ஒகேனக்கல்,
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்ததால் கபினி அணையில் இருந்து முதலில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 35 ஆயிரம் கன அடி வரை நீர் திறப்பு அதிகரிக்கப் பட்டது. தற்போது மழை குறைந்து விட்டதால் கபினி அணையில் இருந்து வெறும் 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

3 நாட்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஞாயிறன்று (ஜூன் 17) அதிகாலை 12.30 மணிக்கு தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. பின்னர் அந்த தண்ணீர் அதிகாலை 3 மணிக்கு ஒகேனக்கல் வந்தது. பிற்பகலில் மேட்டூர் அணையை அடைந்தது. பிலிகுண்டுலுவில் தண்ணீர் அளவை மத்திய நீர்பாசன அதிகாரிகள் தொடர்ந்து கணக்கெடுத்து வருகிறார்கள். காலை முதல் இரவு வரை 28 ஆயிரம் கனஅடி முதல் 32 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திங்களன்று (ஜூன் 18) நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தொடர்ந்து 2-வது நாளாகவும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும்,
பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பரிசல் ஓட்டிகள் பரிசல் களை இயக்காமல் அவற்றை கவிழ்த்து வைத்து இருந்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டமும் மிகக் குறைவாக காணப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: