திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் வேலை செய்யும் தினக்கூலி, ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தை உள்ளாட்சித்துறை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி, உடுமலை, பல்லடம், தாராபுரம், வெள்ளகோவில், காங்கேயம் நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிர்ணயித்து மாநில அரசால் அரசாணை அறிவிக்கப்பட்டது. அந்த அரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்க அரசுத்தரப்பில் உத்தரவிட்டும், பலமுறை சங்கத்தின் சார்பில் மனுக் கொடுத்தும் இன்னும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. எனவே மேற்படி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஐந்து நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முக்குகவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதுடன், மாதந்தோறும் பிடித்தம் செய்யும் பி.எப்., இஎஸ்ஐ ரசீதுகளையும், சம்பள ரசீதையும் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் வேலை செய்யும் குடிநீர் பணியாளர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியமும், நிலுவைத் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. ஊராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குநரும் இதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் இதுவரை ஊதிய உயர்வு வழங்காதநிலை தொடர்கிறது.

எனவே மேற்படி மூன்று கோரிக்கைகள் மீதும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிஐடியு சார்பில் வலியுறுத்தி திங்களன்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், நிர்வாகிகள் அ.ஈஸ்வரமூர்த்தி, பி.பழனிசாமி, உடுமலை தண்டபாணி ஆகியோர் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உறுதி கூறினார். இதைத்தொடர்ந்து ஊராட்சிஉதவி இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை அலுவலரிடமும் மேற்படி கோரிக்கை மனுவை அளித்தும் அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.