திருப்பூர்,
காங்கேயம் புத்தகக்களம் சார்பில் நான்காவது காங்கேயம் புத்தகத் திருவிழா ஜூலை 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான கலை இலக்கியப் போட்டிகள் ஞாயிறன்று நடைபெற்றது.

இப்போட்டிகளில் மாணவ, மாணவிகள் 800 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.காங்கேயம் சென்னிமலை சாலை ஸ்ரீஹால் அரங்கில் ஜூலை 1 முதல் 8ஆம் தேதி முடிய காங்கேயம் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காங்கேயம் அரசுப் பள்ளியில் ஞாயிறன்று 1 முதல் 5ஆம் வகுப்பு வரை, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மற்றும் 12ஆம் வகுப்பிற்கு மேல் என நான்கு பிரிவுகளாக ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் காங்கேயம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் காலை முதலே ஆர்வமுடன் அரசுப் பள்ளி வளாகத்தில் திரண்டனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் காளியப்பன், நத்தக்காட்டுவலசு ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் செ.கு.செல்வராஜ்,படியூர் ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் கி.வெங்கடேஸ்வரன், ஆசிரியர்கள் பிரபு செபாஸ்டியன், சசிகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காங்கயம் பொறுப்பாளர் தங்கவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

இப்போட்டிகளில் மொத்தம் 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுவோருக்கு புத்தகக் கண்காட்சி அரங்கில் ஜூலை 6ஆம் தேதி அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி முன்னிலையில் பரிசு வழங்கப்படும் என ஜாண்கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.