====மதுக்கூர் இராமலிங்கம்====
தமிழ் கூறு நல்லுலகில் மனசாட்சியாக விளங்குகிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாடு புதுச்சேரியில் ஜூன் 21 ஆம் தேதி துவங்கி 24 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

மகாகவி பாரதியின் குயில் தோப்பில், பாவேந்தர் பாரதிதாசனும், எழுச்சிக் கவிஞர் தமிழ்ஒளியும் பாட்டு நெசவு செய்த மண்ணில் கலை இலக்கிய திருவிழாவாக, பண்பாட்டுப் பெருவிழாவாக, படைப்பாளர்கள், கலைஞர்கள், பண்பாட்டுப் போராளிகளின் பெரும் கூடலாக நடைபெற உள்ளது இந்த மாநாடு.

ஜனநாயக ஒளியை சர்வாதிகார இருள் மறைக்க முயன்ற போது ஒளிக்கீற்றாக மதுரையில் உதயமானது தமுஎகச. கருத்துரிமைக்காக கருக்கொண்ட இந்த அமைப்பு , தன்னுடைய இலக்கில் தடம் மாறாமல், தடம் பதித்து முன்னேறி வருகிறது. கடந்த மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்ற போது, ‘முற்போக்கு தமிழ் மரபை முன்னெடுப்போம், மநுதர்ம தந்திரத்தை முறியடிப்போம்’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. அதன் நீட்சியாக இந்த மாநாட்டின் மூல முழக்கமாக, ‘சாதியற்ற தமிழர் – காவியற்ற தமிழகம்’ முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சங்கம் நிகழ்த்தியுள்ள பெரும் பணி தமிழ்ச் சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமையை காலில் போட்டு நசுக்க மதவெறி, சாதிவெறி சக்திகள் மூர்க்கமாக முன்னுக்கு வந்த காலம் இது. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய நாவலை முன்வைத்து, மதவெறியர்களின் தூண்டுதலோடு சாதி ஆதிக்க சக்திகள் சதிராடிய நிலையில், அந்த எழுத்தாளனே தாம் இறந்துவிட்டதாக சுயமரண பிரகடனம் செய்த சூழலில் கருத்துரிமைக்கு ஆதரவாக களம் இறங்கியது தமுஎகச. படைப்பாளிகளின் மனசாட்சியை தட்டி எழுப்பியது. படைப்பில் வேறுபாடு இருந்தால், விவாதிக்கலாம், எழுதுகோலை முறித்துப் போடலாகாது என பொது வெளியிலும் வாதாடியது இந்த அமைப்பு.

நீதிமன்றத்தில் நெடிய படிக்கட்டுகளில் ஏறி, எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக மட்டுமல்ல, எழுத்தாளர்களின் கருத்துரிமைக்கு ஆதரவான தீர்ப்பை பெற்றுத் தந்தது தமுஎகச என்கிற பெருமிதத்துடன் புதுவையில் கூடுகிறோம். புலியூர் முருகேசன், துரை.குணா போன்ற படைப்பாளர்கள் அச்சுறுத்தலின் பிடிக்கு ஆளான போது, அவர்களுக்கு ஆதரவாக நின்றது தமுஎகச.

ஆண்டாளை இழிவுபடுத்தி விட்டதாக, பொய்யாக புனைந்துரைத்து, கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக எழுப்பப்பட்ட வெறிக் கூச்சல்களுக்கு மத்தியில் அவரின் தோள்பற்றி நின்று, படைப்புச் சுதந்திரத்தை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என சங்க நாதம் செய்தது சங்கம்.
தாலி குறித்து விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்னாலேயே புதிய தலைமுறை அலுவலகத்தை தாக்கி வெறியாட்டம் போட்டது இந்துத்துவா கூட்டம். அப்போதும், விவாத உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று பத்திரிகையாளர்களை, படைப்பாளர்களை ஒன்றிணைத்தது தமுஎகச.

அண்மையில், எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை அருவருக்கத்தக்க முறையில் சித்தரித்ததை எதிர்த்து பல போராட்டங்களை ஒருங்கிணைத்ததிலும் தமுஎகசவுக்கு ஒரு பங்கு உண்டு.

கடந்த மூன்றாண்டுகளில் சென்னை, நெல்லை, மதுரை என அடுத்தடுத்து நடைபெற்ற தமிழர் உரிமை மாநாடுகள் இந்துத்துவா சக்திகளின் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக நடைபெற்ற தற்காப்பு யுத்தங்கள் ஆகும்.

ஆர்எஸ்எஸ் என்கிற பாசிச பாணி நாசகர அமைப்பின் அரசியல் முகமான பாஜக மத்திய ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, பன்முகப் பண்பாட்டுக்கு எதிராகவும், தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு எதிராகவும் கொடும் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை வம்படியாக வாயில் திணிக்கிற வேலை மும்முரமாக நடைபெறுகிறது.அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியில்தான் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கட்டாயம். அரசு விளம்பரங்கள், ஏடிஎம் எந்திரங்கள், மத்திய அரசு படிவங்கள், மைல்கற்கள் என அனைத்திலும் இந்திமயம் என மொழித் திணிப்பு மூர்க்கமானது.

மாட்டிறைச்சிக்கு தடை என்கிற பெயரில் உணவு உரிமை கூட கேள்விக்குள்ளானது. கலாச்சாரக் காவலர்கள் என்று கூறிக் கொண்ட கயவர்களால் காதலர் தினம் கொண்டாடுவது கூட பயங்கரவாதச் செயலாக மாற்றப்பட்டது.மாட்டோடு மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு நிகழ்வை நடத்தக் கூட மத்திய அரசோடு, தமிழர்கள் பெரும் மல்லுக்கட்டை நடத்த வேண்டியிருந்தது.
நீட் தேர்வு என்கிற பெயரால் மாநிலங்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு மாணவச் செல்வங்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர்.

தமிழகத்தின் இயற்கையைச் சூறையாட மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோ கெமிக்கல் மண்டலம், எட்டுவழிச்சாலை என அடுத்தடுத்து கொடும் தாக்குதல்கள்.
இந்தப் பின்னணியில் தமுஎகச நடத்திய தமிழர் உரிமை மாநாடுகள் தமிழகத்தின் மரபையும் உரிமையையும் பெரும் குரலெடுத்து பேசியது.காவி படிய அனுமதிக்காத தமிழ் நிலத்தின் மீது மத்திய ஆட்சியாளர்கள் எந்தளவுக்கு வன்மமும், வஞ்சகமும் கொண்டுள்ளனர் என்பதற்கு கீழடி ஆய்வு முடக்கப்பட்டது ஒரு சத்தியச் சான்றாகும். தமிழர் தம் நாகரிகத்தையும், வரலாற்றுப் பெருமையையும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக அவர்கள் பார்க்க மறுக்கின்றனர். மாறாக, தாங்கள் திணிக்க முயலும் ஒற்றைப் பண்பாட்டிற்கு எதிராக தமிழ் மரபு திமிறிக் கொண்டு நிற்கிறதே என்கிற ஆத்திரத்தில் கீழடி ஆய்வின் மீது, மண் அள்ளிப் போட்டார்கள். பெருமத நோய் பீடித்திராத, சாதிச் சழக்கு வேர்பிடிக்காத, பெண்களைப் பெரிதும் போற்றுகிற ஒரு கூட்டு வாழ்க்கையை தமிழ்ச் சமூகம் வாழ்ந்திருக்கிறது என்கிற உண்மை மண்ணில் இருந்து வெடித்து வெளி வருவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அதிகாரத்தின் கால்களால் உண்மையை உதைத்துப் புதைக்க முயன்றார்கள். அப்போதெல்லாம், கீழடி மண்ணெடுத்து தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழ்கிற தமிழர்களை உசுப்பிய இயக்கம் தமுஎகச. வரலாற்றை மீட்டெடுக்கிற போராட்டத்தில் ஒருபோதும், பின் வாங்க மாட்டோம் என்று சூளுரைத்து புதுவையில் கூடுகிறது கருத்துரிமை காப்பாளர்களின் மாநாடு.

மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவும், ஆணவக் கொலைகளை தடுத்திட சட்டம் இயற்றவும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் என பண்பாட்டு, கலை, இலக்கிய வரம்புக்குள் நின்று கொண்டு தமுஎகச நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை.அனுபவச் செறிவோடும், எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கமே நிற்போம் என்கிற செருக்கோடும், அணை போட முடியாத ஆர்வப் பெருக்கோடும், புதுவையில் கூடுகிற படைப்பாளிகள், கலைஞர்கள், பண்பாட்டுப் போராளிகளின் பெருங்கூடல் திசைகள் தோறும் தீபங்களை ஏற்றி வைக்கும்.
காவியற்ற தமிழகமும் , சாதியற்ற தமிழரும் வெறும் வார்த்தைகள் அல்ல. காலம் எனும் திரைச்சீலையில் வரைய வேண்டிய வண்ண ஓவியம்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவம் வழிகாட்ட, யாயும் யாயும் யாரென அறியாமல் வருவதே காதல் என்கிற சங்க கால பெருநெறியை பின்பற்ற, எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கிற தாயுமானவரின் காவியற்ற சிந்தனையை முன்னெடுக்க, வாடிய பயிரை கண்டபோது வாடி இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாக்க, தமிழ் மக்கள் சந்திக்கிற அத்தனை பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க கூடுகிற மாநாட்டிற்கு திரளட்டும் வெள்ளம் போல் தமிழர் கூட்டம். பாவேந்தர், தமிழ்ஒளி மண்ணில் கேட்கட்டும் காலத்தின் குரல்.

கட்டுரையாளர்:தமுஎகச மாநில துணைத் தலைவர்

Leave a Reply

You must be logged in to post a comment.