் நில உடமையாளர்கள், நுகர்வோருக்கும் அதிக பயன் கிடைக்கிறது. மேலும் தங்களின் வீட்டு பொறுப்புகளையும் செய்துவிட்டு கூடுதல் வருமானத்தையும் பெற்று இவ்விரு பஞ்சாயத்துக்களில் உள்ள தோட்டக்கலை நிலங்களில் பல்வகை பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து விற்பனை செய்ய உதவிய கேரளாவின் வேளாண் முயற்சிகள் பாராட்டுக்குரியது. நிலமில்லாத பெண் விவசாயிகளை இயற்கை சாகுபடி பணிகளில் பங்கேற்க செய்து வெற்றிகரமாக சாகுபடி பணிகளை விளை நிலத்தில் மேற்கொண்டு நிலவுடைமையாளர்களுக்கு உற்பத்தி பெருக்கம், நுகர்வோருக்கு இயற்கை வேளாண் விளை பொருட்கள் விற்பனை வாயிலாக அனைத்து பிரிவினரும் பங்கேற்கச் செய்யும் வேளாண் முயற்சிகள் பல மாநிலங்களில் பின்பற்றப்படும் போது நம்மால் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள், குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள், நுகர்வோருக்கு தேவைப்படும் இயற்கை விவசாய பொருட்கள் உற்பத்தி வாயிலாக கேரளா மாநிலம் நமது தேசத்தின் புதிய வேளாண் செயல் திட்டங்கள் திட்டமிடுதல் மற்றும் வெற்றிகரமான செயல்பாடுகள் காரணமாக வழி காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரை:
உதவிப் பேராசிரியர்
வேளாண்மை விரிவாக்கத்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Leave a Reply

You must be logged in to post a comment.