திருப்பூர்,
திருப்பூரில் அராஜகத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் அனைத்து கட்சிகள் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் மாநகர காவல் ஆணையர் மனோகரன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், திமுக மாநகர செயலாளர் நாகராஜன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.ரவி, பி.ஆர்.நடராஜன், ரவிச்சந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாநகரத்தில் இந்துமுன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து அத்துமீறல்களையும், அராஜக செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும்,காணாமலும் இருந்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் மாநகரில் வேண்டுமென்றே மோதலை உருவாக்கும் நோக்கோடு இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையின்போது (ஜூன் 15) மசூதிகள் இருக்கும் இடங்களில் இந்துமுன்னணியினர் தங்களது கொடிகளை கட்டி வைத்தனர்.மேலும், கடந்த ஜூன் 17 ஆம் தேதி கொடியேற்று விழா என்கிற பெயரில் சாலைகளில் கொடியேற்றியும், வன்முறையை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பியபடி இருசக்கர வாகனங்களில் சென்றும் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இத்தகைய அராஜகங்கள் தொடர்பாக காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்து முன்னணியினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

இதன் உச்சகட்டமாக திருப்பூர் மாநகர் 23 ஆவது வார்டு கோல்டன் நகர் பகுதியில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிக்கம்பங்களை இரவோடு, இரவாக வெட்டி சாய்த்துள்ளனர். இதன்பின் அவ்விடத்தில் கடந்த ஜூன் 17ஆம் தேதி இந்து முன்னணியினர் அவர்களது கொடிக்கம்பத்தையும், போர்டுகளையும் வைத்து கொடியேற்ற ஏற்பாடு செய்திருந்தனர். இதுதொடர்பாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகளும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பின் அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, இந்து முன்னணியினர் கொடி ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து போக செய்தனர்.

இந்நிலையில் சுமார் 12 மணியளவில் இந்து முன்னணியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு வந்து கொடியேற்ற முயன்றனர். மேலும், அங்கு பாதுகாப்பிற்கு இருந்த காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி, தள்ளிவிட்டு அராஜகமான முறையில் கொடியேற்றினர். இதை தட்டிகேட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி மாரிப்பாண்டி என்பவரை இந்து முன்னணியை சேர்ந்த மோகன் விக்கி அருண், சந்தோஷ் மற்றும் மேலும் சரமாரியாக தாக்கினர். இதில்படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் கண்முன்னே நடந்த இந்த அராஜத்தை தட்டிக்கேட்டவும், தடுக்கவும் இயலாத கையறு நிலையில் காவல்துறை இருந்தது மிக, மிக கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறு, திருப்பூர் மாநகர காவல்துறை ஒருதலைபட்சமாக இருந்து வருகின்றது.

இந்து முன்னணியினர் அனுமதியே இல்லாமல் அராஜகமான முறையில் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் பாதுகாப்பு தருவது, மற்ற கட்சிகள் நிகழ்ச்சிகள் நடத்தினால் தொடர்ந்து தடை செய்வதும் நடந்து வருகின்றது. எனவே, இந்த வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளையும் கடமைகளையும் ஆற்றுவதற்கும், மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்வதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: