திருப்பூர்,
குன்னத்தூர் பேரூராட்சி 15ஆவது வார்டு சந்தையப்பாளையத்தின் ஒரு பகுதியில் உள்ள பொன்காளியம்மன் நகருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின்சார்பில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஊத்துக்குளி தாலுகா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பன்னீர்செல்வம், சின்னசாமி, சாவித்திரி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் திங்களன்று காலை குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து செயல் அலுவலரைச் சந்தித்து மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: பொன்காளியம்மன் நகர் பகுதியில் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக 54 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்ட இந்த குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. அதேசமயம் பேரூராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு பொது குடிநீர் குழாய் மற்றும் சொத்துவரி செய்து தரப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பிற்கு காங்கி ரீட் சாலை வசதி அமைத்துத் தரப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்து கொள்கிறது. இதனால் நோய் தொற்றுகளும், சேறும், சகதியும் ஏற்பட்டு தெருக்களை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இது தொடர்பாக மனுநீதி நாள் முகாமில் மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே சந்தையம்பாளையத்தில் இருந்து பொன்காளியம்மன் நகர் பகுதிக்கு சாலை வசதி செய்து தருவதுடன், இலவச கழிவறைகளையும் கட்டிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த செயல் அலுவலர் நிர்வாக ரீதியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: