திருப்பூர்,
பிளஸ்-1 சிறப்பு துணைதேர்வுக்கு இன்று தட்கல் முறையில் விண்ணபிக்கலாம் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு கடந்த மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறதாவர்கள் மற்றும் தேர்வு எழுத வராதவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல் தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி கூறியதாவது: தட்கல் திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று (19ம் தேதி) விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ்-1 தேர்வை எழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வு எழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டையும் விண்ணப்பத்தை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ஒரு பாடத்திற்கு ரூ.50 இதர கட்டணமாக ரூ.35, கூடுதல் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 மற்றும் பதிவு கட்டணமாக ரூ.50 பணமாக செலுத்த வேண்டும். தட்கலில் விண்ணப்பிப்பவர்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் தேர்வு எழுதமுடியும். தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.