தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரிப்பதே முறையானது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் 100நாட்களாக அமைதியான வழியில் போராடினர்.இதைத்தொடர்ந்து போராட்டத்தின் 100வது நாளான மே 22 அன்று போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க பேரணியாக சென்றனர். பேரணியை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மே 23ம் தேதி உயிரிழந்தவர்களின் உறவினர் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையின் முன் திரண்டனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் அரசு கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு என்பது, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசாங்கம் உண்மை நிலவரங்களை தெரிவிக்க மறுத்து வருவதால் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிப்பதே முறையாக இருக்கும் என தெரிவித்தார். எனவே, இந்த விஷயம் தொடர்பாக மனுதாரர் சி.பி.ஐ.-ஐ அணுகலாம் என்றும் கூறினார்.

அதேசமயம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டு  விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: