திருப்பூர்,
குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வுகாணக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொடுவாய், வினோபா நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக முறையாக குடிநீர் விநியோகம் நடைபெறுவதில்லை. மாதம் ஒரு முறை மட்டுமே, அதுவும் ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என்ற அளவில் மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுவதால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவசாமி, கொடுவாய் கிளைச் செயலாளர் குமார் மற்றும் கட்சி ஊழியர்கள், அப்பகுதி பொதுமக்களுடன் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஊராட்சி ஒன்றிய செயலரிடம் மேற்கண்ட பகுதிகளில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முறையிட்டு தீர்வு காண வலியுறுத்தினர். இதைக் கேட்டறிந்த ஒன்றிய செயலர் செவ்வாயன்று இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து, குடிநீர் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: